Published:Updated:

"உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறோம்"- கேரள வெள்ளத்தால் கண்ணீர்வடிக்கும் தாய்

சத்யா கோபாலன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால், அந்தப் பகுதியைச் சுற்றிலும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரள நிலச்சரிவு
கேரள நிலச்சரிவு

கேரளாவில், கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின் சுவடுகளே இன்னும் மாறாமல் உள்ள நிலையில், இந்த வருடம் மீண்டும் ஒரு பெருவெள்ளம் மாநிலத்தை மூழ்கடித்துள்ளது. அம்மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
வெள்ளம்

தென்மேற்குப் பருவமழையினால், மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள் அதிக சேதத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, கேரளாவின் வயநாடு மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் மேடான இடங்களிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் மெப்படி என்ற நகரில் உள்ள புதுமலா பகுதியில், நேற்று மாலை 5:30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த கோயில், மசூதி, வீடுகள், கட்டடங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. 50 பேர் வரையில் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், நான்கு உடல்கள் மட்டுமே தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளன.

கேரள வெள்ளம்
கேரள வெள்ளம்
ANI

மெப்படி நகரில் உள்ள பாலத்தில் நின்றிருந்த மூன்று கார்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. காருக்குள் யாரும் இருக்கிறார்களா என்ற தகவலும் இன்னும் வெளியாகவில்லை. மலைப்பகுதிகளில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

24.74 சென்டிமீட்டர் மழை; சாலைகள் துண்டிப்பு! - வெள்ளத்தால் சூழப்பட்ட மூணார்

`` நாங்கள் வீட்டில் இருக்கும்போது பெரிய சத்தம் கேட்டது. ஓடிவந்து வெளியில் பார்த்தபோது, அருகிலிருந்த இடங்கள், கட்டடங்கள் அனைத்தும் கீழே சரிந்து விழுந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்ததும், என் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். தற்போது, முகாம்களில் தங்கியுள்ளோம். எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த பலரை முகாம்களில் காணவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை” என்று நிலச்சரிவிலிருந்து மீண்ட ஒரு தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அச்சத்தில் கேரளப் பெண்மணி
அச்சத்தில் கேரளப் பெண்மணி
Mathrubhumi

மலைப்பகுதிகளில் வேலை செய்துவந்த தொழிலாளர்களும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமுக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Photo & News Credits : Mathrubhumi