Published:Updated:

`உதவி கேட்க வெட்கம்; பசியில் உறங்குகிறார்கள்’ - ஏழைகளின் பசியைப் போக்கும் மேற்குவங்க டியூஷன் டீச்சர்

மேற்குவங்க டியூசன் டீச்சர்
மேற்குவங்க டியூசன் டீச்சர்

மேற்கு வங்கத்தில் உணவின்றி தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தேடிச்சென்று உதவி செய்து வருகிறார் ஒரு டியூஷன் டீச்சர்.

மேற்கு வங்க மாநிலம் போல்பூர் நகரத்தைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் கடந்த சில நாள்களாக ஓர் அதிசயம் நிகழ்ந்து வந்துள்ளது. உணவின்றித் தவிக்கும் ஏழை மக்களின் வீடுகளுக்கு முன்பாக சிலர் இரவு நேரங்களில் வந்து மளிகைப்பொருள்களை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பல கிராமங்களில் உண்மையில் அடுத்தவேளை உணவுக்கே கஷ்டப்படுகிற குடும்பங்களின் வீடுகளுக்கு இந்தப் பொருள்கள் வந்து சேர்ந்துள்ளன. ஒரு கிலோ அரிசியைக் கொடுத்துவிட்டு சுற்றி 10 பேர் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டு நிவாரணப் பணிகளைச் செய்துவருகிறோம் என மார்தட்டிக் கொள்ளும் இந்தச் சமூகத்தின் மத்தியில் நல்ல உள்ளங்கொண்ட யாரோ சத்தமே இல்லாமல் இந்த உதவிகளை செய்து வந்துள்ளார்.

ஊரடங்கு
ஊரடங்கு

யார் இந்த உதவியைச் செய்துவருகிறார்கள் என்ற விவரம் யாருக்குமே தெரியவில்லை. நள்ளிரவில் வந்து வீடுகளில் நிவாரணப் பொருள்களை வைத்துவிட்டுச் செல்வதால் கிராம மக்களால் கண்டறியமுடியவில்லை. தங்களது தேவை அறிந்து உதவும் அந்த நல்ல உள்ளத்தைக் காண வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்துள்ளது. ஒருவழியாக அது யார் என்பது இப்போது தெரிந்துவிட்டது. போல்பூர் நகரில் டியூஷன் சென்டர் நடத்தி வரும் ஷியாமல் மாஜி என்பது தெரியவந்துள்ளது. தன்னிடம் படித்த இளைஞர்கள் மூலம் இந்த உதவியை ஷியாமல் மாஜி செய்துவந்துள்ளார்.

போல்பூர் நகரத்தைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவரிடம் படித்ததால் உண்மையில் உணவின்றி யார் தவித்து வருகிறார்கள் என்ற விவரங்களை அவர்களின் மூலம் சேகரித்து மளிகைப்பொருள்களை வழங்கி வந்துள்ளனர். இந்த விவரங்கள் தெரிந்து ஆங்கில ஊடகங்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது போட்டோ எடுப்பதைத் தவிர்த்துள்ளார்.

அரிசி
அரிசி

``நான் எந்தப் புகழுக்காகவும் இந்த உதவியைச் செய்யவில்லை. இந்தப் பகுதியில் உள்ள மக்களில் ஏராளமானவர்கள் கூலித்தொழிலாளர்கள். அவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலிலும் அவர்கள் வேலையைத் தேடி வெளியில் செல்கிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் உணவுக்காக வரிசையில் நிற்பதை விரும்புவதில்லை. மற்றவர்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அதனால் தங்களது நாள்களை பசியுடனே கழிக்கிறார்கள்.

ஒவ்வொரு இரவிலும் என்னுடன் ஒரு 10 பேர் கொண்ட குழுவை அழைத்துக்கொண்டு இந்தப்பணியை செய்து வருகிறேன். இந்தப்பகுதி முழுவதும் என்னுடைய மாணவர்கள் இருப்பதால் அவர்கள் அந்தந்த குக்கிராமங்களில் உணவின்றி தவிப்பவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். மாணவர்கள் மூலம் ஏழைகளுக்கு உதவமுடிகிறது. என்னுடைய மாணவர்களில் சிலர் வேலைக்குச் செல்கிறார்கள். சிலர் உதவிசெய்யக்கூடிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் தாராளமாக நன்கொடை அளிக்கிறார்கள். சிலர் தங்களால் என்ன முடியுமோ அதைக் கொடுக்கிறார்கள்” என அடக்கத்துடன் ஷியாமல் மாஜி கூறினார்.

ஊரடங்கு
ஊரடங்கு

ஷியாமல் மாஜிக்கு திருமணமாகி 4 வயதில் குழந்தை இருக்கிறது. அவரின் மனைவியின் ஒத்துழைப்புடன் ஏழை மக்களுக்கு உதவி செய்துவருகிறார். 2 கிலோ அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சில காய்கறிகள், சமையல் எண்ணெய், உப்பு மற்றும் சோப்பு அடங்கிய பைகளை இவர்கள் வழங்கி வருகிறார்கள்.

மாஜி குழுவில் இருக்கும் அவரது மாணவர் தாரக்நாத் தாஸ் பேசுகையில், ``ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறபோது சிலர் புகைப்படங்களை எடுப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர்களே உணவில்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஒரு கிலோ அரிசியைக் கொடுத்துவிட்டு 15 பேர் சுற்றி நின்று போட்டோ எடுக்கிறார்கள். எதற்கு நிவாரணம் வழங்குகிறார்கள் எனத் தெரியவில்லை'' என்றார்.

ஊரடங்கால் நடந்து 
 செல்லும் தொழிலாளர்கள்
ஊரடங்கால் நடந்து செல்லும் தொழிலாளர்கள்

தாரக்நாத் தாஸ் தந்தை பேசும்போது, ``ஏழை மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குகிறார்கள். எங்கள் கிராமத்தில் ஒரு முதியவர் இருக்கிறார். அவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கு கூரை வேய்ந்து கொடுப்பார். இந்த லாக்டெளன் காரணமாக அவருக்கு வேலை இல்லை. ஒருநாள் தனக்கு கடவுள் அருளால் உணவுப் பொருள்கள் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியாக இருந்தார். அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கடவுள் கொடுத்தார் என்றே கூறினார். பின்னர்தான் அது மாஜி கொடுத்தது என்ற விவரம் எனக்குத் தெரியவந்தது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு