Published:Updated:

லடாக் இனிமேல் வளம் கொழிக்கும் பூமி ஆகுமா... என்ன தொழில்கள் செய்ய முடியும்?!

சுற்றுலாவுக்குப் பெயர் போன பகுதியாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீருடன் இணைந்திருப்பதால் தாங்களும் வளர்ச்சி பெற முடியாமல் முடங்கிப் போயுள்ளதாக ஓர் எண்ணம் லடாக் மக்களிடத்தில் உண்டு.

லடாக்
லடாக்

ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டு விட்டது. இனிமேல், சட்டமன்றம் இல்லாத தனி யூனியன் பிரதேசமாக லடாக் பகுதி இயங்கும். லடாக் 1,17,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. காஷ்மீரிலிருந்து பெரும் பகுதியான லடாக் பிரிந்து விட்டாலும், இங்கே, இரண்டு மாவட்டங்களே உள்ளன. லே, கார்கில் என்கிற மாவட்டங்கள்தாம் அவை. லே மாவட்டம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மாவட்டம். லடாக்கின் மக்கள் தொகை 2.74 லட்சம்.

அழகிய லடாக்
அழகிய லடாக்

காஷ்மீர் பகுதி போல இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே பெரும்பான்மையினர் கிடையாது. இஸ்லாமிய மக்கள் 47.4 சதவிகிதம் வசித்தால், அவர்களுக்கு இணையாக புத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் 45.8 சதவிகிதம் வசிக்கின்றனர். இந்துக்கள் வெறும் 6.2 சதவிகிதமே. இங்கு வாழும் புத்த மக்கள் பாரதிய ஜனதாவுடன் நெருக்கம் காட்டி வருவதுதான் லடாக் யூனியன் பிரதேசமானதற்கு முக்கிய காரணம். தற்போது, லடாக் தொகுதியின் எம்.பி-யான ஜெம்யாங் ஷெரிங் நம்கியால் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரே.

காஷ்மீர், ஜம்மு, லடாக் பகுதிகள் சேர்ந்தவைதான் ஒருங்கிணைந்த காஷ்மீர். இதில், சட்டசபை தொகுதிகள் அதிகம் கொண்டுள்ள, காஷ்மீர் பகுதி மக்களின் ஆதிக்கம் அதிகம். காஷ்மீர் மக்கள் லடாக் பகுதி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக லடாக் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவது உண்டு.

லடாக் தொகுதி எம்.பி
லடாக் தொகுதி எம்.பி

லடாக் பிரிக்கப்பட்டதும், இந்தத் தொகுதி எம்.பி ஜெம்யாங் ஷெரிங் நம்கியால் கூறுகையில், "நாங்கள் மத்திய அரசுடன் நேரடியாக தொடர்பில் இருக்க விரும்பினோம். எனவே, லடாக்கைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வற்புறுத்தி வந்தோம். எங்கள் ஆசை நிறைவேறியிருக்கிறது. காஷ்மீர் அரசியல்வாதிகள் வேலை வாய்ப்பு வழங்குவதிலிருந்து பல விஷயங்களில் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வந்தனர்'' என்று தெரிவித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லடாக் சுற்றுலாவுக்குப் பெயர் போன பகுதியாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீருடன் இணைந்திருப்பதால் தாங்களும் வளர்ச்சி பெற முடியாமல் முடங்கிப் போய் விட்டதாக ஓர் எண்ணம் லடாக் மக்களிடத்தில் உண்டு. அடிப்படை வசதிகள் குறைவு. சாலை வசதி 1,800 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் உள்ளது. லடாக் மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்ட பாரதிய ஜனதா அரசு, மெல்ல மெல்ல அவர்களைக் கவர முயன்றது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி காஷ்மீருக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, லடாக் பகுதிக்கும் சென்றார். நீர் மின் திட்டம் ஒன்றையும் தொடங்கி வைத்தார். லடாக் பல்கலைக்கழகத்தையும் திறந்து வைத்து, மக்களிடத்தில் உரையாற்றினார். அப்போது, "கடினமான சூழலில் வாழும் உங்களைப் போன்ற மக்கள் காட்டும் அன்புதான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கிறது'' என்று லடாக் மக்களுக்குப் புகழாரம் சூட்டினார்.

லேவில் மோடி
லேவில் மோடி

ஏற்கெனவே `லே பகுதிக்கு தனி அந்தஸ்து தருவோம்' என்றும் பாரதிய ஜனதா அரசு அடிக்கடி வெளிப்படையாகவே கூறி வந்தது. தற்போது, அதைச் செய்தும் காட்டி விட்டது. லடாக்கின் தலைநகரான லே இனிமேல் தனி அந்தஸ்துடன் இருக்கும். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், லடாக் மக்களுக்குப் பல்வேறு வசதிகளை டெல்லி செய்து கொடுக்க முனைப்பு காட்டும். குறைவான மக்கள் தொகை என்பதால், தேவையான வசதிகளை மத்திய அரசு உடனுக்குடன் செய்து கொடுத்து விடும்.

அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டுவிட்டதால், காஷ்மீரில் முதலீடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. லடாக்கில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம், தொழில் தொடங்கலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. லடாக்கில் சிந்து நதி பாய்வதால் நீர் மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும். காற்றாலைகள் அமைத்து மின்சார உற்பத்தியைப் பெருக்கலாம். மலைப்பகுதியில் நல்ல வெயில் அடிக்கும் பகுதிகளும் லடாக்கில் இருக்கின்றன. எனவே, சூரிய ஒளி மின் உற்பத்திக்கும் வழி இருக்கிறது. இதனால், லடாக்கில் பல புதிய நிறுவனங்கள் கால் பதிக்கலாம். வேலை வாய்ப்பு பெருகலாம்.

லடாக்கில் பாரதிய ஜனதா தொண்டர்கள்
லடாக்கில் பாரதிய ஜனதா தொண்டர்கள்

சுற்றுலா வழியாக லடாக் பகுதி வருவாய் பெருகவும் வாய்ப்புள்ளது. லடாக், டிரெக்கிங்கை விரும்புவர்களின் சொர்க்கப்பூரி. லடாக்கில் சிந்து நதி ஓடி வரும் அழகை காணவே ஆயிரம் கண்கள் வேண்டும். இந்தியாவில் லடாக்கில் மட்டுமே சிந்து நதி ஓடுகிறது. லே அரண்மனை, பல்வேறு புத்த ஆலயங்கள், ஏரிகள் என இயற்கை அழகு இங்கு கொட்டிக் கிடப்பதால், லடாக்கில் வருங்காலத்தில் சுற்றுலா தொழில் உத்வேகமெடுக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசே இங்கே சுற்றுலாத் தொழிலை மேம்படுத்த பல நடவடிக்கைகளை இனிமேல் எடுக்கும் எனத் தெரிகிறது.