Published:Updated:

`தொடக்கம் தந்த சென்னை ; குரலற்றவர்களின் குரல்!’ - நீதியரசர் முரளிதரின் பின்னணி

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றி வந்த மூத்த நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவந்த மூத்த நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து, நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இவரை பணியிட மாற்றம் செய்யலாம் என்று கடந்த 12-ம் தேதியே உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இதற்கிடையில், இரு நாள்களுக்கு முன்பு நடந்த டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி போலிஸை கடுமையாகக் கடிந்துகொண்டார். இந்நிலையில், நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இடமாற்ற அறிக்கை
இடமாற்ற அறிக்கை

குரலில்லாதவர்களின் குரல்!

நீதிபதி முரளிதர், முதன் முதலில் 1984 -ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து, உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகிய இடங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். போபால் எரிவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் நர்மதா ஆற்றில் அணைகள் கட்டப்பட்டதால் இடம் பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாகவும் ஆஜராகி வாதாடியுள்ளார். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், பல்வேறு பொதுநல வழக்குகளில் ஆஜராகி குரலற்ற ஏழை மக்களின் குரலாக இருந்து அவர்களுக்கு நீதி பெற்றுத்தந்துள்ளார். இவர், மனித உரிமைகள் ஆணையம், தேர்தல் ஆணையம் போன்ற துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

`பா.ஜ.க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்; வன்முறையைக் கண்டித்த நீதிபதி!' - இடமாற்ற  சர்ச்சை #DelhiRiots

நீதி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கான வெற்றி!

16 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய முரளிதர், 2006-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு முக்கிய வழக்கு விசாரணையின் அமர்வில் இடம்பெற்றுள்ளார். நீதிபதி முரளிதர், இதுவரை 3,100 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவரது பல தீர்ப்புகள் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் நீதிக்கான வெற்றிகளாகப் பாராட்டப்பட்டுள்ளன.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிந்துகொள்வது தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விசாரணைக்கு உட்பட்ட கைதிகள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் மற்றும் குடிசைவாசிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் அளவை பெரிய அளவில் விரிவுபடுத்தும் தீர்ப்புகளை அறிவித்துள்ளார். இவரது சில தீர்ப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் இருந்துள்ளன.

நீதிபதி முரளிதர், டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில், சட்டத்துறைக்கு தன்னால் இயன்ற அளவு மாறுபட்ட பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். அதேபோல், வழக்கறிஞர்கள் தன்னை `மை லார்ட்’ மற்றும் ‘மை லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை விரும்பாமல் அதை மாற்றினார். நீதித்துறையின்மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பணியாற்றியவர் என்கிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள். தற்போது, இவரின் இடமாற்றம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 36 வருடங்களாக நீதித்துறையில் பணியாற்றி வரும் இவரின் பதவிக்காலம், 2023-ம் ஆண்டு முடிவடைகிறது.

அடுத்த கட்டுரைக்கு