Published:Updated:

`ராணுவத்தினரின் குடும்பங்களுக்காகப் பாடுபட்டவர்!' - யார் இந்த மதுலிகா ராவத்?

பிபின் ராவத் - மதுலிகா ராவத்
News
பிபின் ராவத் - மதுலிகா ராவத் ( Twitter )

பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தின் மறைவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் பைலட், கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பிபின் ராவத், மதுலிகா ராவத்
பிபின் ராவத், மதுலிகா ராவத்
Twitter/@adgpi

முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உயரதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கல்களைப் பதிவுசெய்துவருகின்றனர். அதேசமயத்தில், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தின் மறைவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுலிகா ராவத் - யார்?

* மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் பிறந்தவர் மதுலிகா. தன் ஆரம்பப் பள்ளிப் படிப்பை ஷாதோலில் பயின்றவர், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை குவாலியரில் முடித்தார். தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி பிரிவில் பட்டம் பெற்றார்.

* மதுலிகாவின் தந்தை ம்ரிகேந்திர சிங் (Mrighendra Singh), காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டவர். 1967-72 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். மதுலிகாவின் தந்தை இப்போது உயிருடன் இல்லை. அவரின் தாயார் மட்டும் ஷாதோலில் வசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. மதுலிகாவுக்கு ஹர்ஷ்வர்தன் சிங், யஷ்வர்தன் சிங் என இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள்.

* 1986-ம் ஆண்டு பிபின் ராவத்தை மணந்துகொண்டார் மதுலிகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னொருவர் படித்துக்கொண்டிருக்கிறார்.

* 1966-ம் ஆண்டு, `Army Wives Welfare Association' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான நலச் சங்கத்தின் தற்போதைய தலைவராகச் செயல்பட்டுவந்தார் மதுலிகா. இந்தச் சங்கத்தின் மூலம் ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு நலத் திட்டங்களைச் செய்துவந்தார்.
மதுலிகா ராவத்
மதுலிகா ராவத்
Twitter/@adgpi

* நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்தச் சங்கம். கணவனை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு உதவிகளை இந்தச் சங்கம் செய்துவருகிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கும் வேண்டிய உதவிகளை இந்தச் சங்கத்தின் உதவியோடு மதுலிகா செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

* ராணுவ வீரர்களின் குடும்பப் பெண்களுக்குத் தையல், அழகுக்கலை, பின்னல் கலை, கேக், சாக்லேட் தயாரித்தல் உள்ளிட்ட வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை உருவாக்கியவர் மதுலிகா எனவும் கூறப்படுகிறது.

``தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தவர் மதுலிகா. பிபின் ராவத், இந்திய ராணுவத்தை மேம்படுத்திவந்தார். மதுலிகா, ராணுவத்தினரின் குடும்பங்களை மேம்படுத்தும் பணிகளைச் செய்துவந்தார். இருவரின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது'' என்கிறார்கள் மதுலிகாவுக்கு நெருக்கமானவர்கள்.