Published:Updated:

`வளர்ச்சியின் தூதுவர்கள் அவர்கள்; அரசின் பொறுப்பு என்ன?’- தொழிலாளர்களின் பயணச் செலவை ஏற்ற காங்கிரஸ்

சோனியா காந்தி - மோடி
சோனியா காந்தி - மோடி

``வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப தேவையான ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்றுக்கொள்ளும்.” - காங்கிரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. மாநிலங்களின் எல்லையும் பூட்டப்பட்டு பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். மாநில அரசுகள் அவர்களுக்கு தங்கும் முகாம்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கஷ்டப்படுவதாகத் தொழிலாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பினர். மேலும், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனப் போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தொழிலாளர்களை ஊர்களுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகளை விடுத்தன.

காங்கிரஸின் அறிக்கை
காங்கிரஸின் அறிக்கை

இந்நிலையில், மத்திய அரசு தொழிலாளர்களின் பயணத்துக்கு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளன. ஆனால், இந்த ரயில்களில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் பயணச் செலவுகளை காங்கிரஸ் ஏற்பதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நம்முடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பே தொழிலாளர்கள்தான். அவர்களின் கடின உழைப்பும் தியாகமும்தான் நம் நாட்டின் அடிப்படை. ஊரடங்கை அமல்படுத்துவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டதால் தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 1947-ம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு இந்தியா தற்போதுதான் இவ்வளவு பெரிய துயரத்தை சந்திக்கிறது. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தையும் அன்புக்குரியவர்களையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் உணவு, மருந்து, பணம், போக்குவரத்து என எதுவுமின்றி நூற்றுக்கணக்கான கி.மீ கால்நடையாக நடந்து செல்கின்றனர். இதைப் பார்க்கும்போது இதயமே உடைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

`மகனைக் கட்டியணைக்கணும்!’-இடம்பெயர்ந்த தொழிலாளிகளின் கண்ணீர் குரல்கள்

இந்திய மக்கள் பலரும் இவர்களுக்கு உதவி செய்தாலும் அரசின் பொறுப்பு இதில் என்னவாக இருக்கிறது என்ற கேள்வியுடன் தொடரும் அந்த அறிக்கையில், ``நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தங்களுடைய குடும்பத்தினருடன் இருக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களிடம் பணமோ, இலவச போக்குவரத்துக்கான வசதிகளோ இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில்கூட மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் ரயில் கட்டணம் வசூலிப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தொழிலாளர்கள்தான் நமது நாட்டின் வளர்சிக்கான தூதுவர்கள். வெளிநாடுகளில் சிக்கியுள்ள மக்களை அழைத்து வர இலவச விமான சேவைகளை வழங்கும்போது, குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து மற்றும் உணவுக்காக 100 கோடி செலவு செய்யும்போது, கொரோனா நிவாரணத்துக்காக ரயில்வே துறை ரூ.151 கோடி அளிக்கும்போது, இந்த துயரமான வேளையில் நாட்டின் அத்தியாவசிய உறுப்பினர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏன் கொடுக்க முடியாது?” என்று கேட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவித்த நேரத்தில் இருந்தே இதுதொடர்பான பிரச்னைகளை காங்கிரஸ் கூறி வருகிறது என்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல பாதுகாப்பான மற்றும் இலவசமான ரயில் சேவைகளை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால், இதை மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் கண்டுகொள்ளவில்லை என்றும் அறிக்கையில் சோனியா குறிப்பிட்டுள்ளார். மேலும், ``இதனால், காங்கிரஸ் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப தேவையான ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்றுக்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி
vikatan

இந்நிலையில் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பாதி பட்டினியால் வாடும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் கட்டணத்தை வசூலிப்பது மோசமானது. வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அரசு இலவசமாக மீட்டுக் கொண்டு வந்தது. தொழிலாளர்களின் இலவச பயணத்துக்கு ரயில்வே அமைச்சகம் மறுத்துவிட்டால் பி.எம் கேரில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டியதுதானே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியிருப்பதாகவும் கட்டணத்தில் 85% மத்திய அரசும் 15% மாநில அரசும் செலுத்தும் என்றும் இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

`தெலங்கானா டு ஜார்க்கண்ட்; முறையான சமூக விலகல்’ - தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட முதல் சிறப்பு ரயில்
அடுத்த கட்டுரைக்கு