ரயில் தண்டவாளங்களில் நின்று ரயில் வருவதுகூட தெரியாமல் செல்பி எடுக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது மாமனார் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்று உயிரை விட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் என்ற இடத்தில் வசித்தவர் ராதிகா. இவருக்கு கடந்த மே மாதம்தான் திருமணம் நடந்தது. ராதிகாவின் மாமனார் ராஜேஷ் குப்தா ஜூவல்லரி வைத்திருக்கிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார்.

அந்த துப்பாக்கியை உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்காக போலீஸில் சரண்டர் செய்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டதால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராஜேஷ் மகன் ஆகாஷ் போலீஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கியை வீட்டிற்கு வாங்கி வந்தார். அவற்றை ராஜேஷ் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்திருந்தார். வீட்டில் புதிதாக துப்பாக்கியை கொண்டு வந்து வைத்ததும் அதனை எடுத்துப்பார்த்தார். அத்தோடு விடாமல் துப்பாக்கியோடு நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ள நினைத்தார். இதற்காக துப்பாக்கியை தனது கழுத்தில் வைத்து ட்ரிகரில் கை வைத்து செல்ஃபி எடுத்தார். துப்பாக்கியில் குண்டு இருக்காது என்ற நினைப்பில் ட்ரிகரை அழுத்திவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டு இருந்தது. துப்பாக்கியின் தோட்டா ராதிகாவின் கழுத்தில் பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மாடிக்கு ஒடி வந்து பார்த்த போது ராதிகா துப்பாக்கி காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். அவரை ராஜேஷ் உடனே மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றார். ராதிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதிகா செல்பி எடுப்பதற்காக மொபைலில் கேமரா ஆனாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட போட்டோவையும் போலீஸார் தடயவியல் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். ராதிகாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகாவின் கணவர் ஆகாஷிடம் கேட்டதற்கு, எனது மனைவிக்கு துப்பாக்கியை கண்டவுடன் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏற்கனவே துப்பாக்கியுடன் பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். மேலும் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற போது விபரீத சம்பவம் நடந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.