மும்பை ஒருபோதும் தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், மும்பை அருகில் உள்ள பகுதிகள் அடிக்கடி தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தண்டிசி பெரி என்ற கிராமத்தில் தண்ணீர் பிரச்னை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
தண்டிசி கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மலையடிவாரத்தில் சிறிய தண்ணீர் ஊற்று இருக்கிறது. இதில் தண்ணீர் பிடிப்பதற்காகப் பெண்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். அதிகாலை 4 மணிக்கே எழுந்து இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிப்பதற்காக நடந்து செல்கின்றனர். இருட்டில் வனவிலங்குகள் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும், தண்ணீருக்காகத் தினமும் நடந்து செல்கின்றனர். அதோடு தண்ணீர் ஊற்று இருக்கும் பகுதிக்குள் வனவிலங்குகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக விறகுகளைப் போட்டு தீயை எரிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாலை நேரத்திலும், வன விலங்குகள் வரலாம் என்ற சூழலிலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வேறு வழியின்றி தண்ணீர் எடுப்பதற்காகப் பெண்கள் நடையாய் நடக்கின்றனர். அந்தக் கிராமப் பெண்களுக்கு தினமும் இதே வேலையாக இருக்கிறது. ஒரு முறை தண்ணீர் எடுத்து வர 2 - 3 மணி நேரம் ஆகிறது. இதனால், பலரும் இந்த ஊருக்கு பெண் கொடுக்க மறுத்து விடுகின்றனர்.
வருடத்தில் மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 4 மாதங்கள் இந்தக் கிராமத்தில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. இக்கிராமம் பற்றித் தெரியாமல் திருமணமாகி வரும் பெண்கள் சில நாள்களில் தங்களின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர்.
இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீராம் வாக்மாரே கூறுகையில், ``ஒரு சில நேரங்களில் டேங்கர் மூலம் தண்ணீர் வசதி செய்து கொடுக்கிறேன். அதில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏராளமான அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வந்து போட்டோ எடுத்துச் செல்கின்றனர். ஆனால், யாரும் உதவ முன் வருவதில்லை.
2008-09-ம் ஆண்டில், மூன்று பெண்கள் திருமணமாகி கிராமத்துக்கு வந்த சில நாள்களில் தண்ணீர் பிரச்னையைப் பார்த்து மிரண்டு, உடனே தங்களின் பெற்றோர் வீடன்டுக்குச் சென்றுவிட்டனர். இப்போது வெளியூர்க்காரர்கள் எங்கள் கிராமத்துக்கு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கவே பயப்படுகின்றனர். திருமணப் பேச்சுவார்த்தையின்போது எங்கள் ஊர் பெயர் தெரியவந்தால், பேச்சுவார்த்தையை அப்படியே நிறுத்திவிடுகின்றனர்" என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

தினமும் மலையடிவாரத்துக்குச் சென்று தண்ணீர் பிடித்து வரும் பெண்கள் இது குறித்து கூறுகையில், ``தினமும் தண்ணீர் பிடித்து வருவதிலேயே எங்களது மொத்த வாழ்க்கையும் கழிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். எதிர்காலத்தில் எங்கள் கிராமத்துக்கு திருமணமாகி வரும் பெண்கள் எங்களைப்போன்று கஷ்டப்படக் கூடாது.
2014-ம் ஆண்டு ஒரு பெண் திருமணமாகி வந்த அடுத்த நாளே தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இக்கிராமத்தில் வசித்தால் தண்ணீர் பிடிப்பதிலேயே காலத்தைத் தள்ள வேண்டும் என்று கருதி பல பெண்கள் இப்படி சென்றுவிடுகின்றனர்" என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் இந்தப் பிரச்னையைக் கவனித்து இது குறித்து மகாராஷ்டிரா அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.