Published:Updated:

புதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு!

ஐஷ்வர்யா
புதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு!
புதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு!
புதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு!

கஸ்தூரிரங்கன் கமிட்டி வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை வரைவின் மீதான பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு இந்த மாத இறுதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. கொள்கை வரைவு தமிழகச் சூழலில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், நாடாளுமன்ற எம்.பி-க்கள் 42 பேர் கையெழுத்திட்ட மனு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அலுவலகத்தில் நேற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மதச் சார்பற்ற கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்கிய குழு இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது. மக்கள் கருத்துக்கேட்புக்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரியும், மாநில மொழிகளிலும் கல்விக் கொள்கை வரைவை மொழிபெயர்த்து வெளியிடக் கோரியும், வரைவு தொடர்பாக பதிவு செய்யப்படும் அனைத்துக் கருத்துகளையும் வெளியிடக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு!

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ``புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டதும் அதுகுறித்து கல்வியாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தை 10.6.2019 அன்று விழுப்புரத்தில் ஒருங்கிணைத்தேன். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி அவர்களது ஆதரவைக் கோரினேன். புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும்; ஜூன் 30-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வேண்டும்; இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்பதற்கு முன் அவசரமாக இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்கிற தீர்மானங்களை முன்வைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மனு ஒன்றைத் தயாரித்து அளிக்கலாமா என்று கேட்டபோது தோழர் டி. ராஜா உற்சாகமாக ஒப்புக்கொண்டார். அவரும் நானுமாக கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் ஒப்புதல் கேட்டோம். அவர்களும் உடனே இசைவு தெரிவித்தனர்.

தோழர் ராஜா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மனுவைத் தயாரித்தேன். பிற மாநில எம்.பி-க்கள் சிலரிடம் கையொப்பம் பெறுவதற்கு மாணிக்கம் தாகூர் சிரத்தை எடுத்துக்கொண்டார். டி.ஆர்.பாலுவின் இசைவோடு கையொப்பங்களைப் பெற்றோம். மொத்தம் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இன்று ஊரில் இல்லாததால் இந்தப் பிரச்னையின் அவசர முக்கியத்துவம் கருதி அமைச்சரின் அலுவலகத்தில் திருமாவளவனும் நானும் சேர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிய இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் எம்.பி-க்களின் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது.

Vikatan