Published:Updated:

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

சக்திவேல்

பதவி முதல் பணம் வரை எதிலும் சமரசம் செய்துகொள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாராக இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு காங்கிரஸ் தலைமைக்கும் வலு இல்லை. இன்னொரு பக்கம், அடிபட்ட புலியென எடியூரப்பா கண்ணிவைத்து காத்திருக்கிறார்.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!
கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

ர்நாடக மாநிலத்தில் அரசியல் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள். ‘நாம் எதுவும் செய்ய வேண்டாம். அவர்களே செய்துகொள்வார்கள்’ என்று மகிழ்ந்துகொண்டிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா. என்னதான் பிரச்னை? ஒரே பிரச்னைதான்... ’அமைச்சர்’ பதவி!

கர்நாடகத்தில், கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் முடிந்தது. பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களைக் காங்கிரஸும் பெறவில்லை, பா.ஜ.க-வும் நெருங்கவில்லை. காங்கிரஸ் 79 இடங்களுக்குப் பின்தங்கியது. பா.ஜ.க 105 இடங்களை எட்டியது. சித்தராமையா ஏற்கெனவே எதிர்பார்த்த முடிவுதான் அது என்பதால், அவர் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், `ஈ சாலா சர்கார் நமதே’ என்று வீதிக்கு வீதி விளம்பரம் காட்டிய எடியூரப்பாதான் மனம் நொந்துபோனார். தெரியுமா? தேர்தல் முடிவு நாளில் இஷ்டதெய்வமான ஈஸ்வரனுக்கு அருகிலேயே அமர்ந்துகிடந்தார் அவர். பக்தியெல்லாம் இல்லை, பயம்!

ஆனால், மதியம் வரைக்கும் மட்டுமே எடியூரப்பாவுக்கு மகேசன் துணையிருந்தான். கிட்டத்தட்ட 120 இடங்களில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு. உற்சாகத்தின் உச்சிக்கே போன எடியூரப்பா, ‘பதவியேற்பு விழாவை நாளைக்கு நடத்தலாமா, நாளை கழிச்சு நடத்தலாமா’ என்று சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். ஆனால் பாருங்கள்... மாலை நேரத்தில் மகேசன் அவரைக் கைவிட்டான். ஆட்டம் திசை மாறியது. மழை மாதிரி குறுக்கே வந்து நின்றது, மதச்சார்பற்ற ஜனதா தளம். பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை பறிபோனது. ‘நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்’ என்று, அழுதேவிட்டார் எடியூரப்பா. இருக்காதா பின்னே... 7 ஆண்டுகளாகப் பதவி எதுவும் இல்லாமல், ஆளே இளைத்திருந்தார் எடியூரப்பா.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

ஆனாலும், தேசியத் தலைவர் அமித் ஷாவின் வார்த்தைகள் அவருக்கு ஊக்கமளித்தன. ‘ஆர்.பி.ஐ-யில் இருந்து சி.பி.ஐ வரைக்கும் நம்மாளுங்கதான்... பார்த்துப்போம். நீங்க பதவியேற்கிறீங்க’ என்று சொல்லாமல் செய்து காட்டினார் அமித் ஷா. அடுத்த சில மணி நேரத்தில் ஆளுநர் வஜூபாய் வாலாவிடமிருந்து எடியூராப்பாவுக்கு வாழ்த்து வந்தது. ‘ஆட்சியமைக்க வாங்கோ...’ என்று அன்புபொங்க அழைத்தார் ஆளுநர் வஜூபாய். எடியூரப்பா கெட்டவர்தான். ஆனால், ரொம்பக் கெட்டவரில்லை. அதனால், ‘சார், அந்த அரசியலமைப்பை என்ன செய்வது...’ என்று தயங்கினார். ‘அது கிடக்குது விடுங்கோ... அவற்றையெல்லாம் மதிச்சா நமக்கென்ன மதிப்பு...’ என்று, அமித் ஷா மைண்ட் வாய்ஸைத் தன் வாய்ஸில் சொன்னார் வஜூபாய். அவர் அப்படிப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!

அப்புறம் நடந்த ‘இருநாள் கூத்து’ எல்லோரும் அறிந்ததே. இருந்தாலும், சுருக்கமாகப் பார்க்கலாம். எடியூரப்பாவுக்கு ஆளுநர் மாளிகையிலேயே பதவிப்பிரமாணம் செய்துவைத்தார், வஜூபாய். காங்கிரஸ் கடுப்பாகி கனம் கோர்ட்டார் அவர்களை நாடியது. காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞராக அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். பா.ஜ.க-வுக்கு முகுல் ரோத்கி. ‘சபாஷ்... சரியான போட்டி’ என்று காபி கப்புடன் வந்து அமர்ந்தார்கள் நீதியரசர்கள்.

எடுத்த எடுப்பிலேயே, ‘அவர் ஆளுநரா, ஆளுங்கட்சியின் ஸ்பீக்கரா’ என்று பவுன்சர் போட்டார் சிங்வி. ஆனால், ரோத்கியிடம் ஒரு ரியாக்ஸனும் இல்லை. சிங்வி அவரை உற்றுப் பார்த்தார். கேஸுவலாக கேஸ்கட்டில் இருந்து ஒரு பேப்பரை உருவிச்சுருட்டி, காது குடைய ஆரம்பித்தார் ரோத்கி. வெறுப்பான சிங்வி, ‘அரசியலமைப்பை மீறிய ஆளுநர் வஜூபாய் வாலா இங்கே ஆஜராக வேண்டும்’ என்று யார்க்கர் வீசினார். அப்போதும் ரோத்கியிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இன்னும் ஆழமாகப் பேப்பரை இறக்கி காதுகுடைவதைத் தொடர்ந்தார் அவர்.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

சிங்வி மேலும் மேலும் வெறுப்பானார். `யுவரானர், என்ன இது...’ என்று நீதியரசர்களை அவர் நோக்க, நீதியரசர்கள், ‘உங்கள் வாதத்தை எதிர்பார்க்கிறார் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்’ என்று ரோத்கியைப் பார்க்க, ஒருவழியாக இருக்கையைவிட்டு எழுந்தார் அவர். எழுந்தவர்,  ‘அனைத்தும் சரியாகவே நடக்கிறது. ஆளுநர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை’ என்று ஒரே போடாகப்போட்டார். நீதி தேவதையின் கண்கள் நிர்வாணமாகின. உடனே, பார்வையாளர் பகுதியில் உரையாடல் ஓடியது. `என்ன சொன்னார் அவர்?’ என்று முன்னே வந்து கேட்டான் ஒருவன். ‘ம்ம்... ரோஷம் என்றால் என்ன விலை என்று கேட்கிறார் ரோத்கி’ என்று பதில் சொன்னான், அருகில் இருந்தவன். அடுத்தென்ன? ‘எடியூரப்பா பதவியேற்பை ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிடுகிறோம்’ என்று தீர்ப்பெழுதினார்கள் நீதியரசர்கள்!

அடுத்து நடந்த அத்தனையும் அறப்பிறழ்வுகள், அத்துமீறல்கள்! எவன், எப்போ, எந்தப் பக்கம் தாவுவான் என்றே கணிக்க முடியாத நிலை. லட்சியங்கள் லட்சங்களுக்கு விலைபோயின. கொள்கைகள் கோடிகளுக்கு இரையாகின. ஜனநாயகம் ஜனகராஜ் மாதிரி விடாமல் சிரித்தது!

`ஆதரவு தருவோர்க்கு `30 கோடி ரூபாய் பணமும் அமைச்சர் பதவியும்’ என்று ஆஃபர் அறிவித்தார் எடியூரப்பா. பவர் பாலிடிக்ஸை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் சும்மாயிருக்குமா... அவர்கள் சிவக்குமாரை இறக்கினார்கள். ‘இவனா.. இவன் எனக்கே எத்தனாச்சே...’ என்று எடியூரப்பா தலையில் கைவைத்தார். அவர் பயத்தில் அர்த்தமிருந்தது. அகமது படேல் மாநிலங்களவைக்குச் செல்வதைத் தடுக்க அமித் ஷா திட்டமிட்டபோது, காங்கிரஸின் ஆபத்பாந்தவனாய் களமிறங்கியர் சிவக்குமார்தான். குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பெங்களூரு ரிசார்ட்டில் பூட்டிவைத்து பூதம்போலப் பாதுகாத்தவர் அவர். இப்போதும் அதே விளக்கைத் தேய்த்து அதே பூதத்தை வரவழைத்தார் `அலாவுதீன்’ ராகுல். சும்மா சொல்லக் கூடாது... சிவக்குமார் கண்ணாடியைக் கழட்டி மாட்டியபோதெல்லாம், காங்கிரஸ் ஒருபடி முன்னால் நகர்ந்தது. கடைசியில், இலக்கை எட்டிவிட்டுத்தான் மறைந்தது பூதம். குமாரசாமி முதலமைச்சர் ஆனார். பரமேஸ்வரன் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

ஆனால், ஆசை ஆசையாக முதல்வர் பதவியேற்ற எடியூரப்பாவுக்குத்தான் அதை விட்டுவிலக மனமேயில்லை. அனைத்தும் கைவிட்டுப்போன விரக்தியில், ‘ஆளுங்கட்சியாக இருந்துதான், மக்களுக்காக உழைக்க வேண்டுமென்றில்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும் உழைக்கலாம்’ என்று, அவர் சட்டமன்றத்தில் கண்ணீர்விட்டது கல்மனதையும் கரைக்கும் காட்சி. அவரைப் போன்ற சின்ன குழந்தையை அழவைத்த பாவம் சிவக்குமாரையும் சித்தராமையாவையும் சும்மாவே விடாது..!

அப்போதும், அமித் ஜிதான் எடியூரப்பாவுக்கு ஆறுதல் சொன்னாராம். ‘நாடே இப்போது நம் கையில்...  நாம் சொல்வதுதான் வேதம், நாம் செய்வதே யாகம்’ என்று ஒரே அடியாக அடித்திருக்கிறார் அவர். அமித் ஜி வார்த்தையைக் கேட்ட அடுத்த நொடி, எடி டெடி பியர் மாதிரி நிமிர்ந்து உட்கார்ந்தார். அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் அவர் காட்டிய பாய்ச்சலை, அமித் ஷாவே அண்ணாந்து பார்த்தார். 25 இடங்களை வென்று கட்சிக்குக் காணிக்கையாக்கினார் எடியூரப்பா. அதற்கு அவர் எதிர்நோக்கும் பலன் ‘முதலமைச்சர்’ பதவி.

முடிவு வெளியான நாளிலேயே,  ‘உன் பதவியின் நாள்கள் எண்ணப்படுகிறது குமாரா’ என்று, குமாரசாமிக்கு செய்தி தட்டிவிட்டார் எடியூரப்பா. அடுத்த செய்தி அமித் ஷாவுக்கு. ‘அப்புறம் சார்... இன்னிக்குக் கலைக்கிறீங்களா, இல்ல நாளைக்கா’ என்றும் கேட்டுவிட்டார். But, Amit ji has other ideas. `இப்போ வேண்டாம். கொஞ்சம் கேப் விட்டு அடிப்போம்’ என்று சொல்லிவிட்டார் அமித் ஷா. காரணம் என்ன பெரிதாய் இருக்கப்போகிறது... காங்கிரஸின் பலவீனத்தையே பா.ஜ.க-வின் முதல் பலமாகப் பார்ப்பவர் அவர். கர்நாடகத்திலும் அதையேதான் எதிர்நோக்குகிறார்! ஆனால், எடியூரப்பாதான் கொஞ்சம் அப்செட். இருந்தாலும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் ‘ஆபரேஷன் லோட்டஸை’ ஆக்டிவ்வாகவே வைத்திருக்கிறார் அவர். பரிசுத்தொகையையும் 60 கோடியாக உயர்த்தியிருப்பதாகத் தகவல்.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

இது பா.ஜ.க பக்கம். காங்கிரஸின் பக்கத்தையும் பார்க்க வேண்டாமா... அவர்கள் என்ன செய்கிறார்கள்... எதுவும் செய்யவில்லை! `எடியூரப்பா பாவம். அவருக்கு ஏன் நாம் சிரமம் கொடுக்க வேண்டும்’ என்று, நெருப்பாய் வேலைபார்த்து வருகிறார்கள்.

குமாரசாமிக்கு ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸால் குடைச்சல்தான். ஆட்சியமைத்த நான்கே மாதங்களில் ஒரு கூட்டத்தில் பேசியவர், ‘முதல்வர் பதவி என்பது ரோஜாப்படுக்கை அல்ல, அது முள் படுக்கை’ என்று புத்த தத்துவம் பேசி அதிரவைத்தார். அவர் எத்தனை தூரத்துக்கு அல்லல்படுகிறார் என்பதை அந்த வார்த்தைகளைக்கொண்டே அறிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள். நடுவில் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், கொஞ்சநாள் அமைதியாக இருந்தார்கள். இதோ, இப்போது மீண்டும் அவர்களின் கை அரிக்க ஆரம்பித்துவிட்டது. ‘நேத்து வந்தவங்களுக்குப் பதவி தர்றீங்க... இத்தனை வருஷமா இருக்கேன் எனக்கில்லையா பதவி’ என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். ‘கொடி கட்டுவதிலிருந்து கோடி கொடுப்பது வரை ஆக்டிவ்வாக இருக்கிறோம். எங்களுக்கே வேண்டும் அமைச்சர் பதவி’ என்று அடம்பிடிக்கிறார்கள் கட்சியின் ஜூனியர்கள்.

இப்படிப் பேசுபவர்கள் ஒருவர் ரெண்டு பேர் என்றால், குமாரசாமி சமாளித்துவிடுவார். அப்படிச் சமாளித்த அனுபவம் அவருக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், இருபதுக்கும் அதிகமானவர்கள் அமைச்சர் பதவிகேட்டு அவரை நாளும் நச்சரிக்கிறார்கள். அஜய் சிங், முனியப்பா, நாகேஷ் என எத்தனையோ பேர்! ஒன்று தெரியுமா... கர்நாடகத்தில் பத்து மாதங்களாக இரண்டு வார்த்தைகள் டிரெண்டிங்கிலேயே இருக்கின்றன. அவை இவையே... ‘அமைச்சரவை விரிவாக்கம்’!

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

ஏதோ ஒரு ராத்திரியில் அப்பா தேவ கவுடாவைக் கட்டிப்பித்து அழுதிருப்பார்போல குமாரசாமி. அடுத்த நாள் வெளியே வந்து பொங்கித் தீர்த்துவிட்டார் தேவ கவுடா. ‘அவர்கள் எங்களுக்கு முழு ஆட்சிக்காலமும் ஆதரவளிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் சரியான திசையில் இல்லை. நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் அவர்களைவிட ‘ஸ்மார்ட்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த ‘ஸ்மார்ட்’ என்ற வார்த்தைக்குப் பின்னால், ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அதாவது, அது ஓர் அலர்ட். ஏனென்றால், அவர் கட்சியின் `டிராக் ரெக்கார்ட்’ அப்படி!

2004-ம் ஆண்டு இதே காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸுக்கு முதல்வர் யோகம் அடித்தது. மூத்த தலைவர் தரம் சிங் முதலமைச்சரானார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கவிழ்த்தார் குமாரசாமி. அவர் அப்போது ஜோடி போட்டது யாருடன் தெரியுமா? இப்போதைய எதிரி எடியூரப்பாவுடன்! `இந்த `20 மாசத்துக்கு நான்... அடுத்த 20 மாசத்துக்கு நீ’ என்று, முதல்வர் பதவியைப் பலாப்பழம்போல பங்குபோட்டுக் கொண்டார்கள் இரண்டு பேரும். அந்த இருபது மாதங்களும் எடப்பாடி - பன்னீர்போல வெளியே சிரித்துக்கொண்டும், உள்ளே முறைத்துக்கொண்டும் திரிந்தார்கள் இருவரும்.

இருபதாவது மாதமும் வந்தது. ‘அப்புறம் பங்காளி... எப்போ எனக்குப் பட்டாபிஷேகம்?’ என்று, குமாரசாமியைக் கேட்க ஆரம்பித்தார் எடியூரப்பா. அப்போதுதான், குமாரசாமிக்கு உள்ளிருந்த குயுக்திசாமி வெளியே வந்தான். ‘எந்தப் பட்டாபிஷேகம் பங்கு...’ என்று திருப்பிக் கேட்டார் குமாரசாமி. எடியூரப்பா தலையில் இடியிறங்கியது. ‘எந்தப் பட்டாபிஷேகமா... இருபது மாசம் நீ, இருபது மாசம் நான்னுதானேடா பேச்சு’ என்று கலங்கினார் எடியூரப்பா. குமாரசாமி மீண்டும் ‘எந்த இருபது மாசம்...’ என்று ஆரம்பிக்க, எடியூரப்பாவுக்கு எல்லாம் புரிந்தது. ‘எனக்கே விபூதியா’ என்று, வீறுகொண்டு எழுந்தார் மனிதர். அடுத்த நாளே அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். குமாரசாமி ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

அடுத்து வந்த தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனார் எடியூரப்பா. பதவியேற்பு விழாவுக்கு அப்புறம், ‘ஜெயிச்சு முதல்வாராகி இருக்கேன் நான்...’ என்று அவர் கொடுத்த பேட்டி அட்டகாசம். அதுவும் அந்த ‘ஜெயிச்சு...’ என்ற வார்த்தை, குமாரசாமிக்குக் கொடுக்கப்பட்ட ஊமைக்குத்து. ஆனால், விதி வித்தியாசமானது அல்லவா? வந்த புறாவை வறுத்துத் தின்ன இம்சை அரசனைப்போல, வாய்த்த பதவியைப் பணத்தாசைக்குக் காவு கொடுத்தார் எடியூரப்பா. மீண்டும் நிலையில்லா அரசு, நிம்மதியில்லா மக்கள்! இங்கே, எவரும் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடைய வேண்டியதில்லை. ஏனென்றால், கம்பிநீட்டல்களும் காட்டிக் கொடுத்தல்களும் கர்நாடக அரசியலில் சர்வ சாதாரணம். அங்கே, பைப்பைத் திறந்தால் துரோகம் கொட்டும், பேனை போட்டால் குரோதம் வீசும்! கடந்த 30 ஆண்டுகளில் முழு ஆட்சிக்காலத்தையும் முடித்த ஒரே முதலமைச்சர் சித்தராமையா மட்டுமே என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அட, அவருமே கட்சித் தாவலில் டாக்டரேட் முடித்தவர்தான்! ஆரம்பத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்தார். அப்புறம் காங்கிரஸுக்கு வந்து முதலமைச்சராக உயர்ந்துவிட்டார். என்ன செய்வது... கர்நாடக அரசியலில் திரும்பிய பக்கமெல்லாம் ’திருநாவுக்கரசர்’களாகவே இருக்கிறார்கள்!

இன்றைய நிலைக்கு வருவோம். உண்மையில், கூட்டணி ஆட்சி அமைப்பதில் தேவ கவுடாவுக்கு விருப்பமே இல்லையாம். யார் சொன்னார்கள் என்று கேட்காதீர்கள், அவரே சொன்னது இது. தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள், குலாம் நபி ஆசாத்தும் அசோக் கெலாட்டும் பெங்களூரு வந்து அவரைச் சந்தித்திருக்கிறார்கள். `அனைத்தையும் மறப்போம். கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால், தேவ கவுடாவுக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. அவர், அதைத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். அதாவது, `இது சரிவராது. ஏற்கெனவே கூட்டணி ஆட்சியின் விபரீதங்களை நான் அனுபவித்திருக்கிறேன்’ என்று சொன்னாராம். பத்தே மாதங்களில் பிரதமர் பதவியைப் பறிகொடுத்தவர் அல்லவா? அனுபவம் பேசி இருக்கிறது. ஆனால், ‘பா.ஜ.க-வைத் தடுப்பதற்கு நமக்கு வேறு வழியில்லை’ என்று பாயின்ட் பேசியிருக்கிறார் ஆசாத்.

கண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்!

தேவ கவுடா அதற்கு என்ன சொன்னாராம்? அவரே சொல்கிறார், ‘நான் சொன்னேன். மல்லிகார்ஜுனா கார்கேவை முதல்வராக்குவோம். மூத்த தலைவர், அரசியல் அனுபவம் கொண்டவர். அவரை நியமித்தால் ஆட்சி சுமுகமாகச் செல்லும். ஆனால், காங்கிரஸ் அதைக் கேட்கவில்லை.’ இது முக்கியமானது! `கட்சியின் மாநிலத் தலைவர்கள் வளர்வது எப்போதுமே காங்கிரஸ் தலைமைக்குப் பிடிக்காது’ என்று ஒரு குற்றச்சாட்டு பல வருடங்களாகச் சுற்றலில் இருக்கிறது. இதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது, தேவ கவுடாவின் கருத்து. இது உண்மையாக இருக்குமானால், காங்கிரஸுக்கு விடியவே போவதில்லை. அவர்களுக்குச் சட்டைப்பையில் இருக்கும் சனி வேறு யாருமல்ல, அவர்களின் தலைமைதான்! இப்படித்தான், ஆந்திரத்தையும் கோட்டைவிட்டார்கள். இப்போது, கர்நாடகத்திலும் அதையே தொடர்கிறார்கள்.

அடுத்தென்ன ஆகப்போகிறது? ’கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்தியது நாங்கள் அல்ல. அவர்கள்தான்’ என்று பேசி வருகிறார் தேவ கவுடா. அதாவது, ‘கேட்டது நீங்கள். அதனால், அனுசரித்துப் போக வேண்டியதும் நீங்கள்தான்’ என்பதைத்தான் வேறுமாதிரி சொல்கிறார். ஆனால், பதவி முதல் பணம் வரை எதிலும் சமரசம் செய்துகொள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாராக இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்குக் காங்கிரஸ் தலைமைக்கும் வலு இல்லை. இன்னொரு பக்கம், அடிபட்ட புலியென எடியூரப்பா கண்ணிவைத்து காத்திருக்கிறார். ‘ஏற்கெனவே எங்களிடம் 105 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். எதிர்த்தரப்பில் 20 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். கூட்டிக்கழித்துப் பாருங்கள்... கணக்கு கரெக்டாக வரும்’ என்று பேசி வருகிறார் அவர். அதோடு விட்டாரா? ‘உங்களால் ஆட்சி நடத்த முடியவில்லை என்றால், விலகுங்கள்’ என்றும் ஓங்கியடித்து வருகிறார்.

காங்கிரஸ் தலைமை, இனிமேலேனும் சுதாரிப்பது நல்லது. இல்லையென்றால், அவர்களுக்குக் கர்நாடகமும் அவுட்!

Vikatan