Published:Updated:

பெட்ரோல் பங்க் கழிவறையில் பிரசவம்; குழந்தையைக் குப்பைத் தொட்டியில் விட்டுச் சென்ற அவலம்!

குழந்தை
குழந்தை ( Pixabay )

குஜராத்தில் ஒரு பெண் திருமணம் ஒன்றுக்குச் சென்ற இடத்தில், பெட்ரோல் பங்க் கழிவறையில் அவருக்குப் பிரசவமாக, குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். போலீஸார் அவரை கண்டறிந்து விசாரித்து வருகின்றனர்.

நாட்டிலேயே மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிறந்தவுடன் குழந்தைகளை அப்படியே விட்டுச்செல்லும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அவ்வாறு ஆதரவின்றி விடப்படும் குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில், குஜராத்தில் பெண் ஒருவர் குறை பிரசவத்தில் பிறந்த தன் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்ற அவலம் நடந்துள்ளது.

குழந்தை - Representational Image
குழந்தை - Representational Image

குஜராத் மாநிலம் காந்தி நகர் அதலாஜ் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள கழிவறையை தூய்மைத் தொழிலாளி சுத்தம் செய்யச் சென்றபோது, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்று கிடந்தது. உடனே இது குறித்து அவர் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் கழிவறைக்குள் சென்றுவிட்டு 30 நிமிடம் கழித்து வந்தார். பின்னர் அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறிச்சென்றுவிட்டார். அக்காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, காரை திருமணம் ஒன்றுக்கு வாடகைக்குக் கொடுத்திருந்ததாக உரிமையாளர் தெரிவித்தார். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெண் மஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணி என்று அடையாளம் காணப்பட்டது.

குழந்தை - Representational Image
குழந்தை - Representational Image

அவரிடம் விசாரித்தபோது, இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாகக் குழந்தை பிறந்துவிட்டது எனவும், அதை வெளியில் சொல்ல சங்கோசப்பட்டு பயத்தில் குழந்தையை அங்கு இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அவர் சொல்வது உண்மையா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதோடு அப்பெண் மீது 318-வது சட்டப்பிரிவின் கீழ் உண்மையை மறைத்தது, குழந்தையை விட்டுச் சென்றது போன்ற குற்றங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு