Published:Updated:

`எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயார்!’ - இந்தியாவுக்குக் கைகொடுக்கும் சீனா #Corona

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த, இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. ஆனால், சீனாவில் தற்போது வைரஸின் நிலை சற்று தணியத் தொடங்கியுள்ளது. அங்கு உயிரிழப்புகள் குறைந்து, புதிதாகப் பாதிக்கப்படும் நோயாளிகள் முற்றிலும் இல்லாமல் போயுள்ளனர். கொரோனாவை எதிர்த்து அந்நாடு நடத்திய பெரும் போரில் அவர்கள் வெற்றிபெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உள்பட அனைத்து நாடுகளும் பாராட்டி வருகின்றன.

சீனா
சீனா
AP

தங்கள் நாட்டில் வைரஸின் பரவல் குறைந்ததும் பிற நாடுகளுக்கு உதவத் தயாராகிவிட்டது சீனா. தற்போது, வைரஸால் மொத்தமாக ஸ்தம்பித்துப்போயுள்ள இத்தாலி உள்பட, ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ நூற்றுக்கணக்கான சீன மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதம், சீனாவில் வைரஸின் பரவல் அதி தீவிரமாக இருந்தது. அந்த நேரத்தில், சீனாவுக்கு உதவும் வகையில் சுமார் 15 டன் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகள், கையுறைகள் ஆகியவற்றை ராணுவம் மூலம் இந்தியா சீனாவுக்கு அனுப்பி உதவியது.

தற்போது இதற்கு நன்றி தெரிவித்துள்ள சீனா, இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷீவாங், “ இந்தியாவும் சீனாவும் தடையின்றிப் பரிமாற்றங்களைக் கொண்டுள்ளன. கோவிட் 19 வெடித்த பிறகு இந்த இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. இருவருக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இந்தியப் பிரதமர் மோடி, சீனாவுக்கு அனுதாபக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர், சீனத் தரப்புடன் தொலைபேசியில் பேசினார்.

சீனா
சீனா

நாங்கள் இந்தியத் தரப்பிலிருந்து உதவி பெற்றுள்ளோம். அதற்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது, நாங்கள் இந்தியாவுக்கு உதவத் தயாராக உள்ளோம். உரிய நேரத்தில் அவர்களிடம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறோம். சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் சரியான உதவிகளையும் வசதிகளையும் வழங்கிவருகிறோம். அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் காத்துவருகிறோம்.

இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். உலகிலேயே பில்லியன் மக்களைக்கொண்ட நாடுகள் இந்தியாவும் சீனாவும் மட்டுமே. வைரஸ், அனைவருக்குமே ஒரு சவால்தான். இந்த நேரத்தில் எங்களின் அனுபவத்தை இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ளத் தயாராக உள்ளோம். மேலும், இந்தியத் தரப்புக்கு உதவிகள் செய்யவும் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு