Published:Updated:

`உலகின் நான்காவது வலிமையான விமானப்படை!' - இந்திய விமானப்படை நாள் கொண்டாடப்படுவது ஏன்? #IAFDay

இந்திய விமானப்படை
இந்திய விமானப்படை ( Twitter/@IAF_MCC )

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய அரசுக்குக் கீழ் செயல்பட்டுவந்த விமானப்படை, இந்திய அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. அப்போதும் `ராயல் இந்திய விமானப்படை' என்றே பெயர் பெற்றிருந்தது.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் நாள் இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள ஹிண்டன் (Hindon) விமானப்படைத் தளத்தில், 88-வது இந்திய விமானப்படை தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

IAF DAY
IAF DAY
Twitter/@IAF_MCC

இந்த நிகழ்வில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் (Karambir Singh) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விமானப்படை வீரர்களின் அணிவகுப்பின்போது, பெண் விமானி ஷிவாங்கி ரஜாவத் (Shivangi Rajawat) இந்திய விமானப்படையின் கொடியை ஏந்திச் சென்றார். சிறப்பாகப் பணியாற்றிய விமானப்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர், இந்திய விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு, வான்வெளியில் அணிவகுப்பு நடத்தி சாகச நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.

இந்திய விமானப்படை
இந்திய விமானப்படை
Twitter/@IAF_MCC
ரஃபேல்: 126 போர் விமானங்கள் 36 ஆனது எப்படி?! -  13 ஆண்டுகளில் நடந்தது என்ன? #RafaleAToZ
இந்தச் சாகச நிகழ்ச்சியில், 19 போர் விமானங்கள், ஏழு போக்குவரத்து விமானங்கள், 19 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 56 விமானப்படை விமானங்கள் பங்கேற்றன. எப்போதுமே இந்த வான்வெளி சாகசங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு சாகச நிகழ்ச்சிகளில், பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்றது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

அக்டோபர் 8-ல் விமானப்படை நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932-ல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறிவருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், `ராயல்' என்ற பெயரை இந்திய விமானப்படைக்கு வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு `ராயல் இந்திய விமானப்படை' ஆகப் பெயர் மாற்றம் பெற்றது இந்திய விமானப்படை. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய அரசுக்குக் கீழ் செயல்பட்டு வந்த விமானப்படை இந்திய அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. அப்போதும் `ராயல் இந்திய விமானப்படை' என்றே பெயர் பெற்றிருந்தது. 1950-ம் ஆண்டு, இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசு நாடாக மாறிய பின்னர் `ராயல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு `இந்திய விமானப்படை' என்று பெயர் மாற்றப்பட்டது.

ரஃபேல்
ரஃபேல்
twitter/IAF
இந்தியாவின் முதல் ரஃபேல் பெண் விமானி... கோல்டன் ஏரோஸ் படையில் இணைந்த சிவாங்கி சிங்!

1950-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் நான்கு போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத் (Meghdoot), ஆபரேஷன் காக்டஸ் (Cactus), ஆபரேஷன் பூமாலை (Poomalai) உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளிலும் இந்திய விமானப்படை பங்கெடுத்திருக்கிறது. மேலும், பேரிடர் காலங்களில், மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படை சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறது.

விமானப்படை அணிவகுப்பு
விமானப்படை அணிவகுப்பு
Twitter/@IAF_MCC
உலகின் நான்காவது வலிமையான விமானப்படையாக இந்திய விமானப்படை உருவெடுத்திருக்கிறது. போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 1,400 விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன. 1,70,000-க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப்படையில் பணியாற்றிவருகின்றனர். ரஃபேல், மிராஜ் 2000, மிக் 21, மிக் 27, மிக் 29, ஜாகுவார், சுகோய் 30 (Sukhoi 30) உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்கின்றன.

இந்திய விமானப்படை தினத்தின் 88-வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இந்திய விமானப்படையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் வான்வெளியைப் பாதுகாப்பாகவைத்திருக்க மட்டும் நீங்கள் உதவவில்லை. பேரிடர்க் காலங்களில், மனிதகுலத்தைக் காப்பாற்ற உதவிகள் செய்வதில் முக்கியப் பங்குவகிக்கிறீர்கள். உங்களின் வீரம், துணிவு, அர்ப்பணிப்பு ஆகியவை அனைவருக்கும் உந்துதலாக விளங்குகின்றன.
பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் இந்திய விமானப்படைக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். 89-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் `இந்திய விமானப்படை' வரும் ஆண்டுகளில் பல மாற்றங்கள் பெற்று, அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு