Published:Updated:

``பின்லேடனை போன்று யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் தூக்கிப்போடவில்லை?!" - ஆதித்ய தாக்கரே கேள்வி

ஆதித்ய தாக்கரே

``தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டப் பிறகு அவரின் உடலை அமெரிக்கா கடலில் தூக்கிப்போட்டதுபோல், தீவிரவாதி யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் போடவில்லை?” என்று ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

``பின்லேடனை போன்று யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் தூக்கிப்போடவில்லை?!" - ஆதித்ய தாக்கரே கேள்வி

``தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டப் பிறகு அவரின் உடலை அமெரிக்கா கடலில் தூக்கிப்போட்டதுபோல், தீவிரவாதி யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் போடவில்லை?” என்று ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

Published:Updated:
ஆதித்ய தாக்கரே

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. அதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததையடுத்து நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரின் உடல் மும்பைக்குக் கொண்டுவரப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சமாதி சமீபத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில்தான் யாகூப் மேமன் சமாதி அழகுபடுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பூ, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சமாதிப் புகைப்படங்களையும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து உடனே அந்தச் சமாதியில் இருந்த பூக்கள் மற்றும் மின் விளக்குகளை போலீஸாரே நேரில் சென்று அப்புறப்படுத்தினர். இதற்கு பதிலளித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, ``ஒசாமா பின்லேடனைப்போல் யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் தூக்கிப்போடவில்லை. யாகூப் மேமன் உடல் மும்பையில் புதைக்கப்படும்போது மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யாகூப் மேமன் சமாதி
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யாகூப் மேமன் சமாதி

அது போன்ற மரியாதை ஏன் கொடுக்கப்பட்டது... இதற்காக எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதே போன்று மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``பாஜக அரசு ஏன் யாகூப் மேமன் உடலை அவனது குடும்பத்திடம் கொடுத்தது. இந்தப் பிரச்னையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த முயல்கிறது. பாஜக-வின் இந்தச் செயல் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காக யாகூப் மேமன் சமாதிப் பிரச்னையை எழுப்பி, நகரில் மத மற்றுமையைச் சீர்குலைக்க பாஜக முயல்கிறது. பாஜக அரசுதான் 2015-ம் ஆண்டு யாகூப் மேமன் உடலை அவரின் குடும்பத்திடம் கொடுத்தது. எந்தத் தீவிரவாதியின் உடலும் குடும்பத்திடம் கொடுக்கப்படுவது கிடையாது. ஆனால், பாஜக அரசு யாகூப் மேமன் உடலை அவனது குடும்பத்திடம் கொடுத்தது. காங்கிரஸ் அரசு தீவிரவாதிகள் அப்சல் குரு, அஜ்மல் கசாப் உடல்களை யாருக்கும் தெரியாத இடத்தில் அடக்கம் செய்தது” என்றும் தெரிவித்தார்.