Published:Updated:

தொடர் கனமழை... தண்ணீர் தேசமான பெங்களூரு..! - யார் காரணம்?!

பெங்களூரு

``காங்கிரஸ் ஆட்சியில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் நீர்நிலைகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.” - பசவராஜ் பொம்மை

தொடர் கனமழை... தண்ணீர் தேசமான பெங்களூரு..! - யார் காரணம்?!

``காங்கிரஸ் ஆட்சியில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் நீர்நிலைகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.” - பசவராஜ் பொம்மை

Published:Updated:
பெங்களூரு

கர்நாடகாவில் ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அந்த மாதத்தில் மழைப் பொழிவு பெரிதாக இல்லாவிட்டாலும், ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பின்னர் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உட்பட நீர்நிலைகள் நிரம்பின.

கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. இதனால், ஐடி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார்கள்.

பெங்களூரு
பெங்களூரு

இந்தச் சூழலில், கடந்த 4-ம் தேதி இரவு மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராமநகரில் பெய்த கனமழையால் ஐந்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகள் நீரில் மூழ்கி வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு அடிக்கும் மேல் மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாதேவபுரா, பொம்மனஹள்ளியில் கனமழை வெளுத்து வாங்கியது. அன்றைய தினம் 130 மில்லிமீட்டர் மழை பதிவானது. பொதுவாக, பெங்களூரில் ஒரு பகுதியில் மழை பெய்தால், மற்றொரு பகுதியில் மழை இருக்காது என்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.

பெங்களூரு
பெங்களூரு

ஆனால், இந்த முறை அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மிதக்கின்றன. பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து அடுக்குமாடிக் கட்டடங்களைச் சூழ்ந்தது. 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் மழை பெய்திருக்கிறது. சர்ஜாப்புரா சாலையிலுள்ள ரெயின்போ லே-அவுட்டில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டுவருகிறார்கள். பல இடங்களில் ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் மக்கள் வேலைக்குச் சென்று வருகிறார்கள். எப்போது இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நடந்த மழைவெள்ள பாதிப்புக்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளைக் கட்டியதன் விளைவாகத்தான் பெங்களூரு தண்ணீரில் மூழ்கியதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

இது குறித்து, பெங்களூருவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ``கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் மற்றும் அவற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏரிகளை நிர்வகிக்கும் பணியை சவாலாக ஏற்று, மேற்கொண்டுவருகிறோம். பெங்களூரில் கடந்த 90 ஆண்டுகளில் இத்தகைய மழை பெய்யவில்லை. அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. சில ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறிவருகிறது. மழையால் ஒட்டுமொத்த பெங்களூரும் பாதிக்கப்பட்டிருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது தவறு. மகாதேவபுரா, சர்ஜாப்புரா பகுதிகள்தான் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாதேவபுராவில் மட்டும் 69 ஏரிகள் உள்ளன. அந்தப் பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது" என்றார்.

இதேபோல், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் பெங்களூரு மாவட்ட நிர்வாகம் சார்பில், நீராதாரங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து முதற்கட்ட ஆய்வு நடந்தது. அப்போது, 837 ஏரிகளின் பரப்பளவு 22 ஆயிரத்து 810 ஏக்கர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், 4,500 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. எனவே, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதும், அதை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியதும்தான் பெங்களூரின் இந்த நிலைக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீர்நிலைகளை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே மழை வெள்ளம் தேங்காது என்கின்றனர்.