Published:Updated:

`இதைக் கூற அவருக்கு எப்படி தைரியம் வந்தது?’ - இந்திரா ஜெய்சிங்கை சாடிய நிர்பயாவின் தாய்

நிர்பயா தாய்
நிர்பயா தாய்

குற்றவாளிகளை மன்னித்து மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் எனக் கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நிர்பயா வழக்கு விசாரணை கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கைதான 6 குற்றவாளிகளில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்றொருவர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள நான்கு குற்றவாளிகளுக்கும் வரும் 22-ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

நிர்பயா தாய்
நிர்பயா தாய்

அதை எதிர்த்து குற்றவாளிகள் நான்கு பேரும் வேறு வேறு காலகட்டத்தில் தங்களது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முகேஷ் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார். அதையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதனால் ஏற்பட்ட சிறு பிரச்னையால் இவர்களின் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

எவ்வளவு நீளக் கயிறு... என்னென்ன பரிசோதனைகள்... எப்படி நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை? #Nirbhaya

இந்த நிலையில், `ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை சோனியா மன்னித்ததுபோல நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்திரா ஜெய்சிங்
இந்திரா ஜெய்சிங்

வழக்கறிஞர் இந்திராவின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, ``எனக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்திரா ஜெய்சிங் யார். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மொத்த நாடும் விரும்புகிறது. இவரைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய உண்மையான நீதி மறுக்கப்படுகிறது.

இப்படிக் கூறுவதற்கு இந்திராவுக்கு எப்படி தைரியம் வந்தது என்பதை என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பலமுறை அவரை நேரில் பார்த்துள்ளேன். ஆனால், என் நலன் பற்றி ஒருமுறைகூட அவர் விசாரித்தது இல்லை. இன்று குற்றவாளிகளுக்கு மட்டும் ஆதரவாகப் பேசுகிறார். இவரைப் போன்ற ஆட்கள், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவரால்தான் நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையாமல் உள்ளது” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.

நிர்பயா தாயின் பேச்சு தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இந்திரா ஜெய்சிங், ``ஆஷா தேவியின் உணர்வுகளை நான் முழுமையாக மதிக்கிறேன். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று நளினியை மன்னித்த சோனியா காந்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுவது சிறந்தது என்றுதான் கூறுகிறேன். நாங்கள் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். ஆனால், மரண தண்டனைக்கு எதிராக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின் செல்ல