Published:Updated:

‘காசு இல்லாமகூட கிராமத்துல வாழ்ந்திடுவோம்.. ஆனா இங்கு?!’- புலம்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்தியாவில்  ஊரடங்கு
இந்தியாவில் ஊரடங்கு

டெல்லி புறநகர்ப் பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, போதுமான உணவும் இன்றி தங்களது நாள்களைக் கழித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் உறவுகளைச் சந்திக்க முடியாமல் கலக்கத்துடன் பொழுதைக் கழித்துவருகிறார்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு, 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி அறிவித்தது. நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தக் குறுகிய கால அவகாசம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல போதுமானதாக இல்லை. இருந்தும் பலர் கால்நடையாக 500 முதல் 600 கிலோமீட்டர்கள் வரை நடந்து சென்ற செய்தி வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 21 நாள்கள் ஊரடங்கு முடியட்டும் அதன்பின்னர் ஊருக்குச் செல்லலாம் எனக் காத்திருந்த தொழிலாளர்களுக்கு, பிரதமரின் அடுத்த அறிவிப்பும் அதிர்ச்சிதான்.

ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி, மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பிரதமர் மோடி, ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்தார்.

ரயில்
ரயில்

ஏப்ரல் முதல்வாரத்தில், ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பின்னர் இயங்கும் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது. இதன்விளைவாகத்தான் ஏப்ரல் 14-ம் தேதி மகாராஷ்டிராவில் 2000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பந்த்ரா ரயில்நிலையம் முன்பு கூடினர். அதன்பின்னர் போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

‘உணவு வேண்டாம்.. சொந்த ஊர்களுக்கு போக வேண்டும்!’- மும்பை பந்த்ராவில் குவிந்த மக்கள்

டெல்லி புறநகர்ப் பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, போதுமான உணவு இன்றி, தங்களது நாள்களைக் கழித்துவருகின்றனர். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு காலம் வேதனையை தந்துள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள தொழிலாளர்கள் சிலர், “இந்த ஊரடங்கு உத்தரவு எங்களை சோதிக்கிறது. எங்களுக்கு உணவெல்லாம் வேண்டாம்; நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும். குடும்பத்தினருடன் இருக்கவே விரும்புகிறோம்.

மோடி
மோடி

மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசுகளிடமிருந்தோ எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களைக் கொண்டுசென்று சொந்த ஊர்களில் விட்டுவிடுங்கள். அதன்பின்னர் 9 மாதங்களுக்குக்கூட ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துங்கள். எங்கள் சேமிப்புகள் எல்லாம் தொடர்ந்து தீர்ந்துகொண்டே இருக்கிறது. கையிருப்பில் உள்ள உணவுகள் இரண்டு மூன்று நாள்களுக்குதான் வரும். கடனுக்கு கூட எங்களுக்கு யாரும் ரேஷன் பொருள்களை வழங்க முன்வரவில்லை. காசு இல்லைன்னாகூட, எங்க கிராமத்துல நாங்க வாழ்ந்துடுவோம். ஆனா, இந்த நகரத்துல எப்படி வாழ்றது. நல்ல டீ குடிச்சு ஒருவாரம் ஆச்சு. பால் கூட கிடைப்பதில்லை. குளிப்பதற்குகூட சோப் இல்லை. இந்த நகரத்தில் வாழ்வது கடினமானதாக இருக்கிறது. இறுதியில் நாங்கள் பட்டினியால் மடிந்துவிடுவோம்” என கண்ணீர் வடிக்கின்றனர்,

அடுத்த கட்டுரைக்கு