Published:Updated:

பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

தினேஷ் ராமையா
பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் ஒருவார காலமாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற மருத்துவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று மேற்குவங்க மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது சயத் என்ற முதியவர், கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியமே அதற்குக் காரணம் என்று கூறி, ஜூனியர் மருத்துவர்கள் இருவர்மீது, அவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மேற்குவங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதனால், நோயாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், வேலைநிறுத்தத்தைக் கைவிடக் கோரி, மருத்துவர்களிடம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கடந்த வியாழக்கிழமை பேசிய மம்தா, `மதியம் 3 மணிக்குள் பணிக்கு வர வேண்டும்' என கெடு விதித்தார். ஆனால், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்றிட வேண்டும் என்று கூறி மம்தாவின் அழைப்பை அவர்கள் நிராகரித்தனர். மேலும், மேற்குவங்க மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர். 

பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

அதேபோல், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கமும் களமிறங்கியது. பணியிடத்தில் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் அம்மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது, ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தைச் சேர்ந்த 2 ஊடகங்களுக்கு மட்டும் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது. 

பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

Photo Credit: ANI

இந்தப் பேச்சுவார்த்தையில், மருத்துவர்கள் தரப்பில் 31 பேரும் அரசு தரப்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை தலைவர், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், 'மருத்துவர்களுக்கு பணியிடங்களில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்' என்று மம்தா உறுதியளித்தார். மேலும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், மருத்துவர்களின் குறைகளைப் போக்க குறைதீர் மையம் புதிதாக அமைக்க கொல்கத்தா கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார். அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட எந்த மருத்துவர் மீதும் வழக்குகள் பதியப்படவில்லை என்றும் மருத்துவர்கள் பிரதிநிதிகளிடம் மம்தா உறுதியளித்தார்.

பாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

Photo Credit: Twitter/@drarunangshu 

என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 5 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த மம்தா, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மம்தா பானர்ஜியுடனான சந்திப்புக்குப் பின்னர், தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டத்தைத் திரும்பப் பெற மேற்குவங்க மருத்துவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் அரசிடம் உறுதியளித்திருக்கிறார்கள்.
 

Vikatan