Published:Updated:

`மோடி, அமித் ஷாவின் நட்பு; சமூக ஆர்வலர்' - ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது எப்படி?

மலையரசு
`மோடி, அமித் ஷாவின் நட்பு; சமூக ஆர்வலர்' - ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது எப்படி?
`மோடி, அமித் ஷாவின் நட்பு; சமூக ஆர்வலர்' - ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது எப்படி?

பிரதமர் மோடி முன்மொழிய மக்களவையின் 17-வது சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

`மோடி, அமித் ஷாவின் நட்பு; சமூக ஆர்வலர்' - ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது எப்படி?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான அரசியல் சாசன அதிகாரம் கொண்டதுதான் மக்களவை சபாநாயகர் பதவி. மக்களவையின் அனைத்து அதிகாரங்களும் சபாநாயகர் ஒருவரிடமே இருக்கும். எந்த உறுப்பினர் எவ்வளவு நேரம் பேச வேண்டும், யாருடைய பேச்சுகள் அவைக்குறிப்பில் இருக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவையில் சபாநாயகரின் அனுமதியின்றி எதையும் செய்ய முடியாது. இதுபோன்ற உயர் அதிகாரம் கொண்ட பதவியை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு ஒதுக்கியது. அதன்படி மீரா குமார் சபாநாயராக இருந்தார். தொடர்ந்து வந்த பா.ஜ.க-வும் சுமித்ரா மகாஜனை அந்தப் பதவியில் உட்காரவைத்தது. இந்த முறை சுமித்ரா மகாஜன் தேர்தலில் போட்டியிடாததால் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், எந்தவித எதிர்ப்பும் இல்லாத வகையில் 17-வது சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

யார் இந்த ஓம் பிர்லா?

கல்வியும் கற்றலும் நிறைந்த `மினி இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜஸ்தானின் கோட்டா நகர்தான் ஓம் பிர்லாவுக்குச் சொந்த ஊர். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிர்லா எல்லா பா.ஜ.க-காரர்களைப் போலவும் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் பற்றாளர். இதனால் தனது கல்லூரிப் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இணைந்தார். இதில் நன்றாகச் செயல்பட பிர்லாவின் அரசியல் எதிர்காலம் துளிர்விடத் தொடங்கியது. பா.ஜ.க-வில் இணைந்த அவருக்கு அடுத்தடுத்த பதவிகள் எளிதாகக் கிடைத்தன. மாணவர் சங்கத் தலைவராக இருந்தபோது மாநில அளவிலும், மத்திய அளவிலும் கட்சி ரீதியில் தொடர்பை ஏற்படுத்தி முன்னேறினார். 

`மோடி, அமித் ஷாவின் நட்பு; சமூக ஆர்வலர்' - ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது எப்படி?

இந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க-வின் யுவ மோர்ச்சா அணிக்குத் தலைவராக இருந்தபோது, 2003-ம் ஆண்டு தேர்தலில் சீட் எளிதாகக் கிடைக்க, தனது சொந்த ஊரான கோட்டா தெற்குத் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் தொடர்ந்து 2008, 2013-ம் ஆண்டும் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ-வாக இருந்த காலகட்டத்தில் ராஜஸ்தான் அரசின் மக்களவை செயலாளர் பொறுப்பு தேடி வர அதன்மூலம் தனது டெல்லி தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

கோட்டா டூ நியூடெல்லி!

பா.ஜ.க-வின் யுவ மோர்ச்சா பிரிவில் ஆறு ஆண்டுகள் தலைவராக இருந்த பிர்லா சாதாரண அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல் சமூக ஆர்வலராக இருப்பவர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்காக இவர் நடத்திவரும் அமைப்பில் சுமார் 100-க்கும் அதிகமான தொண்டர்கள் உள்ளனர். சரியாக 2001-ம் ஆண்டு, குஜராத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட சமயம் அது. தனது அமைப்புடன் குஜராத்தில் களமிறங்கி தீவிரமாக சமூகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அப்போதைய குஜராத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோடி மற்றும் அமித் ஷாவின் பழக்கம் ஏற்பட, அவர்களின் நட்பு வட்டாரத்துக்குள் வந்தார்.

`மோடி, அமித் ஷாவின் நட்பு; சமூக ஆர்வலர்' - ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது எப்படி?

இந்தப் பழக்கம் பின்னாளில் மக்களவை உறுப்பினராகச் சென்ற பிறகும் கைகொடுக்க தற்போது சபாநாயகர் பதவிக்கு மோடியே நேரடியாகக் கைகாட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆம், பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது, இரண்டு முறை மட்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிர்லா சபாநாயகராக டிக் அடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் மோடியும், அமித் ஷாவும்தான்.

இதனால் தான், ``ஓய்வின்றி எப்பொழுதும் மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம் பிர்லா. பொது வாழ்வில்  பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். நான் பிர்லாவுடன் இணைந்து வெகுநாள்கள் பணியாற்றியுள்ளேன். மாணவர் தலைவராக தனது அரசியல் பணியைத் தொடங்கியவர் ஓய்வின்றி இன்று வரையில் சமூகப் பணியாற்றி வருகிறார். அவரின் ஓயாத உழைப்பால்தான் சிறிய கோட்டா நகரம் பல பயன்களைப் பெற்றுள்ளது. சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாடாளுமன்றத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம்" எனப் பூரிப்புடன் மோடி பேசியுள்ளார்.

Vikatan