Published:Updated:

`ஆர்யன் கானை விடுவிக்க ரூ.18 கோடி பேரம்!’ - புதிய சாட்சி சொன்ன அதிர்ச்சித் தகவல்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்கும் ரூ.18 கோடி பேரம் தோல்வி அடைந்தது குறித்து இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நபர், புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட போது அவரை விடுவிக்க பண பேரம் பேசப்பட்டதாகவும், ரூ, 25 கோடி அளவுக்கு பேரம் பேசப்பட்டு, ரூ,18 கோடியில் முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டதாக இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகர் என்பவர் தெரிவித்திருந்தார். இந்த பேரத்தில் இடைத்தரகர் சாம் டிசோசா என்பவரின் துணையோடு மற்றொரு சாட்சியான கேபி கொசாவி என்பவர் ஈடுபட்டதாகவும், அவர்களின் தொலைபேசி உரையாடலை அருகில் இருந்து கேட்டதாகவும் பிாபாகர் தெரிவித்திருந்தார்.

இதில் ரூ.50 லட்சம் கைமாறியதாகவும், பேரம் தோல்வியில் முடிந்ததால் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டதாகவும் சாம் டிசோசாவும் தெரிவித்திருந்தார். இதில் ஷாருக் கான் மேனேஜர் பூஜா நேரடியாக கொசாவியிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. புதிய திருப்பமாக இவ்வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள விஜய் பஹாரே வெளியிட்டுள்ள புதிய தகவலில் பண பேரம் ஏன் தோல்வியில் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குறிய செல்பி
சர்ச்சைக்குறிய செல்பி

அவர் அளித்துள்ள பேட்டியில், ``ரூ.18 கோடியில் ஆர்யன் கானை விடுவிக்க பேரம் முடிந்துவிட்டது, ஆனால் கொசாவி ஆர்யனுடன் இருக்கும் செல்பியை வெளியிட்டதால் இந்த பேரம் தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த பேரத்தில் சுனில் பாட்டீல், பனுசாலி, கொசாவி, சாம் டிசோசா ஆகியோர் ஈடுபட்டனர், கொசாவி ரூ.50 லட்சம் மட்டும் பெற்றார். ஆனால் கொசாவியின் செல்ஃபியால் பேரம் தோல்வியில் முடிந்துவிட்டது. கொசாவியின் செல்பியால் எல்லாம் பாழாய் போய்விட்டதாக சுனில் பாட்டீல் என்னிடம் போனில் தெரிவித்தார். இந்த பேரத்துக்காக செப்டம்பர் 27ம் தேதியே நவிமும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒன்றில் பனுசாலியும், ஒரு பெண்ணும் இருந்தனர். மற்றொரு அறையில் சுனில் பாட்டீலும், கொசாவியும் இருந்தனர். கொசாவி இருந்த அறைக்கு வந்த பனுசாலி, நமது கையிக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் வந்துள்ளது என்று தெரிவித்தார். சுனில் பாட்டீலுக்கு நான் ரூ.35 லட்சம் கொடுத்து இருந்ததால் அதனை வாங்க அவருடன் 6 மாதங்களாக இருந்தேன். இவர்கள்தான் ஆர்யனை சிக்க வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக போலீஸில் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து அதிகாரி சமீர் வான்கடே நீக்கம்?! - அடுத்து என்ன?

இவ்வழக்கில் மற்றொரு திருப்பமாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் அளித்துள்ள பேட்டியில், பாஜக பிரமுகர் மொஹித் கம்போஜி என்பவர்தான் ஆர்யன் கைது விவகாரத்தில் மூளையாக செயல்பட்டதாகவும், ஆர்யன் பணத்திற்காக கடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ``கப்பலில் நடந்த பார்ட்டிக்கு ஆர்யன் கான் டிக்கெட் வாங்கவில்லை. பிரதிக் மற்றும் அமீர் ஆகிய இரண்டு பேரும்தான் ஆர்யனுக்கு டிக்கெட் எடுத்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயுடன் சேர்ந்து கொண்டு மொஹித், ஆர்யனை கடத்தி மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டார். இதில் ஆரம்பத்தில் இருந்தே ஷாருக் கான் மிரட்டப்பட்டு வந்துள்ளார். ஷாருக் கானின் மேனேஜர் பெயர் அடிபடுவதால் அவர் இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

இது குறித்து பேச ஷாருக் கான் முன் வரவேண்டும். சமீர் வான்கடேவுக்கு மொஹிதே மிகவும் நெருக்கமானவர் ஆவார். சுனில் பாட்டீல் ஒரு முறை என்னை தொடர்பு கொண்டு சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பினார். ஆனால் அவற்றை போலீஸாருடன் பகிர்ந்து கொள்ளும்படி தெரிவித்துவிட்டேன். பேஷன் டிவி எம்.டி. காஜிம் கான் பார்ட்டி நடந்த கப்பலில் இருந்துள்ளார். ஆனால் அவரை கைது செய்யவில்லை . இதில் இடைத்தரகராக சேர்க்கப்பட்ட சாம் டிசோசாவிற்கு ஹவாலா முறையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்தடுத்த புதிய திருப்பங்களுடன், இந்த வழக்கு நகர்ந்து வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு