Published:Updated:

`பொருளாதார சீர்திருத்தத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட்?' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை

வெங்கட சேது.சி
`பொருளாதார சீர்திருத்தத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட்?' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை
`பொருளாதார சீர்திருத்தத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட்?' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை

மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தன்னுடைய முதலாவது பட்ஜெட்டை ஜூலை 5-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது பட்ஜெட்டை இறுதிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே பொருளாதார நிபுணர்கள், பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியும் ஆலோசனை நடத்தி, நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

`பொருளாதார சீர்திருத்தத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட்?' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை

இதன்மூலம் பொருளாதாரச் சீர்திருத்தத்தை நோக்கிய பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என்று நிதித்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய தனியார் நிறுவனங்களின் முதலீட்டுக்கும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டின் அம்சங்கள் இருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அடுத்த 5 ஆண்டுக்கால பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளை நோக்கிய பட்ஜெட்டாகவும், ரியல் எஸ்டேட், தொழிலாளர்கள் துறைகளை ஊக்குவிக்கக்கூடிய வகையிலும், அமைவதுடன் முதலீடுகளை அதிகரித்து, தொழில்முனைவோரை அதிகளவில் உருவாக்கக்கூடிய வகையிலும் பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூகக் கட்டமைப்புகளில் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை செலவிடுவதன் மூலம், நீடித்த சம அளவிலான வளர்ச்சியை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. 

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு செயல்வடிவம் அளிக்கம் வகையில் முழுமையான பட்ஜெட்டில் சாதகமான அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசின் முன் உள்ள சவால்களாக தொய்வடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை ஆகியன உள்ளன. இந்தச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில், மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் வீட்டுக் கடன் பெறுவோர் மற்றும் வங்கிகளில் பல்வேறு கடன் பெறுவோர் விகிதம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி, ஜூன் 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவிகிதமாகக் குறைத்து உத்தரவிட்டது. இந்த விகிதம் மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பிரிவினருக்கான வருமான வரி உச்சவரம்பு ஏற்கெனவே ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikatan