Published:Updated:

`தொற்று கண்டறியப்படாத மாவட்டங்கள்..!’ -ஏப்ரல் 14-க்குப் பிறகு லாக்-டவுண் உத்தரவு தளர்த்தப்படுமா?

ஊரடங்கு -கோவை
ஊரடங்கு -கோவை

இந்தியாவில் லாக்-டவுண் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது சிரமம்தான் என்றபோதும், ஒரு நபர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்களில், இந்த உத்தரவு சற்று தளர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000 -ஐ தாண்டியுள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067. கடந்த 12 மணிநேரத்தில், புதிதாக 490 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. மேலும், 109 பேர் கொரோனா காரணமாகப் பலியாகியுள்ளனர். 292 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸின் சமூகப் பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் லாக்-டவுண் என்னும் ஊரடங்கு உத்தரவு, கடந்த மாதம் 25-ம் தேதி முதல் அமலில் இருக்கிறது. மக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி, வீட்டில் இருந்து வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஓர் உத்தியாக லாக்-டவுண் உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த சீனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக லாக்-டவுண் உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், தற்போது மூன்று வார கால லாக்-டவுண் உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் மனதில் இருக்கும் பெரும் கேள்விகளில் ஒன்று, 21 நாள்களுக்குப் பிறகு இந்த லாக்-டவுண் உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது கட்டுபாடுகள் தளர்த்தப்படுமா என்பதுதான். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், லாக்-டவுண் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது சிரமம்தான் என்றபோதிலும், ஒரு நபர்கூட கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்களில், இந்த லாக்-டவுண் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு

கடந்த வாரம் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் ஆலோசனை நடத்தினார். அப்போது, லாக்-டவுண் உத்தரவை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட்டார். இது மட்டும்தான் தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி என அவர் தெரிவித்தார். அதனபின்னர், தமிழகத்தில் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி. அதேபோன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

நாடு முழுவதும் லாக்-டவுண் உத்தரவை திரும்பப்பெறுவது என்பது ஏப்ரல் 15 -தேதி சாத்திமில்லாதது என்றும், கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. லாக்-டவுண் உத்தரவை நீக்குவது என்பது கொரோனா நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொய்வை ஏற்படுத்திடாத வண்ணம் இருக்க வேண்டும் என தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டுவருகிறது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் உள்ள 718 மாவட்டங்களில் 274-ல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் 21 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சொடிய சென்னை அண்ணா சாலை
ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சொடிய சென்னை அண்ணா சாலை

எனினும் கட்டுப்பாடுகள் தளர்த்துவது என்பது முழுமையானதாக இருக்காது என்றும், கொரோனா பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துளார். ராஜஸ்தானில், பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும், லாக்-டவுண் உத்தரவைத் தளர்த்துவது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைகள் மாநிலத்தில் நடைபெறுவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுக்கூட்டங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், மால்கள், திரையரங்குகள் முதலியவை செயல்பட முடியாத வண்ணம் மூடியே இருக்கும் எனவும் அதிகரிகள் தெரிவித்தனர். மக்கள் அன்றாட பணிகளுக்காக வெளியே வரலாம். ஆனால், கூட்டம் கூடுவதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தொபே, ``ஏப்ரல் 14 -க்குப் பிறகு, நகர்ப்புறங்களில் மட்டும் லாக்-டவுண் அமலில் இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மைப் பணியாளர்கள்  நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மைப் பணியாளர்கள் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

இந்தியாவில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 47-ல் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சமூகப்பரவலாகப் பரவவில்லை என அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயப் பணிகள் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் 14-ம் தேதிக்குப் பின்னர் லாக்-டவுண் உத்தரவு சற்று தளர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. எனினும் பஞ்சாப் மாநில முதல்வரின் தலைமைச் செயலாளர், `எதையும் ஏப்ரல் 12, 13 தேதி நிலவரத்தைப் பார்த்த பின்னர்தான் கூறமுடியும்” என்றார்.

கேரள மாநிலத்தில், இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள தேயிலைத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், `கட்டாயம் பணியிடத்தில் தொழிலாளர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கண்காணிக்கும்’ என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது மாநிலம் தழுவிய லாக்-டவுண் உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32-ல் குறைந்தது ஒருவருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2-வது இடத்தில் கோவை உள்ளது. கோவையைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

கொரோனா
கொரோனா

நாடு முழுவதும் லாக்-டவுண் கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றாலும், வரும் ஏப்ரல் 12, 13 தேதிகள் வரை இந்தியாவில் இருக்கும் நிலவரத்தை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இருக்கிறதாம் மத்திய அரசு.

News Inputs: Hindustan Times

`தனிமைப்படுத்தப்பட்ட 300 செவிலியர்கள்; 40 பேருக்குக் கொரோனா' - சோகத்தில் மும்பை மருத்துவமனை
அடுத்த கட்டுரைக்கு