Published:Updated:

வேட்டையாடப்படும் மாவோயிஸ்ட்டுகள்... 96-லிருந்து 41 ஆகக் குறைந்த மாவட்டங்கள்! - என்ன நடக்கிறது?

இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், `மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 96-லிருந்து 41 ஆகக் குறைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் என்ன நடக்கிறது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் பாஜக ஆட்சியிலும் தொடர்கின்றன. தற்போது, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் செப்டம்பர் 26-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 அமித் ஷா
அமித் ஷா

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஆந்திரா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் சார்பில் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், அந்தப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``கடந்த 40 ஆண்டுகளில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் 16,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 2010-ம் ஆண்டு மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தில் 96 மாவட்டங்கள் இருந்தன. அது கடந்த ஆண்டு, 53 மாவட்டங்களாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் மாவோயிஸ்ட் வன்முறையில் 85 சதவிகிதம் 25 மாவட்டங்களில் நடக்கிறது” என்றார்.

மாவோயிஸ்ட் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்
மாவோயிஸ்ட் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்

மேலும், ``மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போராட்டம் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் அடித்தட்டு மக்கள் வரை ஜனநாயகத்தைக் கொண்டு செல்லவோ, விளிம்புநிலைப் பகுதிகளை மேம்படுத்தவோ முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதல்வர்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், `மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 96-லிருந்து 41 ஆகக் குறைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் குறித்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். ``1969-ம் ஆண்டு அதி தீவிரவாதம் பேசி எங்கள் கட்சியிலிருந்து ஒரு குழு பிரிந்து சென்று நக்சல் இயக்கத்தை ஆரம்பித்தது. பின்னர், அவர்கள் தங்களை மாவோயிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டனர். எங்கள் கட்சியினர் மீது அவர்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அடிப்படையில், கொள்கைரீதியில் நக்சலிசத்தை நாங்கள் ஏற்பதில்லை. இங்கு முக்கியமாகப் பார்க்கவேண்டிய அம்சம் என்னவென்றால், ஒரு பகுதியில் நக்சலிசம் வளருகிறது என்றால், அந்தப் பகுதியில் மக்களிடம் கடுமையான அதிருப்தி நிலவுகிறது என்று அர்த்தம். பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகள், விவசாயக்கூலிகள் ஆகியோர் மத்தியில்தான் நக்சலைட்டுகள் வளர்ந்தனர்.

அருணன்
அருணன்

இந்தப் பிரச்னையை சட்டம், ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கக் கூடாது. மக்களிடமிருந்து மாவோயிஸ்ட்டுகளைத் தனிப்படுத்துவது அவசியம். அப்படியென்றால், மக்கள் ஆதரவு நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும். ஆனால், மாவோஸிட்டுகளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு, அப்பாவி மக்களைத் துன்புறுத்துவது நடக்கிறது. அதனால், அரசுமீது மக்களுக்கு ஆத்திரம் வரும். அதேநேரத்தில், மாவோயிஸ்ட்டுகள் மீது அந்த மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்படும். எனவே, இது சரியான அணுகுமுறை அல்ல.

மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களாக இருந்தாலும், சமவெளிகளில் வாழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களாக இருந்தாலும், அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வேலைகளில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அந்த மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை ஆராய்ந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அக்கறையுடன் மேற்கொள்ள வேண்டும். அப்படியான சிந்தனையும் அணுகுமுறையும் ஆட்சியாளர்களிடம் இல்லை.

மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அதை, மாவோயிஸ்ட்டுகள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்துகிறார்கள். இதை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்னையாகப் பார்த்து காவல்துறை, துணை ராணுவப்படை ஆகியவற்றின் மூலம் சரிசெய்துவிடலாம் என்பது தவறான பார்வை. இது, பிரச்னையைத் தீர்க்காது. மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து, மக்களின் மனங்களை அரசு வென்றெடுக்க வேண்டும்.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? `நகர்ப்புற நக்சலைட்டுகள்’ என்று புதிய சொல்லாடலைக் கண்டுபிடித்து, அப்படியான முத்திரையை மனித உரிமைப் போராளிகள்மீது குத்தி, சிறையில் அடைக்கிறார்கள். ஆயுதம் ஏந்தாமல், எந்தவிதமான பலாத்கார நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், கருத்துரீதியாக விமர்சனம் செய்பவர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களையும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்குக் கொடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் சிறையில் அடைக்கும் வேலைதான் நடக்கிறது. அப்படியான நடவடிக்கையால்தான் சமூக சேவகரான ஸ்டான் சுவாமி என்ற பாதிரியார் சமீபத்தில் மரணமடைந்தார். இது எந்த வகையில் நியாயம்?

ஸ்டேன் சுவாமி
ஸ்டேன் சுவாமி

மக்களிடமிருந்து மாவோயிஸ்ட்டுகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றால், அது ராணுவ நடவடிக்கை மூலமாகவோ போலீஸ் நடவடிக்கை மூலமாகவோ முடியாது. மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடுவது என்ற நடவடிக்கையை மட்டுமே தொடர்ந்தால், `நமக்காகக் குரல் கொடுத்தவர்களைக் கொன்றொழிக்கிறார்களே...’ என்ற எண்ணம்தான் மக்களுக்கு ஏற்படும். அதன் மூலமாக, இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அவர்கள் தோன்றுவதற்கான சூழல்தான் உருவாகும். பழங்குடியினர் உள்ளிட்ட அந்த மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயகரீதியாகப் போடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதும் முக்கியம். அதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு” என்றார் பேராசிரியர் அருணன்.

இது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகுவிடம் பேசினோம்.

``2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமர் ஆனவுடன், அவரது முதல் பேச்சில், `மாவோயிஸ்ட்டுகளால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து’ என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள் பலம் இழந்திருந்தனர் என்பதுதான் யதார்த்தம். பீகார் போன்ற மாநிலங்களில் தேர்தல் அரசியலுக்கு மாறுவதென்று மாவோயிஸ்ட்டுகள் முடிவெடுத்தனர். மற்ற இடங்களில் அவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்துவிட்டனர். அப்படியிருக்கும்போது, மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து என்று மன்மோகன் சிங் சொன்னார்.

தியாகு
தியாகு

மன்மோகன் சிங் அப்படிச் சொன்ன பிறகுதான், ஆந்திரா, வங்காளம் இரண்டு இடங்களில் மட்டுமே இருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தினர், அதுவரை இல்லாத மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வேகமாக வளர்ந்தார்கள். காரணம், வனப் பகுதிகளில் சுரங்கங்கள் அமைப்பதற்காகப் பழங்குடிகளை வெளியேற்றுவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது. கனிமங்களைத் தோண்டியெடுப்பதற்காக, காலங்காலமாக காடுகளில் வாழ்ந்த மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தபோது, அவர்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் வந்தனர். எதிர்த்து போராட சக்தியற்றவர்களாக இருந்த மக்களை ஆதரிப்பவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும் மாவோயிஸ்ட்டுகள் மாறினர். மாவோயிஸ்ட்டுகள் வளர்ந்ததற்கு அரசின் இத்தகைய அணுகுமுறையும் நடவடிக்கைகளும்தான் காரணம்.

தேனி முதல் ஒடிசா வரை! - மாவோயிஸ்ட் வேல்முருகனின் கதை...

`மாவோயிஸ்ட்டுகளில் 99 சதவிகிதம் பேர் பழங்குடிகள். பழங்குடிகளில் 99 சதவிகிதம் பேர் மாவோயிஸ்ட்டுகள் அல்லர்’ என்று எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியும் எழுதியும் இருக்கிறார். அவரது இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது. பழங்குடிகள் போராடுகிறார்கள். அவர்கள், மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். மன்மோகன் சிங் ஆட்சியில் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது `பச்சை வேட்டை’ என்ற பெயரில் மிகப்பெரிய அளவுக்குத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று சொன்னால், இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்தப்போகிறார்கள் என்று அர்த்தம்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

வன்முறைக்கான பொறுப்பு அரசுதான். அந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் அளவுக்கு மோதல் நடக்கிறது. தடுக்கி விழுந்தால் ராணுவம் என்கிற அளவுக்கு அங்கு ராணுவத்தைக் குவிக்கிறார்கள். அப்படியென்றால், அடக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்” என்றார் தியாகு.

சத்தீஸ்கர் பயங்கரம்... தொடரும் மாவோயிஸ்ட் தாக்குதல்... என்ன செய்யப்போகிறது அரசு?

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை. அது அப்பட்டமான வன்முறைப் பாதை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாதாரண மக்களை ஜனநாயகப் பாதையிலிருந்து விடுவித்து, அவர்களை வன்முறைப் பாதைக்கு மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே, அவர்களை ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்கிறது. குறிப்பாக, மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அவர்களின் செல்வாக்கு குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், மாவோயிஸ்ட் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதில் அதிகமான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என்றாலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் முக்கியம். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மக்களின் வளர்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் எடுக்கப்படுபவை. பழங்குடி மக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்பது போன்ற கருத்துகள் தவறானவை. அனைத்துப் பகுதி மக்களுக்காகவும்தான் பா.ஜ.க அரசு செயல்பட்டுவருகிறது” என்றார் நாராயணன் திருப்பதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு