Published:Updated:

`20 ஆண்டுகளில் இல்லாத புயல்! - மேற்கு வங்கத்தில் ஆம்பன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ஆம்பன்
ஆம்பன் ( ANI )

``நாங்கள் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநில அதிகாரிகளிடம் முகாம்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளோம். 1,000 பேர் தங்க வேண்டிய இடங்களில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது”

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் தவித்து வரும் சூழலில் மற்றொரு சவாலாக ஆம்பன் புயல் வந்துள்ளது. அதி தீவிரப் புயலாக உருவாகியுள்ள இந்த ஆம்பன் புயலானது மேற்கு வங்கக் கடற்கரையில் நாளை கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அப்போது, சுமார் 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனக் கூறப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு அம்மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது. மேலும், நிவாரணக் குழுக்களும் தயாரான நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பன்
ஆம்பன்
ANI

கொரோனா பாதிக்காமல் இருக்க தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். புயலால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க பெரும்பாலான மக்களை கூட்டமாக தங்கவைக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த சவால் குறித்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் தலைவர் பிரதான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``நாங்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில அதிகாரிகளிடம் முகாம்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பேசியுள்ளோம். 1,000 பேர் தங்க வேண்டிய இடங்களில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இதுபோன்ற சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் இப்போது இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளை முகாம்களாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 41 குழுக்கள் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலிமையான புயலாக ஆம்பன் உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பொருள்கள் பறப்பது மற்றும் மின்கம்பங்களுக்கு சேதம் ஏற்படுவது குறித்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடற்கரைக்கு அருகில் வீடுள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்களுக்கும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`அதி தீவிரத்திலிருந்து சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்?’ - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த கட்டுரைக்கு