Published:Updated:

`முகத்தை மறைத்திருந்த பெண் யார்?’ - ஜே.என்.யூ தாக்குதல் விசாரணையில் போலீஸ் அறிவிப்பு!

ஜே.என்.யு
ஜே.என்.யு

ஜே.என்.யூ-வில் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்திய கும்பலில் செக் ஷர்ட் அணிந்து கையில் ஆயுதத்துடன் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நீலநிற கைக்குட்டையை வைத்து தன்னுடைய முகத்தையும் மறைத்திருந்தார்.

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியிலுள்ள மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடந்த ஜனவரி 5 - ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில், ஜே.என்.யு மாணவ அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷ் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக கிடைத்த வீடியோ மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் முகமூடி அணிந்த நபர்கள் யாரென காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மூகமூடி அணிந்த கும்பலில் இருந்த பெண்ணை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஆய்ஷி கோஷ் ஜே.என்.யு  மாணவி மீது தாக்குதல்
ஆய்ஷி கோஷ் ஜே.என்.யு மாணவி மீது தாக்குதல்

ஜே.என்.யு-வில் வன்முறை நடந்தது தொடர்பாக வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இதில், செக் ஷர்ட் அணிந்து கையில் ஆயுதத்துடன் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நீலநிற கைக்குட்டையை வைத்து தன்னுடைய முகத்தையும் மறைத்திருந்தார். இந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினருமான கோமல் ஷர்மாதான் அந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் இருந்த மேலும் இரண்டு மாணவர்களான அக்‌ஷத் அவஸ்தி மற்றும் ரோஹித் ஷா ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐபிசி பிரிவு 160-ன் கிழ் வழக்குப் பதிவு செய்து மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏ.பி.வி.பி-யின் மாநில செயலாளர் சித்தார்த் யாதவை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புகொண்டபோது, ``கோமல் ஷர்மா எங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்தான். சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ட்ரோலிங் செய்ய ஆரம்பத்ததிலிருந்து எங்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களுக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி கோமல் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கிறார். காவல்துறையினரிடமிருந்து சம்மன் பெற்றாரா என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

`எனது மகளைப் பின்வாங்கச் சொல்லமாட்டேன்!’ - ஜே.என்.யு  மாணவி ஆய்ஷி கோஷின் தாய்

தொடர்ந்து பேசிய அவர், ``குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், அவர்மீது படிந்துள்ள கரைகள் நீக்கப்படும். அவர் உண்மையிலேயே எதாவது செய்திருந்தால் அதுவும் கவனிக்கப்படும். இதனிடையில், ஏ.பி.வி.பி அமைப்பினரும் கடந்த 5-ம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எங்களுடைய உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றார்.

ஜே.என்.யு
ஜே.என்.யு

மேலும், ரோஹித் ஷா எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்றும் அவஸ்தி ஏ.பி.வி.பி-யின் உறுப்பினர் இல்லை என்றும் கூறிவருகின்றனர். அவஸ்தி மற்றும் ஷா ஆகிய இருவரும் ஜே.என்.யு-வில் முதலாமாண்டு பயின்று வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை தொடர்பாக ஜே.என்.யு-வைச் சேர்ந்த சுசேதா தாலுக்தார் மற்றும் பிரியா ரஞ்சன் ஆகிய இருவரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளால் சுமார் இரண்டுமணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பேசிய சுசேதா தாலுக்தார், ``சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு ஒன்றரைப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை கொடுத்தேன். விசாரணையில், தாக்குதல் நடந்த ஜனவரி 5-ம் தேதி நான் எங்கு இருந்தேன், காயமடைந்த மாணவர்களின் விவரங்கள், தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய அடையாளங்கள் ஆகியவற்றை என்னிடம் கேட்டனர்” என்றுக் கூறியுள்ளார். பிரியா ரஞ்சனும் ஒருபக்க அறிக்கையை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு