Published:Updated:

`பயிர்களுக்குப் பேரழிவு; 27 ஆண்டுகளில் இல்லாத தாக்குதல்’- இந்தியாவுக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் 4 மாநிலங்களில் நுழைந்து பயிர்களைத் தாக்கி வருகின்றன.

கொரோனா வைரஸ் பிரச்னையுடன் தொடங்கியது இந்த 2020-ம் ஆண்டு. சீனாவில் உருவானதாகக் கூறப்படும் கொரோனாவால் அந்த நாட்டில் மட்டுமல்லாது அனைத்து உலக நாடுகளுக்கும் பரவிப் பல வகையிலும் மக்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கம் முதலே சிறப்பானதாக இல்லை, இந்த வருடத்தை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம் எனப் பலரும் சமூகவலைதளங்களில் நகைச்சுவையாகவும் சீரியசாகவும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

அதிலும் குறிப்பாக, இந்திய மக்களுக்கும் அரசுக்கும் கடந்த 5 மாதங்களும் மோசமானதாகவே இருந்துள்ளது என்றே கூற வேண்டும். டெல்லி போராட்டம், கொரோனா பரவல், ஊரடங்கு, பசி, தொழிலாளர்கள் இடம்பெயர்வு, ஆம்பன் புயல், அதிக வெப்பநிலை எனப் பல அடுக்கடுக்கான பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே உள்ளன. இதன் தொடர்ச்சியாகத் தற்போது மற்றொரு பிரச்னையும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் புகுந்துள்ள வெட்டுக்கிளிகளின் படையெடுப்புதான் அது.

ஆப்ரிக்கா, பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டன. தற்போது இவை பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன. ராஜஸ்தான் , மத்தியபிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பரவிவிட்ட இந்த வெட்டுக்கிளிகளால் இந்திய விவசாயத்துக்கு பெரும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை படையெடுத்தால் அந்த இடத்தில் விவசாயமே செய்ய முடியாது. இதனால் இந்திய விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

ஏப்ரல் இறுதி வாரத்தில் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயரத் தொடங்கிய இவை தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐ.நா-வின் உணவு மற்றும் வேளான் அமைப்பின் பிரதிநிதிகள், `எதிர்வரும் மாதத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் வெட்டுக்கிளிகளால் இந்திய உணவு உற்பத்திக்கு ஆபத்துக்கு இருக்கும்’ என எச்சரித்தனர்.

குஜராத்தில் 12,000 ஹெக்டேர் பயிர்களை சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்!

தற்போதைய நிலவரப்படி எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும் தெற்கு ஈரானின் சில பகுதிகளும் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை அதிகம் எதிர்கொள்கின்றன. இந்த வெட்டுக்கிளிகள் குறைந்த அளவில் இருக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே பெரிய படையுடன் வந்தால் சில மணிநேரங்களில் பெரிய பரப்பளவிலான பயிர்களைச் சேதப்படுத்திவிடும். வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஆப்பிரிக்காவில் கடுமையாக உணவுப் பற்றாக்குறை நிலவ உள்ளதாகக் கவலை எழுந்துள்ளது. இவை பயிர்களை மட்டுமல்லாது சேமித்து வைத்திருக்கும் பயிர்களையும் வீணாக்கும் எனச் சொல்லப்படுகிறது.

வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி

பாலைவன வெட்டுக்கிளிகள்!

வெட்டுக்கிளியின் இனத்தில் சுமார் 20 இனங்கள் பெரிய பீனோடைப் ( Phenotype - உருவ அமைப்பு, வளர்ச்சி, செயல்முறையைக் குறிக்கும்) வகையைச் சார்ந்தது. இவை மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. எப்போதும் கூட்டமாகவே இருக்கும். விரைவில் உடலமைப்பு, நிறம் ஆகியவற்றை மாற்றிக்கொள்ளக் கூடியவை. பெரும் தசையுடன்கூடிய உருவத்தைக் கொண்டவை. அவற்றில் ஒருவகைதான் இந்தியாவில் நுழைந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் எனக் கூறப்படுகிறது.

இந்த வெட்டுக்கிளிகள் ஈரப்பதமான இடங்களில்தான் குஞ்சு பொறிக்கும். அதுவே கனமழை பொழியும் காலங்களில் நம்பவே முடியாத அளவு, ஒரு சதுர கி.மீட்டரில் கோடிக்கணக்கில் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஆயுள்காலம் 6 மாதங்கள். இந்த வகை வெட்டுக்கிளிகள் ஒரேநாளில் தங்கள் உடல் எடைக்கு ஏற்ப உணவை உண்ணும் திறன் கொண்டவை. மேலும் நாள் ஒன்றுக்கு 90 மைல் தூரம் வரை இடம்பெயர்கின்றன. சுமார் 35,000 மக்களுக்குத் தேவையான உணவை இவை ஒரே நாளில் உண்ணும் என்பதால் இந்தியாவில் உணவு உற்பத்திக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரும் தாக்குதல் தற்போது நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

காலநிலை மாற்றம்!

வெப்ப மயமாதலால் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக வெப்பமண்டல புயல்கள் மற்றும் சூறாவளிகளைக் காணவிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுபோன்ற குளிர்ச்சியான நேரங்கள்தான் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்துக்கு மிகவும் ஏற்றவை.

கடந்த மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்கிய சூறாவளி அங்கிருக்கும் பாலைவனத்துக்கு அடுத்த ஆறு மாதத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்கியுள்ளது. ஆனால், அதுவே இரண்டு தலைமுறை வெட்டுக்கிளிகளை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு வளரக்கூடும், இதனால் தாவரங்களுக்குப் பேரழிவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

``வெட்டுக்கிளிகளின் இடம்பெயர்வு கணிக்க முடியாதவை. அதேபோல் அவற்றைத் தடுக்கும் திட்டம் வகுப்பதும் கடினமானது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு முன்னரே அதற்கான பூச்சிமருந்தைத் தெளித்தால் இதை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால், ஆரம்பத்தில் வெட்டுக்கிளிகளை அனுமதித்துவிட்டு பிறகு நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பயனும் இருக்காது . நிச்சயம் அந்த இடத்தில் பயிர்களின் பேரழிவு இருக்கும்" என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு