Published:Updated:

ஆர்யன் கான் பிடிபட்டபோது செல்ஃபி... தலைமறைவாக இருந்த முக்கிய சாட்சி புனேயில் கைது! - அடுத்து என்ன?

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த கொசாவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மும்பையில் இந்த மாதத் தொடக்கத்தில், நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணர் கே.பி.கொசாவி என்பவர் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். கொசாவி சாட்சியாகச் சேர்க்கப்பட்ட ஓரிரு நாளில் தலைமறைவாகிவிட்டார். கொசாவி மீது புனே போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை இந்த வழக்கில் தேடிவந்தனர். ஆர்யன் கான் பிடிபட்டபோது அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கொசாவி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

ஆர்யனுடன் கொசாவி
ஆர்யனுடன் கொசாவி

கொசாவி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயுடன் சேர்ந்துகொண்டு ஷாருக் கானின் மகனை விடுவிக்க பண பேரத்தில் ஈடுபட்டதாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு சாட்சியான பிரபாகர் என்பவர் தெரிவித்திருந்தார். அதோடு ரூ.50 லட்சத்தை ஷாருக் கான் செயலாளர் பூஜாவிடம் வாங்கியதாகவும் தெரிவித்தார். இதனால் கொசாவியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கொசாவி உத்தரப்பிரதேசத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லக்னோ போலீஸில் சரணடைய முயன்றார். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் புனேயில் கொசாவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதை புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவித்தார். கொசாவி பிடிபட்டிருப்பதால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீர் வான்கடே பாலிவுட் பிரபலங்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், போலி வழக்குகளைப் பதிவு செய்ததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கும் குற்றம்சாட்டியுள்ளார்.

`ஷாருக் கான் தொடங்கி அனுராக் காஷ்யப் வரை..!’ -சமீர் ரேடாரில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள் யார், யார்?

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மும்பை போலீஸார் விசாரித்துவருகின்றனர். புனேயில் கைதுசெய்யப்பட்டுள்ள கொசாவியை மும்பைக்கு அழைத்து வந்து, சமீர் வான்கடே மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தவிர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நான்கு பேர் சமீர் வான்கடேயிம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். சமீர் வான்கடே மிரட்டிப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக வந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு