Published:Updated:

மம்முட்டி மகன் துல்கர் தெரியும்... மம்முட்டி மகளைத் தெரியுமா?

விகடன் விமர்சனக்குழு
மம்முட்டி மகன் துல்கர் தெரியும்... மம்முட்டி மகளைத் தெரியுமா?
மம்முட்டி மகன் துல்கர் தெரியும்... மம்முட்டி மகளைத் தெரியுமா?

நடிகர் மம்முட்டியை பொறுத்தவரை நடிப்பைத் தாண்டி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருபவர். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்றே மம்முட்டி ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையும் நடந்து வருகிறது. குழந்தைகள் தொடர்பான விழாக்களில் பங்கேற்க மம்முட்டி எந்த சம்பளமும் பெறுவது கிடையாது. இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதி திரட்டியும் வருகிறார். 

மொழிகளைக் கடந்த பெருங்கலைஞன் மம்முட்டி. சென்னை பெருவள்ளத்தின்போது கூட, ஃபேஸ்புக்கில் பல்வேறு தகவல்களை மம்முட்டி தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ''சென்னையில் தவிக்கும் மக்கள் எனது வீட்டில் வந்து தங்கிக் கொள்ளாலாம். எப்போதும் எனது வீட்டு கதவு திறந்தே இருக்கிறது'' என அப்போது மம்முட்டி கூறியதும் நினைவு கொள்ளத்தக்கது. ஜல்லிகட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவுக்குக் குரல் கொடுத்திருந்தார். மலையாளத்தில் பிசியாக இருந்தாலும் தமிழிலும் அவ்வப்போது மம்முட்டி தலை காட்டுவது வழக்கம். 'தளபதி' திரைப்படம் அதில் முக்கியமானது. பொதுவாகவே மலையாள நடிகர்களை தமிழ் ரசிகர்களுக்கு இயல்பாகவே பிடித்து விடும். தாம் தூம்  என்ற நடிகர்களுக்கு மத்தியில் இயல்பான நடிப்பால் மக்களை கவர்ந்து விடுவார்கள்.. அது மம்முட்டியாக இருந்தாலும் சரி. மோகன்லாலாக இருந்தாலும் சரி. எந்தவிதமான அலட்டல் இல்லாத நடிப்பை அவர்களிடம் காணமுடியும். தமிழகத்தை பொறுத்தவரை மம்முட்டியும் ரொம்பவே பாப்புலர்தான். மம்முட்டி மகனான,  துல்கருக்கும் தமிழில் ரசிகர்கள் உண்டு. எல்லாம் சரி.... ஆனால், சுருமியைத் தெரியுமா? 

தந்தையும், தம்பியும் தென்னிந்தியத் திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள். சூரியனின்  வெளிச்சத்திற்கு ஓர் ஈர்ப்பென்றால், நிலா மட்டும் என்ன குறைந்ததா? அதுபோலத்தான் சுருமி.  சுருமியும் ஒரு படைப்பாளிதான். அவரது களமே வேறு. சுருமி மிகச்சிறந்த ஓவியர். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் அலாதி ஈடுபாடு. ஓவியம்  படைப்பதுதான் மகளின் ஆர்வம் என்பதால் மம்முட்டியும் 'என்ஜீனியரிங் படி, மெடிக்கல் படி ' என்று மகளை வற்புறுத்தவில்லை.

மகளின் போக்கிலேயே விட்டு விட்டார். வெளிநாடுகளுக்கு படபிடிப்புக்கு சென்றால், அங்கு ஓவியம் வரைவதற்கு ஏற்ற புதிய விஷயங்கள்  என்னவெல்லாம் சந்தைக்கு வந்திருக்கிறதோ... அதனையெல்லாம் வாங்கி வந்து மகளை உற்சாகப்படுத்துவார். மம்முட்டியின் படத் தயாரிப்பு நிறுவனமான 'பிளேஹவுஸ் ரிலீஸ்' லோகோ வரைந்ததும் சுருமிதான். 

சுருமியின் ஓவியத் திறமையால், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் ஓவியக் கல்லுரியில் படிக்க இடம் கிடைத்தது. சென்னையில் பட்டம் பெற்ற பிறகு லண்டன் செல்சி ஓவியக் கல்லூரியில்  மேற்படிப்புக்கு சென்றார். சுருமிக்கு கடந்த 2004ம் ஆண்டு  திருமணம் நடந்தது.  கணவர் ரேஹான் சயீத். மதர் ஹீட் என்ற மருத்துவமனையின் தலைவர். கணவரும் இவரது ஓவியத் திறமையை அறிந்து ஊக்கப்படுத்த  இப்போது இந்தியா முழுவதும் பல நகரங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளார் சுருமி திட்டமிட்டுள்ளார்.

 மம்முட்டி, சுருமி, சயீத் ஆகியோர் இணைந்து 'வாஸ்'  என்ற பெயரில் அறக்கட்டளை  நடத்துகின்றனர். ஓவியக் கண்காட்சியில் இருந்து கிடைக்கும் நிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க வழியில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியாகப் பயன்படப் போகிறது. 

''தந்தை, அம்மா, தம்பி ஆகியோர் அளித்த உற்சாகத்தினால்தான் இப்போது நானும் ஒரு ஓவியராகியிருக்கிறேன். அப்பாவையும், தம்பியையும் தாண்டி, என் ஓவியங்கள் மூலமாக நானும் தனியே வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறேன்'' சிரித்துக்கொண்டே சொல்கிறார் சுருமி.

- எம். குமரேசன்