Published:Updated:

`7 கி.மீ நடைப் பயணம்; பல் மருத்துவமனையில் பிரசவம்!’ - பெங்களூருவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

பெங்களூரு குழந்தை
பெங்களூரு குழந்தை

பெங்களூருவில், திடீரெனப் பிரசவ வலி வந்த ஒரு கர்ப்பிணிப் பெண், வழியிலிருந்த பல் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்துவிதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், சாதாரணமாக உடல்நிலை பாதிக்கபடுபவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கர்ப்பிணி
கர்ப்பிணி
மாதிரி படம்

இப்படியொரு சூழலில் சிக்கித்தான் கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண், பல் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல எந்த வாகனமும் இல்லாததால், அவர் தன் கணவருடன் சுமார் 7 கி.மீ தூரம் நடந்தே வந்துள்ளார். இறுதியாக, பல் மருத்துவமனை ஒன்றின் அருகில் வந்ததும் அந்தப் பெண்ணுக்கு வலி அதிகமாகவே, அதே மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

திடீர் விபத்து; தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்! - நூலிழையில் உயிர்பிழைத்த நிறைமாத கர்ப்பிணி

இந்தச் சம்பவம் பற்றி விவரித்துள்ள பல் மருத்துவர் ரம்யா, ‘கடந்த 14-ம் தேதி காலை 9 மணிக்கு, 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண், மருத்துவமனையைத் தேடி சுமார் 7 கி.மீ நடந்து வந்துள்ளார். அவர் வந்த வழியில் ஒரு மருத்துவனைகூட இல்லை. என் மருத்துவமனைக்கு அருகில் வந்ததும் அவருக்கு வலி அதிகரித்ததால் இங்கே வந்துவிட்டனர். அந்த நேரத்தில் நான் மருத்துவமனையில் இல்லை, என் உதவியாளர் மட்டுமே இருந்தார். கர்ப்பிணிப் பெண் வந்துள்ள தகவல் கிடைத்ததும் நானும் என் கணவரும் மருத்துவருமான ஹிமானிஷும் மருத்துவமனைக்கு விரைந்தோம்.

குழந்தை
குழந்தை

அதற்குள் என் உதவியாளரின் உதவியுடன், அடுத்த 5-வது நிமிடத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்ததும் அந்தப் பெண் மயக்கநிலைக்குச் சென்றுள்ளார். குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. அதனால் குழந்தை இறந்து பிறந்ததாக நினைத்த தந்தை, குழந்தையை ஒரு பேப்பரில் சுற்றி வைத்திருந்தார். நாங்கள் சென்று சிகிச்சையளித்தபோது, குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர், குழந்தைக்கும் தாய்க்கும் சிகிச்சையளித்து எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களின் உதவியுடன் உனடியான ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து, இருவரையும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியும் அவரது கணவரும் தங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும், அவர்களின் தோற்றத்தைப் பார்த்தால் பீகார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளிகள்போல இருந்ததாகவும் மருத்துவர் ரம்யா கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு