Published:Updated:

இருளில் மூழ்குமா இந்தியா? - நிலக்கரிப் பற்றாக்குறையின் நிலவரம் என்ன?

நிலக்கரிப் பற்றாக்குறை

மின் தேவை அதிகரிக்கும்போது அதை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. ஆனால், நிலக்கரி இல்லை என்பதுதான் பிரச்னை. இதற்கு முதல் காரணம், சர்வதேச அளவில் விலைகள் உயர்ந்தது.

இருளில் மூழ்குமா இந்தியா? - நிலக்கரிப் பற்றாக்குறையின் நிலவரம் என்ன?

மின் தேவை அதிகரிக்கும்போது அதை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. ஆனால், நிலக்கரி இல்லை என்பதுதான் பிரச்னை. இதற்கு முதல் காரணம், சர்வதேச அளவில் விலைகள் உயர்ந்தது.

Published:Updated:
நிலக்கரிப் பற்றாக்குறை

இந்தக் கோடையில் பல தூக்கமில்லாத இரவுகளை நாம் சந்திக்க நேரிடலாம். மீண்டும் ஒரு மின் தடைக் காலத்தைச் சந்திக்கிறோம். கடந்த அக்டோபரில் இதேபோன்ற ஒரு சூழலை இந்தியா சந்தித்தது. அப்போது 'இரண்டு நாள்களுக்கான நிலக்கரி மட்டுமே அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ளது' என்று பிரேக்கிங் நியூஸைப் பார்த்தோம். இப்போது மீண்டும் நிலக்கரி பற்றாக்குறை, மின் தடை.

"மத்திய அரசு போதுமான நிலக்கரி தரவில்லை" என்று குற்றம் சாட்டுகிறார் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. "செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க இப்படிச் செய்கிறார்கள்" என்று கிண்டல் செய்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

எதனால் இந்தப் பிரச்னை? இதற்கு யார் காரணம்? எப்போது இது சரியாகும்?

ஒவ்வொரு கோடையிலும் மின் தேவை அதிகரிப்பது இயல்புதான். வீடுகளிலும் நிறுவனங்களிலும் ஏ.சி அதிகம் இயங்கும் என்பதால் இப்படி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டிருந்ததால், தொழிற்சாலைகளுக்கு மின் தேவை குறைவாகவே இருந்தது. அதனால் வீடுகளுக்குத் தடையில்லாமல் மின்சாரம் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரச்னை வந்ததற்குக் காரணம் கூட மழைதான். நிலக்கரி சுரங்கங்கள் இருக்கும் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், தெலங்கான, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்தது. அதன் விளைவாக நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டது. அனல் மின் நிலையங்களுக்கு உரிய நேரத்தில் நிலக்கரி போகாததால் இருப்பு குறைந்து பிரச்னை வந்தது.

கொரோனா தடைகள் எல்லாம் முடிந்து தொழில்துறையின் கதவுகள் அகலத் திறந்திருக்கும் நேரம் இது. கோடையும் கடுமையாக வாட்டுவதால், மின் தேவை தாறுமாறாக அதிகரித்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
"இந்தியாவின் ஒருநாள் மின்சாரத் தேவை 200 கிகா வாட்ஸ் என்ற அளவைவிட அதிகமாக இருக்கிறது. இதில் பெருமளவை அனல் மின் நிலையங்களே பூர்த்தி செய்கின்றன. அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரியில் 83 சதவிகித அளவை மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் சப்ளை செய்கிறது. இந்திய சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை பல்வேறு மாநிலங்களுக்கு இது அனுப்புகிறது. மீதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்."
என்று தகவல் தருகிறார், கோல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பார்த்தா பட்டாச்சார்யா.

மின் தேவை அதிகரிக்கும்போது அதை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. ஆனால், நிலக்கரி இல்லை என்பதுதான் பிரச்னை. இதற்கு முதல் காரணம், சர்வதேச அளவில் விலைகள் உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு டன் நிலக்கரி விலை 50 முதல் 60 டாலர் வரை இருந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் 100 டாலரைத் தொட்டது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவிலிருந்து நிலக்கரி ஏற்றுமதி தடைபட்டது. இதன் காரணமாக இப்போது ஒரு டன் நிலக்கரியின் விலை 150 முதல் 160 டாலர் வரை ஏறிவிட்டது.

அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையம்
வெளிநாட்டு நிலக்கரியின் விலை ஏறியதுமே, பல மாநிலங்களும் அதைக் குறைத்துக்கொண்டு இந்திய நிலக்கரியை அதிகமாக வாங்கத் தொடங்கின.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை நாடு முழுக்க அனுப்பி வைப்பது கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம். மத்திய எரிசக்தித் துறை இதை முறைப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மத்திய அரசு சில முடிவுகள் எடுத்தது. அதன்படி ஒவ்வொரு அனல் மின் நிலையமும் அடுத்த 24 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு நிலக்கரியைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்காத மின் நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இப்படி விதி இருந்தாலும், பல அனல் மின் நிலையங்களில் 10 நாள்களுக்குத் தேவையான அளவுக்கே நிலக்கரி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, மத்திய நிலக்கரி அமைச்சகம், எரிசக்தி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. நிலக்கரியை போதுமான அளவு வெட்டி எடுப்பதை உறுதி செய்வது நிலக்கரி அமைச்சகத்தின் வேலை. அதை எடுத்துச் செல்ல போதுமான ரயில்களைத் தருவது ரயில்வே வேலை. அதிக தேவை இருக்கும் இடங்களுக்கு அதிக நிலக்கரியை அனுப்பி வைப்பது எரிசக்தி அமைச்சகத்தின் வேலை. இந்த கமிட்டி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி, எல்லாம் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கிறது.

கடந்த ஆண்டைவிட இப்போது அதிகமாகவே நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. முன்பைவிட அதிக ரயில்கள் நிலக்கரி ஏற்றிப் போகின்றன. ஆனாலும், நிலக்கரியை ரயில்களில் ஏற்றுவது, அனல் மின் நிலையங்களுக்கு இறக்கி அனுப்புவது ஆகிய பணிகள் தாமதமாகின்றன. விலை உயர்வு காரணமாக வெளிநாட்டு இறக்குமதி கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு நம்மால் நிலக்கரி வெட்டி எடுக்க முடியவில்லை என்பதே உண்மை நிலை.

நிலக்கரி
நிலக்கரி
இன்னும் அதிக நிலக்கரி வெட்டி எடுக்கவும், அதை விரைவாக ரயிலில் ஏற்றி அனுப்பவும் தேவையான கட்டமைப்புகளை கோல் இந்தியா நிறுவனம் செய்ய முடியும். ஆனால், அதனிடம் நிதி இல்லை. பல்வேறு மாநில மின் வாரியங்களும் வாங்கிய நிலக்கரிக்கு சரியாகப் பணம் கொடுப்பதில்லை. ஏகப்பட்ட பாக்கி வைத்திருக்கின்றன. இந்த வகையில் கோல் இந்தியா நிறுவனத்துக்கு வரவேண்டிய தொகை, ரூ.26,480 கோடி.

மின் வாரியங்கள் ஏன் பணம் கொடுப்பதில்லை?

பல மாநில மின் வாரியங்கள் நஷ்டத்தில் தவிக்கின்றன. இவற்றின் மொத்த நஷ்டம், சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய். தமிழக மின் வாரியம் மட்டுமே 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. அரசு அறிவிக்கும் மானியங்கள், சலுகைகளை மின் விநியோக நிறுவனத்துக்கு அரசே கொடுத்து ஈடு செய்ய வேண்டும். அரசு அப்படிக் கொடுப்பதில்லை. அதனால் மின் வாரியங்கள் நிலக்கரிக்குப் பணம் கொடுக்கத் தாமதம் செய்கின்றன. அதனால் கோல் இந்தியா நிறுவனம் தடுமாறுகிறது.

"மின் வாரியத்துக்கு மானியங்களை ஒழுங்காகக் கொடுக்காத, நிலக்கரி கடனை அடைக்காத மாநிலங்கள், அங்கு மின் வெட்டு ஏற்படும்போது அதற்கு மற்றவர்களைப் பழிபோடக்கூடாது."
என்கிறார் மத்திய எரிசக்தித் துறைச் செயலாளர் அலோக் குமார்.

மின் விநியோக நிறுவனங்கள் பொருளாதார ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தும் விஷயம். 'மானியங்களைத் தவிர்ப்பது, மின் கட்டணத்தை உயர்த்துவது, மின் விநியோகத்தைத் தனியார் நிறுவனங்களுக்குத் தருவது போன்றவையே பொருளாதார ஒழுங்கைக் கொண்டுவரும்' என்பது அவர் சுற்றி வளைத்துச் சொல்ல வரும் விஷயம்.

மின் பற்றாக்குறை ஏற்படும்போது அவசரத்தில் வெளி மார்க்கெட்டில் தனியார் மின் நிறுவனங்களிடம் வாங்கி சமாளிக்கின்றன மாநிலங்கள். ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது, யார் அதிகம் பணம் தருகிறார்களோ, அவர்களுக்கே மின்சாரம் கிடைக்கும். கிட்டத்தட்ட ஏலம் போல நடக்கும். கடந்த அக்டோபரில் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஒரு யூனிட் ரூ.16.40 வரை விலை கொடுத்து வாங்கின மாநிலங்கள். இப்போதும் அதேபோன்ற சூழல் வந்திருக்கிறது.

காற்றாலை மின்சாரம்
காற்றாலை மின்சாரம்

இந்தியாவில் அதிகம் மின்சாரம் பயன்படுத்தும் மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத். இந்தியாவின் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்கை இந்த மூன்று மாநிலங்களே எடுத்துக்கொள்கின்றன. தொழில் வளர்ச்சி பெற்றவை என்பதால் இப்படி. இந்த மூன்று மாநிலங்களுமே இப்போது வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதாக அறிவித்துள்ளன. இது கப்பல்களில் வந்துசேர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

ஜூலை மாதம் வரை மின் தேவை அதிகரித்தபடிதான் இருக்கும். ஜூன் மத்தியில் காற்றாலை மின்சாரம் முழு அளவில் உற்பத்தியாகும்போது, இதை ஓரளவு சமாளிக்க முடியும். அதுவரை அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைத் தவிர்க்க முடியாது என்பதே இப்போதைய நிலவரம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism