Published:Updated:

`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn

பிரேம் குமார் எஸ்.கே.

"குடிமைப் பணி நாம் நினைப்பதுபோல் சிரமம் கிடையாது. பள்ளி முதல் முறையான திட்டமிடுதலுடன் படித்தால் எளிதாக எதிர்கொள்ளலாம்" என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார். 

`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn
`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn

சாலையில் செல்லும் 10 மாணவர்களை நிறுத்தி, `நீ என்ன படிக்க ஆசைப்படுகிறாய்?’ எனக் கேட்டால், மூன்று அல்லது நான்கு பேர் சொல்லும் பதில் `நான் கலெக்டராக ஆசைப்படுகிறேன்’ என்பதுதான். அடுத்தடுத்த காலகட்டங்களில் இந்தக் கனவு கலைந்து, வேறுவேறு திசைகளில் பயணிக்கும். ஆனாலும், சிலர் மட்டும் பள்ளிக் காலம்தொட்டே, இந்திய ஆட்சிப் பணி மீது நாட்டம் கொண்டு அதற்காகவே தயாராகி வருவார்கள்.

`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn

பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை ஒரு ஆட்சியர் பணியில் பார்க்க ஆசைப்படுவார்கள். ஆனால், எப்படி அதற்குத் தயார் செய்வது என்று, பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். இந்திய குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராவது எப்படி... கல்லூரிகளில் எந்தப் படிப்பு படித்தால் குடிமைப் பணி தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படலாம். குடிமைப் பணியில் மொத்தம் எத்தனை தேர்வுகள் இருக்கின்றன... எத்தனை வயதுவரை எழுதலாம், எத்தனை முறை எழுதலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழும். இந்தக் கேள்விகளைக் ஐ.ஆர்.ஸ் பூ.கொ.சரவணனிடம் முன்வைத்தோம். 

`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn

"குடிமைப் பணி நாம் நினைப்பதுபோல் சிரமம் கிடையாது. பள்ளியிலிருந்தே முறையாகத் திட்டமிட்டுப் படித்தால் எளிதாக எதிர்கொள்ளலாம்" என்று நம்பிக்கையுடன் தொடங்கினார். 

"குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ள, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் எந்தப் பாட பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்?"

"என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும். இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தால் குடிமைப் பணி தேர்வில் சிறப்பாகச் செயல்படலாம் என்றோ, இந்தப் பாடப் பிரிவில் படிக்கும்போது அதிலிருந்து குடிமைப் பணி தேர்வில் அதிக கேள்விகள் கேட்கப்படும் என்றோ கிடையாது. கடந்த சில தேர்வுகளின் கேள்விகளைப் பார்த்திருக்கிறேன் எனும் அடிப்படையில் சொல்கிறேன், தினசரி செய்தித்தாள்களில் வரும் செய்திகளிலிருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படும். மேலும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டும் என்றும் கருத வேண்டியதில்லை. எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்குச் செய்தித்தாள்கள் படிப்பதே முக்கியமானது. குடிமைப் பணித் தேர்வில் ஒவ்வோர் ஆண்டும் 800 முதல் 900 வரைதான் தேர்வாகிறார்கள். மீதம் இருக்கும் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையைப் பொருளியல் ரீதியாகக் கட்டமைக்க வேண்டியதும் அவசியம். அதனால், அதற்கேற்ப படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்." 

`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn

"குடிமைப் பணி தேர்வு எழுத விரும்புபவர்கள் கல்லூரிக் காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?"

"முன்கூட்டியே பயிற்சிக்குப் போக வேண்டுமா எனக் கேட்கிறார்கள். அப்படிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தினசரி செய்தித்தாள்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். செய்தித்தாள்களில் பெரும்பாலும் விளையாட்டு மற்றும் சினிமா செய்திகளை மட்டும் படிக்காமல், அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வது மிக அவசியம். படிக்கும்போதே தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் படியுங்கள். முதலில் சிரமமாக இருக்கும். உங்களுக்கு எழும் சந்தேகங்களை கூகுள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். நாள்கள் செல்ல செல்ல எளிதாகப் புரிந்துகொள்ள முடியும், பொறுமையாகப் படியுங்கள். செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் செய்திகள்தான் குடிமைப் பணி தேர்வில் பெரும்பான்மையான கேள்விகளாகக் கேட்கப்படும். இதுதவிர, அடிப்படையான விஷயங்களைப் புரிந்துகொள்ள NCERT-யின் (National Council of Educational Research and Training) பாடநூல்களைப் படிக்க வேண்டும். குறிப்பாக அறிவியல், சமூக அறிவியல், புவியியல் ஆகிய பாடப் பிரிவுகளைப் படிக்க வேண்டும். கல்லூரிக் காலத்தில் இதுவே போதுமானது. 6-ம் வகுப்பு முதல் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டும். அதுவே அடிப்படையான விஷயம். கல்லூரிக் காலத்தில் குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ள இதுவே போதும்."

"கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது?"

"குடிமைப் பணி தேர்வைப் பொறுத்தவரை 3 கட்டங்கள் இருக்கின்றன. முதலில் ஆரம்பகட்ட தேர்வு. அடுத்து 9 தாள்களைக் கொண்ட முதன்மைத் தேர்வு. மூன்றாவதாக நேர்முகத் தேர்வு. இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் இருக்கும் கீவேர்ட்ஸைக் குறித்து வைத்துக்கொண்டு, அது தொடர்பான செய்திகளில் கவனம்செலுத்த வேண்டும். பின்னர், கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகளின் மூலம் எப்படி எல்லாம் நமது திறனைச் சோதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பின் நம்மையும் அதற்குத் தகுந்தபடித் தயார் செய்துகொள்ளலாம். இது தொடர்பான பாட நூல்கள் எல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. அதனால், இதைப் பணம் செலவு செய்து வாங்க வேண்டும் என்றும் இல்லை. 

`யூ.பி.எஸ்.சி. தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்!’ – பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.  #Letslearn

பலருக்கு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுதான் படிக்க வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழக அரசு, அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் என்ற மையத்தின் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு ஒரு நுழைவுத் தேர்வு இருக்கிறது. இதில் தேர்வாக செய்தித்தாள்கள் மற்றும் NCERT-யின் பாடங்களை முறையாகப் படித்தாலே போதுமானது. ஆரம்பகட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை வைத்து, முதன்மைத் தேர்வுக்கு இங்கு இலவசமாகப் படிக்கலாம். தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்றும் எழுதலாம். பல பயிற்சி நிறுவனங்கள் தங்களிடம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிச் சொல்லுவார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டும்."  
 

"குடிமைப் பணி தேர்வுகளை எப்போது முதல் எழுதலாம்... எப்போது வரை எழுதலாம்?"

"அரசு அங்கீகரித்த ஓர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அது தொலைதூர கல்வி மூலம் பெற்ற பட்டமாகக்கூட இருக்கலாம். நீங்கள் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றால் 6 முறை எழுதலாம்.  32 வயது வயது வரை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்டவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் உங்களுக்கு 9 வாய்ப்புகள் வழங்கப்படும், இதை 35 வயது வயது வரை எழுதலாம். பட்டியல் இனம் அல்லது பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றால்  37 வயது வரை எழுதலாம். இந்த வயதுக்குள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் எழுதலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரை வாய்ப்பு வழங்கப்படும். 

இந்தத் தேர்வில் முக்கியமானது தொடர்ந்து முயற்சி செய்வதுதான். தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல. தொடர்ந்து  முயற்சி செய்து குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்கிறார்.

மேலும், தமிழ்வழியில் குடிமைப் பணிகள் தேர்வு எழுத எப்படித் தயாராவது? பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு உதவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு வீடியோவில் விரிவாகப் பதிலளிக்கிறார் பூ.கொ.சரவணன். 

Vikatan