Published:Updated:

பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?

தெ.சு.கவுதமன்

பதஞ்சலியில் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பல பொருள்கள் மூன்றாம் நபர்களாலும் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தயாரிப்புகளின் தரத்தில் மாறுபாடுகள் இருக்கின்றன.

பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?
பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?

பதஞ்சலி தயாரிப்புகளின் நிறுவனரான பாபா ராம்தேவ், 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் இணைந்து ஜன்லோக்பால் சட்டம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் இறங்கினார். அதுவரை வட இந்தியாவில் மட்டுமே அறியப்பட்டிருந்த பாபா ராம்தேவ், போராட்டத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் அறிமுகமானார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக, மோடியை ஆதரித்து பிரசாரம் செய்ததால், மேலும் பிரபலமானார். அவருடைய பதஞ்சலி நிறுவனமும் பிரபலமடைந்தது. தனது தயாரிப்புகளை வெறுமனே விளம்பரப்படுத்தாமல், இந்து தேசியம், சுதேசியம் போன்றவற்றையும் கலந்து மக்களிடம் கொண்டுசென்றார்.

பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?

தங்களது ஆட்சி உருவாக தோள் கொடுத்த ராம்தேவுக்கு, மத்திய அரசும் இயன்ற அளவுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. பாபா ராம்தேவை உலக அளவில் முன்னிறுத்தும்விதமாக யோகா தினத்தை இந்திய அரசு அறிவித்தது. பாபா ராம்தேவ் தலைமையில் நாடெங்கும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றில் பிரதமர் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பங்கெடுத்தனர். பதஞ்சலிக்குக் கிடைத்த மத்திய அரசின் ஆதரவால், அதுவரை கோலோச்சிய பன்னாட்டு நிறுவனங்களே விற்பனையில் அடிவாங்கத் தொடங்கின. ``இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்தியச் சந்தைகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை நாட்டைவிட்டே பதஞ்சலி வெளியேற்றும்!'' என்று பாபா ராம்தேவ் சவால்விடுத்தார்.

உணவு, அழகுசாதனப் பொருள்கள், சமையல் பொருள்கள் விற்பனையால் பில்லியன் டாலர் நிறுவனமாகப் பதஞ்சலி உருவெடுத்தது. இந்த நிறுவனத்தின் 2015 - 2016 நிதியாண்டு வருவாய் 5,000 கோடி ரூபாய். 2016 - 17 நிதியாண்டில் மொத்த வருமானம் இரண்டு மடங்காகி 10,500 கோடி ரூபாயை எட்டியது. வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, தனது நிறுவனத்தை விரிவுபடுத்திக்கொண்டே வந்தார் ராம்தேவ். பதஞ்சலி தயாரிப்புகளுக்கென தனியாக விற்பனையகத்தை நாடெங்கும் கொண்டுவந்தார். ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருந்த பதஞ்சலி நிறுவனம், சமீபகாலமாக விற்பனையில் சரியத் தொடங்கியுள்ளது. 2017 - 18 நிதியாண்டில் விற்பனை இரண்டு மடங்காகி 20,000 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், பதஞ்சலியின் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருள்களின் தனித்த விற்பனை 10% சரிவடைந்து 8,148 கோடி ரூபாயாக உள்ளது. பரபரப்பாகப் பல்வேறு பொருள்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் பதஞ்சலியின் விற்பனைச் சரிவு, பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?

இதற்கு, பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட கவனத்தை, தயாரிப்புகளின் தரத்தை உயர்த்துவதில் எடுத்துக்கொள்ளாததால், தொடக்கத்தில் இருந்த விற்பனை போகப்போக மந்தமடைந்ததாகத் தெரிகிறது. அடுத்தடுத்து நிறைய கடைகளைத் திறப்பதில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தியதால், அவற்றை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி அறிமுகம் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தியபோது பதஞ்சலி நிறுவனமும் பாதிப்புக்குள்ளானது.

பதஞ்சலியில் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பல பொருள்கள் மூன்றாம் நபர்களாலும் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தயாரிப்புகளின் தரத்தில் மாறுபாடுகள் இருக்கின்றன. பதஞ்சலி தயாரிப்புகள் 3,500 விநியோகஸ்தர்களின் மூலமாகவும், 47,000 சில்லறை விற்பனையாளர்களின் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. சரியான நேரத்தில் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் பிரச்னை, நீண்டதூர சரக்குப் போக்குவரத்தில் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. பதஞ்சலி தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் பயன்படுத்தும் கணினி மென்பொருள் அப்டேட்டாக இல்லாததால், விற்பனை குறித்து துல்லியமாகக் கணக்கிடுவதிலும் குழப்பம் உள்ளது.

பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?

பதஞ்சலியின் சில ஆயுர்வேதப் பொருள்களில் ரசாயனக் கலப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட செய்தி, தயாரிப்புகளின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. பதஞ்சலி நிறுவனம், குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும்  கால் பதிக்க விரும்பியது. ஆனால், அதற்கேற்ற சரியான திட்டமிடல் இல்லாததால் சிலவற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. சிம் கார்டு, சோலார் பேனல், தண்ணீர் பாட்டில், செல்போன் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுகள் விற்பனையில் இறங்கியது.

2018-ம் ஆண்டில் `கிம்போ' என்ற ஆப் பதஞ்சலியால் வெளியிடப்பட்டது. ஆனால், ராயல்டி பிரச்னைகள் காரணமாக, பயன்பாட்டிலிருந்து அந்த ஆப் விலக்கப்பட்டது. டெல்லி புறநகர்ப் பகுதியில் 2016-ம் ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆயுர்வேத, ஹெர்பல் தயாரிப்புத் தொழிற்கூடம், 2020-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியாக, பல்வேறு தயாரிப்புகளில் தடாலடியாக நுழைந்து, அவற்றைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் தடுமாறுவதும்கூட வருமான இழப்புக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

பாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி?

பாபா ராம்தேவின் நிறுவனம் என்று அறியப்பட்டாலும், அவருடைய நண்பரான ஆச்சார்ய பால்கிருஷ்ணாதான் பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளராகச் செயல்படுகிறார். பதஞ்சலி நிறுவனத்தின் 98.55% பங்குகள் இவர் வசம் இருக்கின்றன.

வருமானம் சரிவடைந்தது குறித்து ஆச்சார்ய பால்கிருஷ்ணா, ``நிறுவனம் குறுகியகாலத்தில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. சில புதிய யூனிட்டுகளைத் தொடங்கியுள்ளதால் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

Vikatan