Published:Updated:

``303-க்கு 37-ன் பதிலடி சரியா?" - 17வது மக்களவையின் பதவியேற்பு காட்சிகள்! #தமிழ்_வாழ்க

ஐஷ்வர்யா
``303-க்கு 37-ன் பதிலடி சரியா?" - 17வது மக்களவையின் பதவியேற்பு காட்சிகள்! #தமிழ்_வாழ்க
``303-க்கு 37-ன் பதிலடி சரியா?" - 17வது மக்களவையின் பதவியேற்பு காட்சிகள்! #தமிழ்_வாழ்க

தினேழாவது மக்களவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு இரண்டு நாள்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இயல்பாகச் சென்றுகொண்டிருந்த ஜனநாயகத் தேசத்தின் ஜனநாயக முறையிலான பதவிப்பிரமாண நிகழ்வு, உத்தரப்பிரதேசத்தின் சாத்வி பிரக்யா தாக்கூர் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து முற்றிலுமாக மாறத் தொடங்கியது. 

தன்னுடைய ஆன்மிக குரு சுவாமி பூர்ண சேதானந்த் அத்வேஷானந்தகிரியின் பெயரைத் தனக்கு முன்னால் சேர்த்துக்கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பிரக்யா, முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக, மூன்றுமுறை பதவிப் பிரமாண உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். இந்துமத வேதாகம முறைப்படி வேத விற்பன்னர்கள் மூன்று முறை வேதங்களை உச்சரிப்பது மரபு. அதன்படி பிரக்யா தாக்கூர் எம்.பி-யாகப் பதவியேற்றுக்கொண்ட முறையால், அடுத்தடுத்து பதவியேற்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணங்களிலும் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டதோடு, அது மக்களவையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. 

``303-க்கு 37-ன் பதிலடி சரியா?" - 17வது மக்களவையின் பதவியேற்பு காட்சிகள்! #தமிழ்_வாழ்க

'உன்னாவ்' தொகுதி மக்களவை உறுப்பினர் சாக்‌ஷி மஹராஜ் பதவி ஏற்று முடித்ததும், பாரதிய ஜனதா எம்.பி-க்கள் சிலர் 'மந்திர் வஹான் பனாயேங்கே' (ராமர் கோயில் அந்த இடத்திலேயே கட்டப்படும்) எனக் கோஷம் எழுப்பினார்கள். பாரதிய ஜனதா எம்.பி-க்கள் வேறு சிலர், உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பிறகு 'ஜெய் ஸ்ரீராம்' என உரக்க முழக்கமிட்டுச் சென்றனர். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி லாக்கெட் சட்டர்ஜி, 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் மாகாளி, ஜெய் துர்கா, ஜெய் பங்களா' என ஊர்ப் பக்கம் அப்பத்தாக்கள் நம் நெற்றியில் விபூதி இடுவது போன்று வரிசையாக உரக்கக் கூறினார். நடிகை ஹேமமாலினி, “ராதே! ராதே... கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு!” என்று கூறி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். முதல்நாள் பதவியேற்பு நிகழ்ச்சிகள்போல இல்லாமல் இரண்டாம்நாள் காட்சிகள் முழுவதுமாக மதம், மொழி, கடவுள் என அத்தனையையும் அடையாளப்படுத்துவதாகவே அமைந்தன. எல்லோரும் ஏதோ சொல்லும்போதுதான், தாங்களும் 'ஏதாவது சொல்லியே ஆக வேண்டும்' என்ற சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மாலா ராய் 'மம்தா பனர்ஜி ஜிந்தாபாத்' எனச் சொல்லிமுடித்ததும் 'அட இந்த யோசனை நமக்குத் தோன்றவில்லையே' என சில பாரதிய ஜனதா எம்.பி-க்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். என்றாலும், சில எம்.பி-க்கள் பதவியேற்றபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி-க்களின் செயல்பாடுகள் முகம் சுளிக்க வைப்பதாகவே இருந்தது.

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த எம்.பி கலிலூர் ரஹ்மான் பதவியேற்றபோது ஒட்டுமொத்தமாக 'ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே!' என கோஷம் போடத் தொடங்கினார்கள். ஹைதராபாத்தின் ஒவைஸி, பதவியேற்க வந்தபோது, அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே அவர் முன்பு 'ஜெய் ஸ்ரீராம்' என பி.ஜே.பி எம்.பி-க்கள் உரக்கக் கத்தியது, சற்று எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சோனியா காந்தி பதவியேற்க வரும்போது ‘பாரத் மாதா கீ ஜே’ என உரக்கக் கத்திய பாரதிய ஜனதா கட்சியினர், அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதும், ``நீங்கள் இந்தியில் உறுதிமொழி ஏற்றதுக்கு நன்றி!” என்றார்கள். ரவி கிஷன் எம்.பி, 'தாய்மொழியான போஜ்புரியில் பதவியேற்கலாமா?' எனக் கேட்டபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அரங்கேறியபோது தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார், உறுப்பினர்களை எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்ததால், பிறகு வந்த எம்.பி-க்கள், எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். 

``303-க்கு 37-ன் பதிலடி சரியா?" - 17வது மக்களவையின் பதவியேற்பு காட்சிகள்! #தமிழ்_வாழ்க

ஒவைஸி, ``ஜெய்பீம்... தக்பீர் அல்லாஹூ அக்பர்” எனத் தெரிவித்து தன் பதவியேற்பை முடித்துக்கொண்டார். சமாஜ்வாடி கட்சியின் ஷஃபிகுர் ரஹ்மான் ’உங்கள் வந்தே மாதரத்தை எங்களால் பின்பற்ற முடியாது.' எனக் கோபமாகக் கூறிவிட்டு, உறுதிமொழியை முடித்துக்கொண்டார். மேற்கு வங்கத்தின் காகோலி கோஷ் என்கிற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, ``ஜெய் ஸ்ரீராம்” கோஷத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக ``ஜெய் மாகாளி... ஜெய் மாகாளி...” எனப் பாரதிய ஜனதா கட்சியினரைப் பார்த்து உரக்கத் கத்திவிட்டு, தன்னுடைய பதவியேற்பைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் எம்.பி தீபக் தேவ் உறுதிமொழியேற்றதும், இரண்டு தரப்புக்கும் சமாதானம் செய்யும்விதமாக, ``இப்படி ஒருவருக்கொருவர் போட்டிபோடக் கூடாது. மக்களுக்காக நாம் இணைந்து இங்கே பேச வேண்டும்...” என வங்காள மொழியிலேயே பேசத் தொடங்கியதும் அவையில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. அப்போதுதான் விழித்துக் கொண்டவராக சபாநாயகர் அவரை இடைமறித்து “தேவ், இதை இங்கே பேசத் தேவையில்லை. பேசும் நேரம் வரும்போது பேசலாம்” எனக் கூறினார்.

தமிழகத்தின் ஓ.பி.ரவீந்தரநாத் குமார் தவிர அத்தனை எம்.பி-க்களுமே ”வாழ்க தமிழ்!” என்று தங்களின் உறுதிமொழியை முடித்துக்கொண்டார்கள். தி.மு.க-வின் கனிமொழி, “வாழ்க பெரியார்!” என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ``வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்... வாழ்க ஜனநாயகம்!” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், “மார்க்சியம் வாழ்க” என்றார். ஒருகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான எதிர்வினையாகத் தொடங்கியது, தர்மபுரி எம்.பி செந்தில்குமார் பேசுகையில் மடைமாற்றம் கண்டிருந்தது. “கலைஞர் கருணாநிதி வாழ்க!” என்று தன்னுடைய உரையை முடித்தார் அவர். இந்தக் களேபரம் அத்தனைக்கும் ஆதி பிரக்யா சிங் தாக்கூர். இந்த முந்நூற்றுச் சொச்சம் பேரின் அலப்பறையால் நாடாளுமன்றம் `300 பருத்தி வீரர்கள்' திரைப்படத்தின் போர்க்களம் போலக் காட்சியளித்தது. 

``303-க்கு 37-ன் பதிலடி சரியா?" - 17வது மக்களவையின் பதவியேற்பு காட்சிகள்! #தமிழ்_வாழ்க

உண்மையில் தற்காலிக சபாநாயகர் என்ன செய்திருக்க வேண்டும். தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா கூறுகையில், ``அனுபவமற்ற எம்.பி-க்கள் இப்படி மரபு மீறும்போது, நாடாளுமன்றச் சபாநாயகர் அவர்களின் பேச்சை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் அவர்கள் கோஷம் எழுப்பும்போதே, சபாநாயகர் அவர்களைத் தடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இதுபோன்று எதுவும் எல்லை மீறியிருக்காது. ஆனால், அவர் இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்" என்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சுயேச்சை எம்.பி நவ்நீத் கௌர் கூறுகையில், “ஜெய் ஸ்ரீராம் கூறுவதற்கு இதுவா இடம்?” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார், “உறுதிமொழியேற்பில் எது தேவையில்லாததோ அது நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும்” என்று மட்டும் அறிவித்துள்ளார். 

ஒவ்வொரு நாடாளுமன்ற அவையிலும் `சிறந்த நாடாளுமன்றவாதி’ என்று ஒரு சிலரைக் குறிப்பிடுவார்கள். நாடாளுமன்றத்தில், எந்தச் சூழலில் எதை எப்படிப் பேச வேண்டும். அவைக் கூட்டத்தொடரில் விவாதங்களை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதை உணர்ந்து நடப்பவர்கள் அவர்கள். ஐந்து வருட காலத்தில், மக்களவைத் தொடங்கிய இரண்டாம்நாள் அன்றே இடம்பெற்ற காட்சிகள் ’சிறந்த நாடாளுமன்றவாதி’ என்கிற சொல்லாடலின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவே இருந்தது.

கடவுளை நினைவில் நிறுத்தியிருப்பவர்கள், தங்களை வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த நாட்டு மக்களையும் மறக்காமல் இருந்தால் சரி!

Vikatan