Published:Updated:

`சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளோம்!’ - பிரதமர் மோடி நம்பிக்கை

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் நான்குகட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் முடிந்து தற்போது Unlock 1 அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதில் தொழில்துறை கூட்டமைப்பு தொடர்பாகவும், ஊரடங்குக்குப் பிறகு முதன்முறையாக இந்தியப் பொருளாதாரம் பற்றியும் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ``கொரோனா நேரத்தில் நிகழும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முறையாக உள்ளன. `வளர்ச்சியைத் திரும்பப் பெறுதல்’ என்ற கொள்கைக்கு முன்னுரிமை அளித்த அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகள். நாம் நிச்சயமாக நாட்டின் வளர்ச்சியை விரைந்து திரும்பப் பெறுவோம். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுதான் அரசின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருக்கும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் லாக்டௌனில் இருந்து அன்லாக் 1-க்கு நகர்ந்துள்ளோம். இதனால் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நம் பாதை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இந்தியாவின் திறன்கள், நெருக்கடி மேலாண்மை, இந்தியர்களின் கண்டுபிடிப்பு மற்றும் விவசாயிகள், தொழில்முனைவோர்கள் ஆகியோரை நான் நம்புகிறேன். அதேபோல் இந்தியா அதன் பழைய வளர்ச்சியை நிச்சயம் அடையும். ஒருபுறம் மக்களின் உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டு மறுபுறம் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும். எப்போதுமே மக்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களைத்தான் அரசு கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தத் தொழிலாளர் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். தற்சார்பு இந்தியாதான் நம்முன் இருக்கும் ஒரே வழி. விவசாயிகள் தங்கள் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். வேளாண் பொருள்களை மின்னணு முறையிலும் விற்பனை செய்யலாம். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு பெரும் உதவிக்கரமாக இருக்கின்றன. இன்னும் 3 மாதத்தில் 3 லட்சம் முழு மருத்துவ கவச உடைகளை ஒரேநாளில் உற்பத்தி செய்யும் பணியை இந்தியா தொடங்கிவிடும்.

`என் செயலில் குறைபாடு இருக்கலாம்.. ஆனால்?’ - நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம்

நாம் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது தைரியமான முடிவுகளை எடுப்பது மற்றும் அதை முறையாகச் செயல்படுத்துவது. முதலீடு மற்றும் வணிகத்துக்குச் சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

காலத்தின் தேவை என்னவென்றால் அதிகமான தயாரிப்புகள் மேட் இன் இந்தியாவாக இருக்க வேண்டும். ஆனால், அவை உலகத்துக்காக உருவாக்கப்பட வேண்டும். இறக்குமதியைக் குறைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல கருத்துகளை வளர்த்துக்கொள்ளுங்கள், பெரிதாகச் சிந்தியுங்கள், நாம் அனைவரும் இணைந்து தன்னம்பிக்கையான இந்தியாவை உருவாக்குவோம்'' என்றார் பிரதமர் மோடி.

அடுத்த கட்டுரைக்கு