Published:Updated:

‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி!’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை

ஆ.பழனியப்பன்
‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி!’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை
‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி!’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக்குழுவின் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி, “நம் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மிகப்பெரிய வியாபாரி. ஆனால், நாங்கள் (காங்கிரஸ்) பொருளை  விற்கத் தவறிவிட்டோம். அதனால், தேர்தலில் தோற்றுவிட்டோம்” என்று கூறியிருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி!’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நாடாளுமன்றத்தில் பேசிய சௌத்ரி, பி.ஜே.பி அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவருடைய பேச்சில், சில கருத்துகள் மரபை மீறியதாக இருந்ததால், அவற்றை நீக்குவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அவரை விமர்சித்த சௌத்ரி, “பிரதமரைப் புகழ்வதில் சாரங்கி எல்லை மீறிவிட்டார். பல்வேறு பிரச்னைகளில் அரசு தோல்வியடைந்ததற்காக, அரசைக் கடுமையாக விமர்சிக்க வேண்டுமென்று  விரும்புகிறோம். கடும் வறட்சியால் நாடு சிரமப்பட்டுவருகிறது. ஆனால், அதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு பி.ஜே.பி எம்.பி-க்கள் எதையும் செய்வதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார் என்று நினைக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.

மேலும், “மோடியைப் புகழ்ந்தால் போதும் என்று பி.ஜே.பி எம்.பி-க்கள் நினைக்கிறார்கள். ஏழை மக்களுக்காக காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை பி.ஜே.பி அரசு மாற்றிவிட்டது”  என்று சௌத்ரி குற்றம் சாட்டினார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய அவர், “அதில் தவறு நடந்திருந்தால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சிறைக்குப் போகவில்லை. ஏனென்றால், அதில் தவறு நடக்கவில்லை” என்றார். காங்கிரஸ் தலைவர் சௌத்ரியின் இந்தப் பேச்சு, ஆளும் பி.ஜே.பி தரப்பைச் சூடேற்றியது.

Vikatan