Published:Updated:

‘அப்படி நடந்தால் வழக்குப்பதிவு செய்கிறோம்’- பாதிக்கப்பட்ட பெண்ணை அதிரவைத்த உ.பி போலீஸ்

வன்கொடுமை
வன்கொடுமை ( மாதிரி புகைப்படம் )

'உத்தரப்பிரதேச காவலர்கள், புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறார்கள்' என ஒரு பெண், போலீஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் மட்டும், கடந்த ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரை 86 பாலியல் வன்கொடுமைகளும் 99 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் நிகழ்ந்து, அதுதொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உன்னாவ் பெண் எரிப்பு
உன்னாவ் பெண் எரிப்பு

இதில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வெளியே சொல்லப் பயந்து, காவல் நிலையம் செல்லாமல் இருக்கும் பெண்களும் ஏராளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உன்னாவில், போலீஸ் அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கின்றனர். எந்தக் குற்றவாளியாக இருந்தாலும், அரசியல் தலைவர்களின் உத்தரவு இல்லாமல் கைதுசெய்ய முடியாது. உன்னாவ் போலீஸ் துறையே அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது போன்ற அடுக்கடுக்கான விமர்சனங்கள் அம்மாவட்ட காவல்துறைமீது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அங்குள்ள காவலர்களின் மோசமான நிலையை உணர்த்தும் மற்றொரு சம்பவமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உன்னாவில், இளம் பெண் உயிருடன் எரிக்கப்பட்ட ஹிந்துபூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் அளித்த பாலியல் வன்கொடுமைப் புகாரை காவல்துறையினர் இன்னும் எடுத்துக்கொள்ளாமல் உள்ளனர். அதன் காரணம்தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

உத்தரபிரதேச போலீஸ்
உத்தரபிரதேச போலீஸ்

இதுபற்றிப் பேசிய பெயர் குறிப்பிடவிரும்பாத அந்தப் பெண், “கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நான் மருந்து வாங்குவதற்காகச் சென்றேன். அப்போது, என்னை வழிமறித்த மூன்று பேர், என்னிடம் சகஜமாகப் பேச்சுக்கொடுத்தனர். பின்னர், என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். ஆனால், அதற்குள் நான் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

3 மாத அலைக்கழிப்பு; சமாதானம் செய்த போலீஸார்! - இறப்பில் முடிந்த உன்னாவ் பெண்ணின் 1 வருடப் போராட்டம்

மறுநாள், காவல் நிலையம் சென்று என்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் எனக் காவலர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், ‘பாலியல் வன்கொடுமை முயற்சிதானே, ஒருவேளை நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், நாங்கள் வழக்குப்பதிவு செய்கிறோம்’ எனக் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களாக நான் காவல் நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

ஆனால், அங்கு இருக்கும் ஒருவர்கூட என் புகாரை எடுக்கத் தயாராக இல்லை. என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இதை அறிந்ததும் என் வீட்டுக்கு வந்து, புகார் கொடுத்தால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். இந்நிலையில், உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு, பெண்கள் புகார் அளிக்க 1090 என்ற உதவி எண் அறிவித்தனர். அதற்குத் தொடர்பு கொண்டு என் பிரச்னையைக் கூறினேன். ஆனால் அவர்கள், 100-க்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு வைத்துவிட்டனர். இருந்தும், விடாமல் நான் 100-க்கு போன் செய்தேன். அவர்கள், உன்னாவ் காவல் நிலையம் செல்லுமாறு கூறிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், தற்போது அம்மாவட்டத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு