Published:Updated:

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமான CFIT; அப்படியென்றால் என்ன?

Helicopter Crash
News
Helicopter Crash ( Photo: Vikatan )

ஹெலிகாப்டரோ, விமானங்களோ… இவை இரண்டிலும் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் விபத்துக் காரணிகளில் ஒன்றாக இந்த CFIT இருக்கிறது. இது ஏற்பட முக்கியமான காரணம், பைலட் `Situation awareness’-ஐ இழப்பது.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி, சூலூரிலிருந்து குன்னூரை நோக்கி பயணம் செய்த Mi-17v5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் அந்த துயர விபத்தில் உயிரிழந்தனர்.

 • நாட்டை அதிரச்செய்த இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க, முப்படைகள் சார்பில் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணையை முடித்து, அறிக்கையை சட்டரீதியான ஆய்வுக்காக அனுப்பியிருப்பதாக, `தி இந்து’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

 • இந்த விசாரணையில், விபத்துக்கான காரணமாக, CFIT (Controlled Flight Into Terrain) எனத் தெரியவந்துள்ளதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த CFIT என்றால் என்ன?

 • விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துகளை பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கிவிடலாம். ஒன்று, ஹெலிகாப்டர்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் (இன்ஜின் பழுது, எரிபொருள் பற்றாக்குறை, முக்கியமான சாதனங்கள் செயலிழத்தல் போன்றவை).

 • இரண்டாவது, ஹெலிகாப்டருக்கு வெளியே இருக்கும் சவால்கள். (மோசமான வானிலை, திடீர் தடைகள் போன்றவை).

 • மூன்றாவது, பைலட்டால் நிகழும் மனிதத் தவறுகள் (முறையான விதிமுறைகளைப் பின்பற்றாதது, சவாலான சூழ்நிலையில் எடுக்கப்படும் தவறான முடிவுகள் போன்றவை)

 • இந்த மூன்று விஷயங்களும் ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் விபத்துகளை, அதன் தன்மைக்கேற்ப சரியாக இனம்காண ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரைக் குறிப்பிடுகின்றனர் விமானத்துறை நிபுணர்கள்.

 • உதாரணமாக, தொழில்நுட்பக் கோளாறுகளால் பைலட் ஹெலிகாப்டரின் கட்டுப்பாட்டை இழந்தால் அது, Loss of Control In-flight (LOC-I) அல்லது UFIT (Uncontrolled Flight into Terrain).

 • இதேபோல, ஹெலிகாப்டரின் பாகங்கள் அனைத்தும் சரியாக இருந்து, பைலட்டும் சரியாகவே இயக்கி, இருந்தும்கூட வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் விபத்துகள்தான் CFIT (Controlled Flight Into Terrain).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது ஏன் ஏற்படுகிறது?

 • ஹெலிகாப்டரோ, விமானங்களோ… இவை இரண்டிலும் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் விபத்துக் காரணிகளில் ஒன்றாக இந்த CFIT இருக்கிறது.

 • இது ஏற்பட முக்கியமான காரணம், பைலட் `Situation awareness’-ஐ இழப்பது. அதாவது, ஹெலிகாப்டரை பைலட் வானில் இயக்கும்போது, அதைச் சுற்றியிருக்கும் தடைகளை அறியாதது, கீழிருந்து அதன் உயரத்தைக் கணிப்பதில் ஏற்படும் குழப்பம், பாதையில் ஏற்படும் எதிர்பாரா சிக்கல்கள் போன்றவற்றால், ஹெலிகாப்டர் முழு கட்டுப்பாட்டில் இருந்தும்கூட, நீரிலோ, நிலத்திலோ, மலைகளிலோ மோதிவிடுவது. அப்படியெனில் இது பைலட்டின் பிழையா?

 • இல்லை. காரணம், இதுபோன்ற CFIT விபத்துகள் அதிகளவில் நடக்க காரணமே, எதிர்பாராத நிகழ்வுகளை (மரம், மலை, தரைகளில் மோதுவது) பைலட்கள் தாமதமாக அறிவதே. `டைட்டானிக்’ பனிப்பாறையில் மோதியபிறகே, அதுகுறித்து தெரியவந்தால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் இதுவும்.

 • அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு பைலட், சுதாரித்து நிலைமையைச் சரிசெய்வதற்குள் விபத்து நடந்து முடிந்திருக்கும். ஏன் பைலட் இப்படி தாமதமாக அறிந்துகொள்கிறார்? முக்கிய காரணம், மோசமான வானிலை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 • அப்படி, குன்னூரில் நிகழ்ந்த விபத்தில் பனிமூட்டம், அதனால் ஏற்பட்ட இடைஞ்சல் போன்றவை பைலட்டைக் குழப்பி, அங்கிருக்கும் ஏதாவது ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கின்றனர் விமானப்படை உயரதிகாரிகள்.

 • சூலூரிலிருந்து காலை 11:48 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், குன்னூரில் 12:15-க்கு இறங்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் 12:08 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதாவது, தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக விபத்து நடந்திருக்கிறது.

 • CFIT-யும் சவாலான இடங்களில் ஹெலிகாப்டர் அல்லது விமானம் பயணம் செய்யும்போது, தரையிறங்கும் நேரங்களில்தான் பெரும்பாலும் ஏற்படுமாம்.

 • இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, இதுபோன்ற விபத்துகளைக் கையாளும் அளவுக்கு ஹெலிகாப்டரின் சிஸ்டமை தொழில்நுட்ப ரீதியில் இன்னும் அப்கிரேடு செய்வது மட்டும்தான். வேறு எதுவும் பைலட் கையில் இல்லை!

வேறு காரணங்களாகவும் இருக்கலாமா?

 • விமான விபத்துகள் குறித்து புலனாய்வு செய்வதில் இந்தியாவிலேயே தலைசிறந்த அதிகாரி மன்வேந்தர் சிங்தான் என்கின்றனர்.

 • ஹெலிகாப்டரின் கறுப்புப்பெட்டி, அதிலிருந்த தகவல்கள், சம்பவ இடத்தில் நடைபெற்ற விசாரணைகள் மற்றும் பிற ஆதாரங்களை வைத்து, எல்லா கோணங்களிலும் ஆராய்ந்தே மன்வேந்தர் சிங் தலைமையிலான குழுவினர் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியும்.

 • இன்னும் இவர்கள் விமானப்படையிடம் தங்கள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. மேலே சொன்னதுபோல, விசாரணை ராணுவ முறைப்படி நடந்துள்ளதா என்பதை சட்டரீதியாக ஆய்வு செய்து, உறுதி செய்தபின்னரே இறுதி அறிக்கையை தாக்கல் செய்வர்.

 • அதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. பின்னர் இந்திய விமானப்படை, அறிக்கையின் விவரங்களை பொது வெளியில் வெளியிடலாம்.

 • அதன்பிறகே, விபத்து நிகழக் காரணமாக வேறு ஏதேனும் காரணிகள் இருந்தனவா என்பது குறித்தும் விரிவாகத் தெரிய வரும்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!