Published:Updated:

அஸ்ஸாம் - மிசோரம் பிரச்னையின் ஆணிவேர் என்ன, தீர்வு ஏற்படுமா?!

கார்த்தி

மிசோரம் என்பது அசாமின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது. அப்போது மிசோரமின் பெயர் லுஷாய் மலைகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

150 ஆண்டுகால அஸ்ஸாம் மிசோர பிரச்னை மீண்டும் ஓர் உச்சத்தை இந்த வாரம் எட்டியிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை ஆறு அஸ்ஸாம் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கின்றனர். அசாமின் சசார் மாவட்டத்திலும், மிசோரத்தின் கொலாசிப் மாவட்டத்திலும் வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்கள் எந்த மாநிலம் எங்கிருக்கிறது, எது எதனுடன் தன் எல்லைகளைப் பகிருந்திருக்கிறது என்பதே சற்று சிக்கலானது என்கிற நிலையில் அஸ்ஸாம் - மிசோரம் பிரச்னைகளின் ஆணிவேரை உள்நோக்குவோம்.

தற்போதைய உயிர்பலி அசாமுக்கு என்பதால், மிசோரம் மக்களின் மீதுதான் அனைத்து கைகளும் நீள்கின்றன. ஆனால், இந்தப் பிரச்னையை அப்படி இறுதியிட்டு ஒரு பக்கமாய்த் தீர்ப்பை எழுதிவிட முடியாது. ஏனெனில் இது இன்றோ நேற்றோ ஆரம்பித்தது அல்ல.

அஸ்ஸாம் - மிசோரம் எல்லைக்கோடுகள்!

மிசோரம் என்பது அசாமின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது. அப்போது மிசோரமின் பெயர் லுஷாய் மலைகள். இன்று அசாமுக்கு, மிசோரத்துக்குமான எல்லைக்கோடு என்பது 165 கிலோமீட்டர்கள். எல்லைகள் இரண்டு முறை பிரிக்கப்பட்டிருக்கின்றன. 1875-ம் ஆண்டும், அதன் பின்னர் 1933-ம் ஆண்டும் பிரிக்கப்பட்டன. தற்போது நடக்கும் பிரச்னைகளின் ஆதிப்புள்ளி இந்த 1933-ம் சம்பவம் தான். லுஷாய் மலைகளுக்கும், மணிப்பூருக்கும் இடையேயயான எல்லைகள் பிரிக்கப்பட்டன.

அப்போதே மிசோரம் தலைவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. 1970-களில் யூனியன் பிரதேசமாக இருந்த மிசோரம், மீண்டும் மாநிலமாக மாற்றப்படுகிறது. 'இந்தப் பிரிவுகள் தவறானவை... எங்களைக் கலந்தாலோக்கிமால் எடுக்கப்பட்டவை' என 2018-ம் ஆண்டும் மிசோரம் தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1950களில் அஸ்ஸாம்
1950களில் அஸ்ஸாம்
wiki commons

எல்லைக்கோடுகள் பிரச்னை என்பது அசாமுக்கும், மிசோரத்துக்கும் மட்டுமானது அல்ல. அஸ்ஸாம் அதன் எல்லைக்கோடுகளை நாகாலாந்து, அருணாச்சல் பிரதேசம், மேகாலயாவுடனும் பகிர்ந்திருக்கிறது. நாகாலாந்துடனும் கடந்த காலங்களில் வன்முறை வெடித்திருக்கிறது. 12 இடங்களில் இந்த எல்லைப் பிரச்னை அசாமுடன் இருப்பதாக மேகாலயா அரசு தெரிவித்திருக்கிறது. அருணாச்சல் பிரதேசத்துக்கும், அசாமுக்குமான எல்லைப் பிரச்னைகள் உச்சநீதிமன்ற வழக்குகளில் இருக்கின்றன.

அஸ்ஸாம் - மிசோரம்: மோதிக்கொண்ட முதல்வர்கள்; தொடரும் எல்லைப் பிரச்னை  - பின்புலம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய பிரச்னை!

நாங்கள் பிரச்னையை தீர்ப்பதற்காகச் சென்றோம் என்கிறது அஸ்ஸாம். மிசோரமோ, இவர்கள் அத்துமீறி நுழைந்தார்கள் எனக் குற்றம் சாட்டுகிறது. ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஐஜி தலைமையில் 200 காவல்துறையினர் ஏன் செல்ல வேண்டும் என்கிறது மிசோரம். அத்துமீறல்கள் பிரச்னை எழுவதும் முதல்முறையல்ல.

இரு மாநில முதல்வர்களும் மாறி மாறி ட்விட்டரில் திட்டிக்கொண்டதை, உலகமே கண்டது ஓர் அவலம். தற்போது இருவருமே அமைதி நிலவ வலியுறுத்திவருகிறார்கள். மாநில அளவிலான எல்லைப் பிரச்னைகள் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள விரும்புகிறோம் என்கிறது மிசோரம். மிசோரம் மீண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என அஸ்ஸாம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அஸ்ஸாம் முதல்வரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவோ, இதை அங்கு நிகழும் மற்ற பிரச்னைகளுடன் இணைத்திருக்கிறார். போதை மருந்துகள் மியான்மரிலிருந்து மிசோரம் வழியாகத்தான் அசாமுக்கு வருகிறது. அசாமில் தற்போது பசுவதைச் சட்டம் அமலில் இருக்கிறது. போதை மருந்துகளைத் தடை செய்ததும், பசுவதை சட்டமும், கிறிஸ்துவர்கள் அதிகமிருக்கும் மிசோரம் மக்களை வன்முறைக்குத் தூண்டியிருக்கும் என இதற்குள்ளும் அரசியல் செய்கிறார் அவர். மிசோரத்தில் 87% கிறிஸ்துவர்கள் உள்ளனர் என்கிறது 2011 சென்சஸ்.

Assam - Mizoram border dispute
Assam - Mizoram border dispute
PTI

மிசோரம் மாநிலத்துக்குள் நுழைவதற்கான தேசிய நெடுஞ்சாலை 306-யும், ரயில்வே பாதைகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள் அஸ்ஸாம் போராட்டக்காரர்கள். போராட்டம் என்கிற பெயரில், ஒரு மாநிலத்துக்குள் நுழையக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளை சேதப்படுத்துவது சட்டமீறல் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் மிசோரத்தின் உள்துறை செயலாளரான லால்பியாக்சங்கி.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த நாலு கிலோமீட்டர் எல்லையில் மாநில காவல்துறையினர் திரும்பப்பெறப்பட்டிருக்கிறார்கள். மத்திய காவல்துறை அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இந்த நாலு கிமீ தூரமும் NO MAN'S LAND என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே வேளையில், மிசோரத்தில் பணிச்சூழல் காரணமாக இருக்கும் அஸ்ஸாமிய மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அஸ்ஸாம் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதே போல், அஸ்ஸாம் மக்கள் யாரும் மிசோரத்துக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

பிரச்னையைத் தற்காலிமாகக்கூட முடித்துவிடக்கூடாதென அஸ்ஸாம் அரசு நினைக்கிறதோ என்கிற எண்ணமும் எழாமல் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு