Published:Updated:

மொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி!

விஷ்ணுராஜ் சௌ
மொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி!
மொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி!

நாடாளுமன்றம் என்பது விவாதக்களம் மட்டுமல்ல; சில நேரங்களில் அது விளையாட்டுக் களமும்கூட. விளையாடத் தெரிந்த வீரரால் மட்டும்தான், அங்கு தன் கருத்தை ஜனநாயக  முறையில் வெளிப்படுத்தி, வெற்றியின் பாதையை நோக்கி அவற்றை நகர்த்த முடியும். ஆம், இந்த விவாத விளையாட்டை ஆடத் தெரிந்தவர்கள்  மட்டும்தான், டெல்லி கோட்டையை வென்று காட்டுவார்கள். ஆம், அசாதுதின் ஓவைசி அதில் கைதேர்ந்தவர்தான். அதனால்தான், மக்களவை உறுப்பினர் பதவி ஏற்பு உறுதிமொழிக்காக ஓவைசியின் பெயரை உச்சரித்த உடனே எதிர்த்துக் குரல்கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் பி.ஜே.பி உறுப்பினர்கள். இத்தனைக்கும் மக்களவையில் ஓவைசியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ-யின் மொத்த உறுப்பினர்கள் என்னவோ இரண்டு பேர்தான்.

மொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி!

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு என்ற உடன், ஒரு காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து இன்று ஒற்றை இலக்கத்தில் சுருங்கிவிட்ட இடதுசாரிகளைப் போல நினைத்துவிடாதீர்கள். இதுவரை அவருடைய கட்சியின் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களே இரண்டு பேர்தான். 2004, 2009, 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று, தனி ஒருவராக நாடாளுமன்றம் சென்றார் அவர். ஆனாலும், மக்களவையில் அவருடைய பேச்சுகள் எப்போதுமே, ஒருசில இடங்களில் வெற்றிவாய்ப்பை இழந்த வலுவான எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சைப் போன்று அமையும். ஆம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடிய சிறந்த எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஓவைசியும் ஒருவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவிற்கு ஓவைசியின் பெயர் அறிவிக்கப்பட்ட உடனே, வலுவான குரல்கள் எழும்பக் காரணம் ஓவைசி, பி.ஜே.பி-க்கு எதிராக வைத்துள்ள வலுவான கருத்தியல் பலம்தான். அதுதான், அவர் பதவியேற்பின் போதும் அரங்கேறியது. 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட பி.ஜே.பி, 'ஜெய் ஶ்ரீராம்' என ஓவைசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப, சிரித்துக்கொண்டே கோஷம் எழுப்பியவர்களுக்கு பதிலடிகொடுத்தார் ஓவைசி. அப்போது ஓவைசி சொன்ன ' அல்லா ஹூ அக்பர்'ம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி!

ஓவைசியின் பெரும் பலமே ஹைதராபாத் தான். 1984 தேர்தலுக்குப் பிறகு, இதுவரை நடைபெற்றுள்ள 10 மக்களவைத் தேர்தல்களிலும் ஓவைசியினுடைய கட்சிக்குத்தான் வாய்ப்பளித்திருக்கிறார்கள் ஹைதராபாத் மக்கள். ஹைதராபாத் என்றால், அந்த நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமல்ல, அதற்குள்பட்ட சட்டமன்றத் தொகுதிகளும்தான். ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், குறைந்தது எப்போதும் ஆறு தொகுதிகள் ஓவைசியின் வசம்தான். அந்த  வெற்றியும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில்தான் அமையும். இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புகூட ஆந்திரா, தெலங்கானா தேர்தல் வெற்றியைப் பற்றி செய்தியாளர்கள் ஓவைசியிடம் கேட்டபோது, சற்றும் தயங்காமல் அவர் சொன்ன முதல் பதில், “ஹைதராபாத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். தெலங்கானாவின் மற்ற தொகுதிகளில் சந்திரசேகர்ராவின் கட்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆந்திராவைப்  பொறுத்தவரை ஜெகன் மோகன் ரெட்டிதான் வெற்றிபெறுவார்” என்றார்.  அவர் சொன்னது போலவே தேர்தல் முடிவுகளும் அமைந்தன. ஓவைசிக்கு முதல் விருப்பம் ஹைதராபாத் என்றால், அடுத்த இரண்டு விருப்பங்கள் பைக்கும், கிரிக்கெட்டும்தான்.

ஓவைசி சிறந்த கிரிக்கெட் வீரரும்கூட. இந்தியாவில் பிறந்த இளைஞர்களையும் கிரிக்கெட்டையும் எளிதாகப் பிரித்துவிட முடியாது. அதுவும், ஓவைசி இங்கிலாந்தில் படித்தவர். அவர் வாழ்விலும் கிரிக்கெட்டின்மீது பெரும் காதல் உண்டு. அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரும்கூட. ஆனால், அவற்றை எல்லாம் தொடர வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை. தன் தந்தையைப் போலவே 25 வயதில் ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், இப்போதும் தன்னுடைய ஓய்வு நேரங்களில் 'வாரணம் ஆயிரம்' பட அப்பா சூர்யா போல, குழந்தைகளோடு கிரிக்கெட் விளையாடுவதுதான் அவரின் விருப்பம்.

பைக் ஓட்டுவதிலும் பெரும் காதல் உண்டு அவருக்கு. ஒருவகையில் இது அவருடைய அப்பாவிடமிருந்து ஒட்டிக்கொண்டதுதான். மக்களின் நிலையைப் பற்றி அறியவும், தொண்டர்களுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் பைக் பயணத்தை வழக்கமாக வைத்திருந்தார். அசாதுதின் ஓவைசியின் அப்பா, சுல்தான் ஓவைசி. இன்று அந்தப் பழக்கம் இவருக்கும் வந்துவிட்டது. கடந்த டிசம்பரில் தெலங்கானா மாநிலத் தேர்தல் நடந்து முடிந்த சமயம், ஓவைசிக்கு கொலை மிரட்டல்களும் வந்திருந்தன. ஆனால், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பைக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறிய பதில், “ஹைதராபாத் பாதுகாப்பான நகரம்” என்பதுதான். கடந்த 2016-ம் ஆண்டு, ஹைதராபாத்  பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமூலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, அதற்கு ஆதரவு தெரிவித்து, பைக்கில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் வந்து மணவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டார் ஓவைசி.

மொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி!

முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு, கம்யூனிஸ்ட்டுகள்கூட ஆதரவுக்கரம் நீட்டி வாக்களிக்க, மக்களவை விவாதத்தில் 'இது அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என சண்டை செய்தவர் ஓவைசி. தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “தெலங்கானாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்திலிருந்து நிஜாம் ஓடியதைப் போல, ஓவைசியும் ஓடுவார்” என்று பி.ஜே.பி-யினர் கூறினர். அதற்குப் பதிலளித்த ஓவைசி, “இந்தியா என் தந்தை நாடு, நான் இந்தியாவின் முதல் தர குடிமகன், என்னை யாரும் இங்கிருந்து அகற்ற முடியாது” என்றார். சமீபத்தில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த அபினந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டபோது, “அபினந்தனை மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்“ என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தவர் ஓவைசிதான்.

ஆம். ஓவைசி, ஒரு முதல்தர இந்தியக் குடிமகன்தான்!

Vikatan