Published:Updated:

`ஏழைகளுக்கு உதவி செய்யப் பயன்படும்!’ - இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கும் உலக வங்கி

உலக வங்கி
உலக வங்கி

``இந்தியா மேற்கொண்டு வரும் சுமார் 400 சமூகப் பாதுகாப்பு திட்டங்களைப் பல்வேறு வகையில் ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த நிதி உதவியாக இருக்கும்"

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் விளிம்புநிலை மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்படைந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் அவர்களுக்கு உதவுவது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறுகிறது. இந்நிலையில், பாதிப்படைந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியாவுக்கு உலக வங்கியானது, 'COVID-19 Social Protection Response Program' என்ற திட்டத்தின் கீழ் 1 பில்லியன் டாலர் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது.

லாக்டௌன் இந்தியா
லாக்டௌன் இந்தியா

சமூகப் பாதுகாப்பிற்காக உலக வங்கி ஒதுக்கியிருக்கும் இந்த நிதியானது முதற்கட்டமாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்திற்குப் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள சில இடைவெளிகளையும் உலக வங்கி கவனத்தில் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் பாதுக்காப்பையும் உறுதிபடுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`இந்தியாவில் ஊரடங்கால் 4 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதிப்பு!’ - உலக வங்கி

உலக வங்கி அறிவித்துள்ள இந்த ஒரு மில்லியன் டாலரானது இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. 2020 நிதியாண்டிற்கு 750 மில்லியன் டாலர் உடனடியாகவும் பின்னர் 2021 ஆம் நிதியாண்ற்கு 250 மில்லியன் டாலரும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், சுகாதாரத் துறைக்கு உதவி செய்யும் வகையில் உலக வங்கி 1 பில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தொகை இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ ரீதியில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், உலக வங்கி மொத்தமாக இந்தியாவுக்கு 2 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளது. மேலும், இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த 18.5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகையாக 5 ஆண்டுகள் வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

இதுதொடர்பாக உலக வங்கியின் திட்ட இயக்குநர் ஜுனைத் அகமது பேசுகையில், ``கொரோனா அதிகளவில் பரவியதால் உலக நாடுகள், தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ஊரடங்கை அமல்படுத்தியது. இது பொருளாதாரம் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களைப் பாதித்துள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. உலக வங்கி அளித்துள்ள இந்த நிதியுதவியானது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்யும். இந்தியா மேற்கொண்டு வரும் சுமார் 400 சமூகப் பாதுகாப்பு திட்டங்களை பல்வேறு வகையில் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இந்த நிதி உதவியாக இருக்கும். கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு