Published:Updated:

மக்களவை சபாநாயகர் பதவிக்கான என்.டி.ஏ வேட்பாளர் பிர்லா!

வெங்கட சேது.சி
மக்களவை சபாநாயகர் பதவிக்கான என்.டி.ஏ வேட்பாளர் பிர்லா!
மக்களவை சபாநாயகர் பதவிக்கான என்.டி.ஏ வேட்பாளர் பிர்லா!

பதினேழாவது மக்களவையின் முதல்நாள் கூட்டம் நிறைவடைந்து, இரண்டாம் நாளாக எம்.பி-க்கள் பதவியேற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக கோட்டா ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான என்.டி.ஏ வேட்பாளர் பிர்லா!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவை, மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளது. மக்களவையில் அறுதிப்பெரும்பான்மை பலம் பி.ஜே.பி-க்கு இருப்பதால், சபாநாயகராக இவர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

எனினும் சபாநாயகர் தேர்தல் முறைப்படி நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக சபாநாயகராக உள்ள வீரேந்திர குமார், இந்தத் தேர்தலை நடத்துவார். அதிகாரபூர்வ தேர்தல் முடிவடைந்த பின்னர், சபாநாயகர் இருக்கையில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து பிர்லாவை அமர வைப்பார்கள் என்று தெரிகிறது.

இவர், நடந்து முடிந்த தேர்தலில் கோட்டா - பண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராம்நாராயண் மீனாவை சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த மக்களவையில் சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன், இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது, சுமித்ரா மகாஜனைத் தொடர்ந்து 17-வது மக்களவை சபாநாயகராக பிர்லா பதவி ஏற்கவுள்ளார்.

சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அறிந்த அவரின் மனைவி அமித் பிர்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த தருணம் பெருமைக்குரியது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

Vikatan