Published:Updated:

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

பாங்கோங் சோ ஏரி
News
பாங்கோங் சோ ஏரி ( AP )

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையால் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஐந்து மாதங்களைக் கடந்தும் பதற்றம் நீடித்துவருகிறது.

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையால் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஐந்து மாதங்களைக் கடந்தும் பதற்றம் நீடித்துவருகிறது.

Published:Updated:
பாங்கோங் சோ ஏரி
News
பாங்கோங் சோ ஏரி ( AP )

இந்தியா - சீனா எல்லை!

லடாக் தவிர்த்து உத்தரகாண்ட், ஹிமாச்சலப்பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப்பிரேதேச மாநிலங்களில் சுமார் 3,488 கி.மீ தூர எல்லையை சீனாவோடு பகிர்ந்துகொள்கிறது இந்தியா. இதில், லடாக்கின் டெஸ்பாங்க் பகுதியில் பேட்ரோலிங் பாயின்ட் (10 முதல் 13 வரை), கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி, சூஷூல், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி உள்ளிட்ட பகுதிகள் பிரச்னைக்குரிய பகுதிகளாக அறியப்படுகின்றன. அதேபோல், இந்தியா, பூட்டான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடமான டோக்லாம் பகுதியிலும் சீனா அவ்வப்போது பிரச்னை செய்துவருகிறது. டோக்லாம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் சீனா திடீரெனப் படைகளைக் குவித்தது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்தது. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீடித்த இந்தப் பிரச்னையில் சர்வதேச அழுத்தத்தால் சீனா அமைதியானது.

இந்தியா-சீனா
இந்தியா-சீனா

`எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்துக்கு ஆயுதங்கள், வேதியியல் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது’ என கடந்த 1996 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இருமுறை அமைதி உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கையொப்பமிட்டிருக்கின்றன. ஆனால், இந்த உடன்படிக்கையை தொடர்ந்து மீறிவருகிறது சீனா.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்!

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா - சீனா வீரர்களுக்கிடையே கடந்த ஜூன் மாதம் மோதல் வெடித்தது. ஆணியடிக்கப்பட்ட கம்புகள், கற்கள் போன்ற ஆயுதங்களால் சீன வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சீன வீரர்களுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உரிய பதிலடி கொடுத்தனர். ஜூன் 15-ம் தேதி நள்ளிரவு இந்த மோதல் சம்பவம் நடந்தது. இதில், இருதரப்பு வீரர்களுமே துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.

இதில், இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணமடைந்ததாக ஜூன் 16-ம் தேதி காலையில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மாலையில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக இந்திய ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சீன ராணுவ வீரர்கள் 45 பேர் வரை இறந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சீனா தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
Google Earth

இந்தநிலையில்தான், கிழக்கு லடாக் பகுதியிலிருக்கும் பாங்கோங் சோ ஏரியின் தெற்குப் பகுதியில் சீன ராணுவம் கடந்த மூன்று நாள்களில் இரண்டு முறை ஊடுருவ முயன்றிருக்கிறது. சீன ராணுவத்தின் நகர்வுகளை முன்கூட்டியே கணித்திருந்த இந்திய ராணுவம், அவர்களின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தது. அத்துடன் பாங்கோங் சோ ஏரியை ஒட்டிய மலைமுகடுகளில் படைபலத்தையும் இந்திய ராணுவம் அதிகரித்திருக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள், சென்சார்கள் என அப்பகுதியில் சீனா முன்கூட்டியே அமைத்திருந்த தொழில்நுட்பக் கருவிகளின் கண்காணிப்பை மீறி இந்திய ராணுவம் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதிகளில் தங்கள் இருப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது.

பாங்கோங் சோ ஏரி!

சுற்றிலும் நிலப்பகுதியால் சூழப்பட்ட ஏரியான பங்காங் சோ ஏரி லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 4,270 மீ உயரத்தில் அமைந்துள்ள இது, சுமார் 135 கி.மீ நீளம்கொண்ட அகலம் குறைந்த ஏரி. இரு கரைகளுக்கு இடையிலான அதிகபட்ச குறுக்குவெட்டு நீளம் 6 கி.மீ. தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவரை நீண்டுகிடக்கும் காரகோணம் மலைத் தொடர் பாங்கோங் சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியில் முடிகிறது. உலகின் உயரமான இரண்டாவது மலைச் சிகரமான கே2 இந்த மலைத் தொடரில்தான் இருக்கிறது.

பாங்கோங் சோ ஏரி
பாங்கோங் சோ ஏரி
AP

பாங்கோங் சோ ஏரியின் தெற்குப் பகுதியில் தொடர்ச்சியற்ற சரிவான மலைத்தொடர் காணப்படுகிறது. இது, ஸ்பாங்குர் ஏரி வரை காணப்படுகிறது. பளிங்கு போன்ற தண்ணீரைக் கொண்டிருந்தும், உப்புத்தன்மை அதிகமிருப்பதால் இந்த ஏரி நீர் பருக முடியாத நிலையில் இருக்கிறது. குளிர்காலங்களில் ஏரி உறைந்துவிடுகிறது. அதனால், குளிர்காலங்களில் ஏரிமீது வாகனங்களும் பயணிக்க முடியும்.

ஏரியின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கின்றன. பாங்கோங் சோ ஏரியின் 45 கி.மீ பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் இருக்கிறது. வடக்கு -தெற்காகச் செல்லும் இந்திய-சீன எல்லைக்கோடு ஏரியின் மேற்குப் பகுதியில் இரண்டாகப் பிரிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் பாங்கோங் சோ ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்னை நிலவுகிறது. பாங்காங் சோ ஏரியின் வடக்குப் பகுதியில் சர்வதேச எல்லைக் கோடு என்பது 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதிலமடைந்த குர்னாக் கோட்டைக்கு அருகில் இருக்கிறது என்று இந்தியா தரப்பில் சொல்லப்படுகிறது.

அதேநேரம், இருநாடுகளுக்கிடையேயான எல்லை (LAC) என்பது மேற்குப்பகுதியில் 15 கி.மீ தூரம் உள்நோக்கி இருப்பது என்றும், இந்தியா தரப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இரு நாடுகளுக்கிடையேயான எல்லை என்பது நிலப்பகுதியில் பிரிக்கப்படும். இந்த ஏரியைப் பொறுத்தவரை அரிதாக நீர்ப்பகுதியிலும் இரு நாட்டு எல்லைகள் பிரிக்கப்படுகின்றன.

பாங்கோங் சோ ஏரி
பாங்கோங் சோ ஏரி
AP | Manish Swarup

பாங்கோங் சோ ஏரி ஏன் முக்கியம்?

பாங்கோங் சோ ஏரி புவியியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றதில்லை. ஆனால், 'சுஷூல் அப்ரோச்' எனப்படும் மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்த பகுதிக்குச் செல்லும் பாதையாக இருப்பதே இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கச்செய்கிறது. மலைத் தொடர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீனா, இந்த சுஷூல் அப்ரோச் பகுதியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பாங்கோங் சோ ஏரியின் தெற்கு மற்றும் வடக்குக் கரைப் பகுதிகள் வழியாகவே சீனா அதிக அளவில் ஊடுருவல் முயற்சியைச் செய்திருப்பதாகச் சொல்கிறது இந்திய ராணுவம்.

1962 இந்திய - சீனப் போரின்போது இந்தியத் துருப்புகள்மீது சீனா நடத்திய தாக்குதலில் முக்கிய இடம்வகித்தது இந்த சுஷூல் அப்ரோச் பகுதி. போரின்போது முதலில் சிரிஜாப் (Sirijap பகுதியை இழந்த இந்திய ராணுவம், 1962-ம் ஆண்டு அக்டோபர் 22-ல் பாங்சோங் ஏரியின் வடக்குக் கரைப் பகுதியில் மொத்தமாகக் கட்டுப்பாட்டை இழந்தது. சுஷூல் அப்ரோச் பகுதியிலிருந்து சீனா தாக்குதல் நடத்தியதாலேயே பாங்கோங் சோ ஏரியின் தெற்குக் கரையில் யூலா பகுதியில் இருந்த ராணுவ நிலைகளை இந்தியா கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு, அங்கிருந்து உயரமான குரூங் மலைப்பகுதிக்கு துருப்புகளை இடம் மாற்றியது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

சாலை வசதி!

பாங்கோங் சோ ஏரியின் கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ச்சியாக சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த 1999, கார்கில் போரின்போது இந்தப் பகுதியிலிருந்து `ஆபரேஷன் விஜய்’க்காக இந்தியத் துருப்புகள் கார்கிலுக்குச் சென்ற சூழலைப் பயன்படுத்தி, பாங்கோங் சோ ஏரியின் கரையில் இந்திய எல்லைக்குள் சீனா 5 கி.மீ தூரத்துக்குச் சாலை அமைத்தது.

சீனாவின் தான்னாட்சி மாகாணமான நிங்க்ஸியா பகுதியின் (Ningxia Hui) பகுதியின் தலைநகரான மின்னிங்சென்னில் (Minningzhen) இருக்கும் Huangyangtan ராணுவ தளம், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்குரியதாகக் கருதப்படும் அக்‌ஷய் சின் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சீன ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது எப்படி?

`பாங்கோங் சோ ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் சீனப் படைகள் ஊடுருவ முயற்சி செய்யலாம்’ என இந்திய ராணுவத்துக்கு உளவுத் தகவல்கள் கிடைக்கவே, எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி, இரவு 11 மணியளவில் சுமார் 200 சீன ராணுவ வீரர்கள், எஸ்.யூ.வி போன்ற பெரிய வாகனங்களில் இந்திய நிலையை நோக்கி வந்திருக்கிறார்கள். இந்திய ராணுவம் இதை எதிர்பார்க்காத நிலையில், எல்லைப்பகுதியிலிருக்கும் இந்திய செக்போஸ்ட்டில் வீரர்கள் பலம் குறைவாகவே இருக்கும் என சீனா கணக்குப் போட்டிருக்கிறது. ஆனால், உளவுத் தகவலால் எல்லைப்பகுதியில் இருக்கும் இந்திய நிலையில், ராணுவ வீரர்கள் பலத்தை இந்திய ராணுவம் பல மடங்கு அதிகரித்திருந்தது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
AP

இந்திய நிலைக்கு வந்த சீன ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அளவில் அதிகமாக இருப்பதைக் கண்டு சிறிது நேரம் அந்தப் பகுதியில் ஸ்தம்பித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பு வீரர்களும் எதிரெதிராக நின்று கொண்டிருந்த நிலையில், மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்திய துருப்புகள் அதிகம் இருப்பதைக் கண்டு சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ``லடாக்கின் பாங்கோங் சோ ஏரிப் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், `இந்திய எல்லைக்குள் அத்துமீறவில்லை’ என சீனா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்லையில் இந்திய ராணுவமே அத்துமீறியது என்றும் சீனா குற்றம்சாட்டியது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
AP | Mukhtar Khan

இரு நாடுகளுக்கிடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய - சீன ராணுவ பிரிகேடியர் கமாண்டர் அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் சுஷூல் பகுதியில் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பாங்கோங் சோ பகுதியில் சீன ராணுவம் இரண்டாவது முறையாக ஊடுருவ முயன்றது. அதையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்தச் சம்பவங்களால், எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. சீனா மட்டுமல்லாமல், பாகிஸ்தான், திபெத் எல்லைகளில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.