Published:Updated:

`குண்டுகள் விழும்போது பதுங்குக் குழிகளில் படிப்போம்!’- போர்ச் சூழலில் வாழும் காஷ்மீர் குழந்தைகள்

குழந்தைகள்
குழந்தைகள்

பள்ளிகளுக்கு வெளியே குண்டுகள் விழுவது வழக்கமான ஒன்று என்கின்றனர் குழந்தைகள். அவர்களின் ஆசைகளும் சாதாரண பகுதியில் வசிக்கும் குழந்தைகளைப்போலவே இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தானையொட்டிய சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகில் தாராதி எனும் கிராமம் உள்ளது. போருக்கான பதற்றம் எப்போதும் நிலவும் சூழலுள்ள கிராமமாக தாராதி அறியப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இங்குள்ள மக்களுக்கு கடுமையான ஆண்டாக அமைந்தது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் முதல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது வரை அதிக பிரச்னைக்குரிய நிகழ்வுகள் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் இருமடங்காக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிராமத்து மக்களும் அதிகாரிகளும் ``இங்கு அமைதியான சூழல் என்பது எப்போதும் இல்லை” என்கின்றனர்.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல்களில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் குழந்தைகளும் அடங்குவர். உடலளவில் குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குள்ளாகிறது.

காஷ்மீரின் எல்லையில் சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட 16 வயது மாணவர்தான் முகமது இம்ரான் கான். பாதிக்கப்பட்ட கால்களுடன் தனது பள்ளிக்கு வெளியே அவர் அமர்ந்து, காஷ்மீரின் எல்லைக்குட்பட்ட திறந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஊன்றுகோல்கள் இருந்தன.

சம்பவம் குறித்து இம்ரான் பேசுகையில், ``நான் குண்டுகளால் பாதிக்கப்பட்டேன். அப்போது, என்னுடன் மாமாவும் என் நண்பனும் இருந்தார்கள். குண்டு, எங்களுக்கு அருகில் விழும்போது சாலை அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தோம். தாக்குதலுக்குப் பின் என்னால் பள்ளிக்கோ மற்ற வேலைகளுக்கோ செல்ல முடியவில்லை. நாங்கள்தான் எங்களை தற்காத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இன்னும் நான் அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டு வரவில்லை. அதற்குப் பின், நான் பள்ளிகளுக்குச் செல்லவேயில்லை. மாறாக, மருத்துவமனைகளில்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்” என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

முகமது இம்ரான் கான்
முகமது இம்ரான் கான்
india today

இம்ரன் கானின் தாய் இந்தச் சம்பவத்துக்குப் பின் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``எங்களால் எங்கும் செல்ல முடியாது. எங்களுக்கு வேறு தங்கும் இடங்களும் கிடையாது. எனக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

போர்ச் சூழலில் வாழும் குழந்தைகளுக்கு கல்வியும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. தாராதியில் வாழும் மற்ற குழந்தைகளும் தங்களது கல்வி குறித்து பேசியுள்ளனர். அதில், ``தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும்போது எங்களது பள்ளிகள் மூடப்பட்டுவிடும். பெற்றோர்களும் எங்களை வெளியே செல்லவிட மாட்டார்கள்” என்று 10 வயதுச் சிறுவன் ஷப்னாஸ் கௌசர் அதிர்ச்சியுடன் கூறுகிறார்.

`மாணவர்களுக்கு எதிராக அரசு போர் நடத்துகிறது!’ - ஜெ.என்.யு தாக்குதலால் கொதித்த கன்ஹையா குமார்

பள்ளிகளுக்கு வெளியே குண்டுகள் விழுவது வழக்கமான ஒன்று என்கின்றனர் குழந்தைகள். சாதாரண பகுதியில் வசிக்கும் குழந்தைகளைப் போலவே அவர்களுக்கும் கனவுகள் இருக்கின்றன. பெண் குழந்தைகளில் சிலர், மருத்துவராகவும் பத்திரிகையாளராகவும் விருப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அஃபியா நாஸ் எனும் மாணவி பேசும்போது, ``குண்டுகள் விழும்போது நாங்கள் பதுங்குக் குழிகளில் அமர்ந்து படிப்போம். எனவே, எங்கள் படிப்பு பாதிப்படையாது. எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது ஆசை” என்கிறார். ஒரே நேரத்தில் சுமார் 100 குழந்தைகள் தாக்குதல்கள் நடக்கும் நேரங்களில் தங்களது படிப்பைத் தொடர பதுங்குக் குழிக்குச் செல்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள்
குழந்தைகள்
india today

தங்கள் வாழ்க்கை குறித்துப் பேசும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்ரம், ``ஒவ்வொரு கணமும், அது பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் எங்களுக்கு போரைப் போன்றதுதான். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியுமில்லை. நாங்கள் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

காஷ்மீர் கிராமங்களில் நிலவும் சூழல் குறித்து கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ஹர்ஷா குப்தா,``இங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் ஏவுதளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்தத் தகவல் தெரிந்து, அவற்றை அடையாளமும் கண்டிருக்கிறோம். ஊடுருவல்காரர்களுக்கு உதவ பாகிஸ்தானால் இவை பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு வேலைகளுக்காக பாகிஸ்தான் இங்குள்ள வீடுகளைப் பயன்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

News credit : India today

`3.18 லட்சம் குழந்தைகள் மாயம்!' -   மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்
அடுத்த கட்டுரைக்கு