Published:Updated:

`புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை!’ - மன்கி பாத்தில் பிரதமர்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நாட்டு மக்களுடன் உரையாடினார் பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மன்கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். அதன்படி வார இறுதி ஞாயிறான இன்றும் பிரதமர் பேசியுள்ளார். கடந்த 3 மாதங்களாக கொரோனா தொடர்பாகப் பேசிய பிரதமர் இன்றைய நிகழ்ச்சியில் கொரோனா பிரச்னை, புலம் பெயர்ந்த தொழிலாளிகள், வெட்டுக்கிளிகள் தாக்குதல், ஆம்பன் புயல் போன்ற இந்தியா சந்தித்துள்ள பல முக்கிய பிரச்னைகள் தொடர்பாகவும் பேசியுள்ளார்.

மோடி
மோடி

அவர் பேசும்போது,``இதே மன்கி பாத் நிகழ்ச்சியில் கடைசியாக நான் உங்களுடன் பேசும்போது ரயில்கள், பேருந்துகள், விமான சேவைகள் இயங்கவில்லை. ஆனால், தற்போது ரயில்கள், விமானங்கள் போதுமான முன்னெச்சரிக்கையுடன் இயக்கப்படுகின்றன. பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதி தற்போது செயலில் உள்ளது. நம் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருந்து பராமரிப்பதோடு முகக் கவசங்கள் அணிவது, கை கழுவுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தளர்வு இருக்கக் கூடாது. முடிந்த வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது சிறந்தது.

இப்போதுதான் நாம் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் அனைவரது ஒத்துழைப்பினாலும் கோவிட் 19- க்கு எதிரான போராட்டம் வலுவாகியுள்ளது. கொரோனா விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் சாதனை எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பிற நாடுகளைவிட நம் நாட்டின் மக்கள் தொகை பல மடங்கு அதிகம். அதனால் சவால்களும் இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையிலும் நாம் கொரோனா பரவலையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் கட்டுப்படுத்திக் குறைத்துள்ளோம்.

மோடி
மோடி

கொரோனாவால் ஏற்பட்ட சிரமங்களால் பாதிக்கப்படாத எந்தப் பிரிவும் நம் நாட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக, ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த வேதனையும் வலிகளையும் கூற வார்த்தைகள் இல்லை. எனவே, பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கப் பல தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் பணியில் நம் ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்களும் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் வாரியர்ஸ்தான்.

பஞ்சாப்பின் பதான்கோட்டைச் சேர்ந்த திவ்யாங் பாய் ராஜு தன் பகுதியில் இருப்பவர்களின் உதவியுடன் சுமார் 3,000-க்கும் அதிகமாக முகக்கவசங்களை உருவாக்கி 100 குடும்பங்களுக்கு விநியோகித்தார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாள்களுக்கு முன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் கடந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பல ஏழை மக்கள் இலவசமாக மருத்துவச் சிகிச்சை பெற்றனர், அவர்களாகவே பணம் செலுத்த நேர்ந்திருந்தால் இதுவரை 14,000 கோடி ரூபாய் வந்திருக்கும். ஆனால், ஆயுஷ்மான் பாரத் ஏழைகளின் பணத்தைச் சேமித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நமது நாட்டின் கிழக்குப் பகுதி சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இந்தச் சிறிய பூச்சி எவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் கண்முன்பே பார்த்து வருகிறோம். மத்திய மாநில அரசுகள், விவசாய துறையினர் போன்ற பலரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயத் துறையில் பல நவீன வளங்களைப் பயன்படுத்துகின்றனர். புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும் என நான் நம்புகிறேன்.

நாடு எனக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையைப் பார்க்கும்போது புதிய நடவடிக்கைகளைத் தொடங்குவது அவசியமாகிவிட்டது. நாம் சீராக முன்னேறி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

ஊரடங்கால் வாடிய தொழிலாளர்கள்! - மகளுக்கான சேமிப்பை எடுத்து உதவிய மதுரை சலூன் கடைக்காரர்

அதேபோல், மகளின் திருமணச் செலவுக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தில் மக்களுக்கு உதவிய மதுரையைச் சேர்ந்த மோகனைப் பாராட்டிய பிரதமர் மோடி, ``மகளுக்கான சேமிப்பு ரூ.5 லட்ச ரூபாய் மூலம் மதுரையைச் சேர்ந்த மோகன் மக்களுக்கு உதவியிருக்கிறார். பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காகச் செய்துள்ளனர்’’ என்றும் பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு