Published:Updated:

`இலவசம் இல்ல; எக்ஸ்ட்ரா காசு கொடுத்து டிக்கெட் எடுத்தோம்’-சிறப்பு ரயில் பயணத் தொழிலாளர்கள் புலம்பல்

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

`குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, உணவு இல்லை. எப்படியான சூழ்நிலையாக இருந்தால் என்ன நாங்கள் வீட்டுக்குப் போகவேண்டுமே?' எனப் புலம்புகின்றனர் தொழிலாளர்கள்.

இங்க எதுவும் இலவசம் இல்ல…. கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் வாங்கிதான் எங்க சொந்த ஊருக்கு வந்திருக்கோம் என ஆதங்கப்படுகின்றனர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். குஜராத்தின் சூரத் நகரில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். இதையடுத்து பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்குச் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில் கட்டணம் கூடுதலாக இருந்ததாகவும் அத்தியாவசியத் தேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் ரயிலில் பயணித்த தொழிலாளர்கள்.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

நிஷாந்த் ராஜ்புத் என்ற தொழிலாளர் பேசுகையில், ``நான் சூரத்திலிருந்து பாட்னாவுக்கு வந்தேன். ரயில் டிக்கெட் ரூ.715. எங்களிடம் 725 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்கு முன்பு 650 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பயணம் செய்தோம். இப்போது எங்களிடம் காசே இல்லை. கூடுதலாகப் பணம் கொடுத்துப் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

`ஒரே பில்லில் ரூ.95,000; 52,000 ரூபாய்க்கு மதுவிற்பனை!’ - ரூ.45 கோடி வசூல் செய்த கர்நாடகா

இந்தச் சிறப்பு ரயிலில் எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்துகொடுக்கவில்லை. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, உணவு இல்லை. எப்படியான சூழ்நிலையாக இருந்தால் என்ன, நாங்கள் வீட்டுக்குப் போகவேண்டுமே? நடந்து போனாலும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கப்போவதில்லை. எத்தனை நாள்களுக்கு இங்கு தங்கியிருப்பது? நிறைய பிரச்னைகள் இருக்கிறது. நாங்கள் வீட்டுக்குச் சென்றால் குறைந்தபட்சம் பசியால் இறக்க மாட்டோம். இங்கு நாங்கள் கொரோனா வைரஸால் இறக்கலாம் இல்லை உயிர்பிழைக்கலாம். ஆனால் நிச்சயமாகப் பசியால் இறந்துவிடுவோம்.

ரயில் டிக்கெட்
ரயில் டிக்கெட்

நிறைய மக்களால் காசு கொடுத்து டிக்கெட் வாங்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் நடந்தே செல்கிறார்கள். அவர்களிடம் எந்த வசதிகளும் இல்லை. அரசு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும்.

எங்களிடம் எதோ கொஞ்சம் பணம் இருந்ததால் ரூ.700 கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டோம். ஆயிரம் ரூபாய்க்கு இந்த டிக்கெட்டை விற்பனை செய்திருந்தாலும் நாங்கள் வாங்கியிருப்போம். ஆனால் இங்கு நிறைய பேர் 1000 கிலோமீட்டர்களை குழந்தைகளுடன், பெண்களுடனும் கடந்து செல்கின்றனர். சிலருக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. அவர்கள் உங்களிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. உணவுதான் கேட்கிறார்கள்” என்றார்.

புலம்பெயர்த் தொழிலாளர்கள்
புலம்பெயர்த் தொழிலாளர்கள்

அரசாங்கம் இலவசமாக அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் ராகேஷ் குமார், நான் கலெக்டர் ஆபீஸ் போய் 725 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினேன். எங்களுக்கு எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. ஸ்கீரினிங் சென்டருக்கு மதியம் 3 மணிக்கு அழைத்துச் சென்றனர். ஒரு பாட்டில் தண்ணீரோடு பயணமானேன். ரயில்வே ஊழியர்களிடம் உணவு கிடைக்குமா என்று கேட்டேன். `நானே இன்னும் சாப்பிடவில்லை. உங்களுக்கான உணவை நீங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் ’ என்றார். அரசாங்கம் இலவசம் என்கிறது இங்கு எதுவும் இலவசம் இல்லை. இந்தச் சிறிய பாட்டில் தண்ணீரைக் கொண்டுதான் இரவெல்லாம் நான் உயிர்பிழைத்தேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு