Published:Updated:

மகாராஷ்டிரா: மாமியாருக்கு இறுதிச்சடங்கு செய்து சிதைக்குத் தீ மூட்டிய கைம்பெண்!

சிதைக்கு தீ மூட்டிய நீதா
சிதைக்கு தீ மூட்டிய நீதா

மகாராஷ்டிராவில் 100 வயதில் உயிரிழந்த தன் மாமியாருக்கு, அவரின் கைம்பெண் மருமகள் இறுதிச் சடங்குகளைச் செய்து சிதைக்குத் தீமூட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகில் உள்ள ஷாப்பூரில் வசித்து வருபவர் நீதா கொடம்பே (55). இவரின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தை இல்லை. இதனால் நீதா தன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் மாமியாருக்கு வேறு எந்தத் துணையும் இல்லாததால் அவரையும் தன்னுடன் அழைத்து வந்து கவனித்துக்கொண்டார் நீதா.

நீதாவின் மாமியார் தாராபாய் கொடம்பே, ஓர் ஆண்டுக்கு முன்பு கீழே விழுந்துவிட்டார். இதனால் அவர் படுத்த படுக்கையாகி விட்டார். அவருக்கு 100 வயதாகிவிட்டது. இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவரது மரணம் குறித்து உறவினர்களுக்கு போன் செய்து சொல்லியபோது, கொரோனா பரவி வருவதால் தங்களால் வர முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

இறந்துபோன தாராபாய்
இறந்துபோன தாராபாய்

உறவினர்கள் சிலர் உதவியுடன் தன் மாமியாரின் இறுதிச்சடங்கை முடிக்க நீதா முடிவு செய்தார். இறுதிச்சடங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. யாரைக்கொண்டு இறுதிச்சடங்கை நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. அந்நேரம், ``இறுதிச்சடங்கை நானே நடத்துகிறேன்" என்று நீதா தெரிவித்தார். இதைக் கேட்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். `கைம்பெண் ஆன நீ எப்படி இறுதிச்சடங்கை செய்ய முடியும்?' என்று கேள்வி எழுப்பினர். ஆனால், நீதா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் கிராமத்தினர் அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர்.

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் தஸ்ரத் ஜாதவ் கூறுகையில், `பெண்கள் இறுதிச்சடங்குகளைச் செய்வது குறித்துப் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். ஆனால், நீதா விஷயத்தில் அவர் கைம்பெண் என்பதால் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆனாலும், நீதா இறுதிச்சடங்குகளை செய்ய பஞ்சாயத்து உறுப்பினர்கள் சம்மதித்தனர்' என்றார்.

தாராபாய் உடலை ஆண்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். நீதா ஒரு ஆட்டோவில் மயானத்துக்குச் சென்றார். அதை அக்கிராம பெண்கள் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிதைக்கு தீ மூட்டிய நீதா
சிதைக்கு தீ மூட்டிய நீதா

நீதா இதற்கு முன்பு, தன் கணவர் இறந்தபோதுகூட மயானதந்துக்குச் சென்றது கிடையாது. இதனால் மயானத்தில் நீதா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். ஆனாலும், இறுதிச்சடங்குகளைச் செய்து மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக நீதா இருந்துள்ளார் என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.

இக்கிராமத்தில் பெண் ஒருவர் இறுதிச்சடங்கை செய்வது இதுவே முதல் முறையாகும். நீதாவின் இரண்டு சகோதரர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு