ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி தற்போது ராஜஸ்தானின் இணை நிதி இயக்குநராகப் பணியாற்றுபவர். தன்னுடைய சொந்த வாழ்வில் இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கிறார். முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்துபெற்ற நிலையில் ராஜஸ்தானின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகம் துறையின் இயக்குனராக பணிபுரியும் சக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பிரதீப் கவண்டேவைத் திருமணம் செய்யவுள்ளதாக தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர்.
டீனா டாபி (Tina Dabi), 2016 இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். டெல்லியைச் சேர்ந்த இவர், அதே தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற அதார் அமீர் கானைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் காதல் இந்திய ஆட்சிப்பணிக்கான பயிற்சியின்போது துளிர்த்தது. 2018 ஏப்ரலில் இவர்களின் திருமணம் நடந்தது. 2020 நவம்பரில் இருவரும் மனம் உகந்து பிரிந்தனர். இவர்களின் விவாகரத்தை ஜெய்பூர் நீதிமன்றம் 2021 ஆகஸ்டில் ஏற்றுக்கொண்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், தற்போது தன் மறுமணம் குறித்த அறிவிப்பை பகிர்ந்திருக்கிறார் டீனா. டீனாவின் கரம்பற்றவிருக்கும் பிரதீப் கவண்டே, 2013 ஐஏஎஸ் தேர்வில் தேர்வானவர். இவரும் ராஜஸ்தானில் பணிபுரிகிறார்கள். டீனா தன்னுடைய பக்கத்தில் பிரதீப்புடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, "நீ தந்த சிரிப்பை நான் அணிந்திருக்கிறேன்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். பிரதீப், "நான் ஒன்றாக இருப்பது எனக்கு விருப்பமான இடம்" எனப் பதிவிட்டுள்ளார். இவர்களின் திருமணம் ஏப்ரல் 22 ஜெய்ப்பூரில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. ஆட்சிப்பணி அதிகாரி இணையர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.