Published:Updated:

`கலவரத்தைத் தூண்டினாரா கபில் மிஸ்ரா?' - பா.ஜ.க-விலிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்

கபில் மிஸ்ரா - கௌதம் கம்பீர்
News
கபில் மிஸ்ரா - கௌதம் கம்பீர்

கபில் மிஸ்ரா, டெல்லியைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மிக முக்கிய ஐக்கானா இருப்பவர். இவர் கூறிய கருத்துகள்தான் டெல்லி கலவரத்துக்குக் காரணமா?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், டிசம்பர் மாதம் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் தினம் தினம் போராட்டம் நடத்திவருகின்றனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், ஷாகின்பாக் தொடர் போராட்டம், பல இடங்களில் கலவரம், வன்முறை போன்ற அனைத்து சம்பவங்களும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை வைத்தே நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, இதே சட்டத்தை முன்வைத்து தற்போது டெல்லி மீண்டும் கலவர பூமியாகியுள்ளது. வடகிழக்கு டெல்லியில், திரும்பும் திசையெல்லாம் கற்களை வீசித் தாக்குதல், போலீஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டுகள், மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு, மத ரீதியிலான தாக்குதல், வாகனங்கள் எரிப்பு என்று இந்தியாவின் தலைநகரமே சொல்ல முடியாத வேதனையை அனுபவித்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், இந்த கலவரத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க-வின் எம்.பி-யுமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். டெல்லியைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மிக முக்கிய ஐக்கானா இருப்பவர், கபில் மிஸ்ரா. இவர், சமீபத்தில் நடந்த டெல்லி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். இவர் கூறிய கருத்துகள்தான் கலவரத்துக்குக் காரணம் என்று பல எதிர்கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் பகுதியில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள், அங்குள்ள மெட்ரோ நிலையத்துக்கு அருகில் கூடி போராட்டம் நடத்தினர். இதைக் கண்டித்த கபில் மிஸ்ரா, `ஷாகின் பாக் போல டெல்லியின் மற்றொரு சாலையும் மறைக்கப்பட்டுவிட்டது. இப்படியே போனால், பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாது’ என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில், `ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதே ஜாஃப்ராபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என ட்விட்டரிலேயே அழைப்பு விடுத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் அழைப்பு விடுத்தபடியே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் வந்தனர். எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுவே பின்னர் மோதலாக மாறியது.

அப்போது தொடங்கிய மோதல்தான், இன்று 13 பேரை பலிகொண்டுள்ளது. இருந்தும் அதே ஞாயிற்றுக்கிழமை, மிஸ்ரா ஆர்ப்பாட்டத்தில் தான் பேசும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், `என் ஆதரவாளர்கள் அமெரிக்க அதிபரின் வருகைக்காக மட்டுமே அமைதி காக்கிறார்கள்; இல்லையென்றால், டெல்லி போலீஸ் உட்பட யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்க மாட்டோம். சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துச் சாலைகளையும் நாங்கள் விடுவிப்போம்” என்று பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது, டெல்லியில் கலவரம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், மீண்டும் இதுகுறித்து பேட்டியளித்துள்ள மிஸ்ரா, ``எதற்கும் வன்முறை தீர்வாகாது, மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். சி.ஏ.ஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் முதலில் அமைதிகாக்க வேண்டும். டெல்லியில் சகோதரத்துவத்துக்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இவரின் பேச்சைக் கண்டித்துள்ள கௌதம் கம்பீர், ``கபில் மிஸ்ராவாகட்டும் இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், டெல்லியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது யாராக இருந்தாலும் அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷாகீன் பாக் போராட்டம் ஒரு மாதமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. நம் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்திருக்கும் இந்த வேளையில் இங்கு வன்முறை நடப்பது சரியானதல்ல. அமைதியாகப் போராடினால் எந்தப் பிரச்னையும் இல்லை. மாறாக, கற்களை கையில் எடுத்தால்தான் விளைவு ஆபத்தாக உள்ளது. ஒருவர் துப்பாக்கியுடன் எப்படி தைரியமாக காவலர்கள் முன்பே நிற்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீர், கபில் மிஸ்ரா ஆகிய இருவருமே பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். சொந்த கட்சியைச் சேர்ந்தவர்மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பீர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.