Published:Updated:

`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி!

மலையரசு
`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி!
`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி!

தந்தை இல்லாததுக்காக 2-ம் வகுப்பு மாணவனுக்குப் பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி!

மகாராஷ்ட்ரா மாநிலம் வாஷி பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா மோஹிட். கணவர் இறந்த நிலையில் இவரின் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துள்ளார். இரண்டாம் வகுப்பில் சேர்ப்பதற்காக வாஷியில் உள்ள லாரன்ஸ் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு தந்தை இல்லாந்துக்காக அவரின் மகனுக்கு அட்மிஷன் கொடுக்க மறுத்துள்ளார் அந்தப் பள்ளியில் பிரின்சிபல் கென்னடி. இதைச் சுஜாதா வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட வைரலானது. அந்த வீடியோவில், ``தந்தை இல்லாத குழந்தைகளை சமாளிப்பது கடினம். அதனால் அவர்களுக்கு அட்மிஷன் கொடுக்க மாட்டோம்" எனக் கூற சுஜாதா, ``ஒருவேளை பெற்றோர்கள் அட்மிஷன் வாங்கிய பிறகு விவாகரத்து செய்தால் என்ன செய்வீர்கள்" எனக் கேட்க, ``அது துரதிர்ஷ்டம். அப்படி நடந்தால் அந்தக் குழந்தையின் சேர்க்கை ரத்து செய்யப்படும்" எனப் பதிலளித்தார். இவர்களின் காரசார விவாதம் வலைதளங்களில் வைரலாக, பள்ளிக்கு எதிராகக் கடும் கண்டங்கள் எழுந்தன. 

``என் குழந்தை வேறு ஒரு பள்ளியில் படித்தான். ஆனால், வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அவனுக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. அதனால் இந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என முடிவு செய்தேன். முதலில் பள்ளிக்கு போன் செய்து விசாரித்துவிட்டே வந்தேன். ஆனால், அட்மிஷன் முடிந்துவிட்டது என்றார்கள். பின்பு சிறிது நாள்கள் கழித்து வேறு நம்பரில் இருந்து போன் செய்து சீட் இருக்கிறது வாருங்கள் என்றார்கள். ஆனால், இங்கு வந்தபிறகுதான் தந்தை இல்லை எனக் கூறி அட்மிஷன் கொடுக்க மறுக்கிறார் பள்ளியின் பிரின்சிபால். அதனால் வீடியோ ரெக்கார்ட் செய்தேன்" எனக் கூறியுள்ளார். 

கடுமையான கண்டனங்கள் எழ, பள்ளி தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், ``ஒரு கல்வி நிறுவனம் என்ற வகையில், எந்தவொரு மாணவருக்கும் நாங்கள் பாகுபாடு காட்டவில்லை. இதுபோன்ற எந்தவொரு கொள்கையும் எங்களிடம் இல்லை. இந்த வீடியோ இப்போது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளதால், நாங்கள் இந்த பிரச்னையை விசாரித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறப்பட்டுள்ளது.

Vikatan