Published:Updated:

வீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்!

ராம் பிரசாத்
வீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்!
வீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்!
வீரமரணமடைந்த சகவீரரின் தங்கை திருமணம் - சகோதர பொறுப்பை ஏற்ற விமானப்படை வீரர்கள்!


பீகாரைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரரான ஜோதி பிரகாஷ் நிராலா கடந்த 2017-ம் ஆண்டு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்தார்.  தன்னுடன் பணியாற்றும் சகவீரர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இவர் உயிரிழந்தார். இவரது தியாகத்தை போற்றும் விதமாக மத்திய அரசு அசோக சக்ரா விருது வழங்கிக் கவுரவித்தது. குடியரசு தின விழாவில் அவரின் தாய் மற்றும் மனைவியிடம் விருது அளிக்கப்பட்டது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு மூன்று சகோதரிகள். அவரது மறைவையடுத்து குடும்பம் வறுமையில் தவித்து வந்துள்ளது. இந்த நிலையில்தான் அவரின் மூன்றாவது சகோதரி ஷாஷிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  நிராலாவின் தந்தை திருமண அழைப்பிதழை ஏர் சீப் மார்ஷல் மற்றும் அவர் பணிபுரிந்த யூனிட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
 
ராணுவத்தில் பணியாற்றும் 50 கமாண்டோக்கள் திருமணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பாக வந்துள்ளனர். திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் முன்னின்று செய்துள்ளனர். மேலும், தங்கள் தரப்பில் இருந்து 5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். இந்த திருமணத்தில் ஷாஷிகலாவுக்கு சகோதரன் என்ற முறையில் அனைத்து சடங்குகளையும் செய்துள்ளனர். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கமோண்டோ வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். 

இதுகுறித்து பேசிய ஷாஷிகலா, ``எனது சகோதரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நிராலாவின் பெற்றோர்கள்,  ``நாங்கள் எங்களின் ஒரு மகனை இழந்துவிட்டோம். இப்போது எங்களுக்கு 50 மகன்கள் கிடைத்துள்ளனர். இந்த மகன்கள் எங்கள் மீது அன்பு வைத்துள்ளனர். ஒட்டுமொத்த தேசமும் எங்களுடன் இருப்பதாக உணர்கிறோம். அந்தக் குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்'' என்றனர்.
 

Vikatan